என் இரண்டாம் மகனின் ஜாதகம் இது. நான் என் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன். மகனுக்கு சில ஆண்டுகளாக மனச்சிதைவு நோய் உள்ளது. மருந்துகள் கொடுத்து தற்சமயம் ஓரளவு நலமாக இருக்கிறார். படிப்பைத் தொடர முடியாமல் இறுதியாண்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். படிப்பை முடித்து வேலைக்கு எப்பொழுது செல்வார்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?
-வாசகி, சென்னை.
உங்கள் இரண்டாம் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி குரு பகவான் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று, ஐந்தாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார்.
பூர்வ புண்ணியாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில், குடும்ப தைரியாதிபதியான சனி பகவானுடனும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டுக்கதிபதி மற்றும் லாபாதிபதியான உச்சம் பெற்ற சுக்கிர பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் நடக்கும் சுக்கிர பகவானின் தசை இன்னும் நான்கு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அதற்குப் பிறகு தொடரும் சூரிய மஹா தசையில் இருந்து அவரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகத் தொடங்கும். மன நோயிலிருந்து மீண்டு வந்துவிடுவார். படிப்பையும் நல்லபடியாக முடித்துவிட்டு, வேலைக்கும் செல்லத் தொடங்குவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.