கல்வியை வழங்குவதில் கிரகங்களின் நிலை!

கல்வி சம்பாதிப்பதற்கு உதவுமா என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
Published on
Updated on
3 min read

ஒரு ஜாதகத்தில், இதர கிரகங்களை விட அதிக பலம் பெற்ற கிரகமே வழி நடத்தும். இப்படி அதிக வலுப்பெற்ற கிரகத்தினை தேர்ந்தெடுத்துப் பயில்வது அதிக சம்பாத்தியத்தைத் தரும்.

அதிக வலு என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு ஜாதகத்திலும், பல்வேறு காரணிகளை ஆராய வேண்டி இருக்கும். பொதுவாக ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், அதிக பாகை பெற்ற கிரகம் போன்றவற்றைக் கூறலாம். ஆனால், புதனோடு இணைந்த கிரகங்களின் கல்வியைப் பயில அது சிறப்பாக ஜாதகருக்கு புரியும் விதத்தில் இருக்கும். ஆனால் அப்படிப் படிக்கும் கல்வியால் சம்பாதிப்பதற்கு உதவுமா என்று காண சனியின் தொடர்பைக் காணுதல் அவசியம். இதைத் தவிர ஒருவரின் மன ஓட்டத்தை அறிய சந்திரனின் நிலையைப் பிரதானமாகக் கொண்டு அறிதல் அவசியமாகிறது. உயர்கல்வி பற்றி அறிய பூர்வபுண்ய ஸ்தானமான 5ஆம் இடத்தையும் ஆராய்தல் அவசியம். சமூக அங்கீகாரம் கிடைக்க ஒருவர் 9ஆம் இடத்தின் நிலையைப் பற்றி அறிய வேண்டியுள்ளது. இதுவே எதிர்காலத்தைப் பற்றி நன்கு கூறும்.

ஜாதக அமைப்பும் கல்வியும்

பொதுவாக லக்கினமும் லக்கின அதிபதியும் சுபமாக அமைந்துவிட்டால், ஒரு ஜாதகர் எந்த துறையிலும் சிறப்பாக இருக்க முடியும். தெரியாத துறையாக இருப்பினும் அதில் கைதேர்ந்தவராக முடியும்.

பள்ளிக்கல்வியும், தாய் மொழிக்கல்வியும் ஒருவருக்கு அவரின் ஜாதகத்தில் 2ஆம் இடம் நன்றாக இருப்பின் அவரால் ஆரம்பக்கல்வியைச் சிறப்பாக ஆக்கிக்கொள்ள முடியும். இதற்கு பூர்வபுண்ணிய இடம் எனும் 5 ஆம் இடமும் கல்வியை தடையின்றி எடுத்துச் செல்ல அவரின் குடும்ப சூழல் அமையும். 7ஆம் இடம் கெட்டுவிட்டால் கல்வியைச் சொல்லித் தர சரியான ஆசான்களோ அல்லது நல்ல கல்வி நிறுவனமோ கிடைக்காமல் போக வாய்ப்பு. 9ஆம் இடம் கல்லூரி போன்ற உயர் கல்வி. 11ஆம் இடம் கற்ற கல்வியில் ஆராய்ச்சி போன்ற அதிகபட்ச உயர்நிலை கல்வி. இதோடு 8ஆம் இடமும் அதன் நேர் எதிர் பாவமான 2ஆம் இடமும், ஆராய்ச்சி மனோபாவத்தைக் கூறுவதாக இருக்கும். பொதுவாக ஆராய்ச்சிக்கு காரகர், செவ்வாய்க் கிரகமாகும். எவர் ஜாதகத்தில், 2, 8 பாவகங்கள் கெட்டு, செவ்வாய்க் கிரகமும் வலுவிழந்து இருந்தால், அவருக்கு ஆராய்ச்சி மனோபாவமே இருக்காது. 12ஆம் இடம் வெளிநாட்டுக் கல்வியைக் குறிப்பதாகும். மதக் கல்வியை கடகம், விருச்சிகம், மீனம் போன்ற நீர் ராசிகளும், பாவங்களில் 4, 8, 12 ம் தீர்மானிக்கும்.

உயர் கல்வியைப் பற்றி மிகச் சிறப்பாக அறிய வர்க்க சக்கரங்களில் சதுர்விம்சம்சம் எனும் D -24 சக்கரம் ஆராய்ந்து அறிய உதவும். ஒருவர் கற்ற கல்வி சம்பாத்தியத்திற்கு உதவுமா என அறிய வர்க்க சக்கரங்களில் தசாம்சம் எனும் D - 10 சக்கரம் ஆராய்ந்து அறிய உதவும்.

கல்வியை வழங்குவதில் கிரகங்களின் நிலை

வித்யாகாரகர் எனும் புதனின் நிலையும், சந்திரன் எனும் மனோகாரகரின் நிலையும் தான் ஒருவரின் கற்பிக்கும் நிலையையும் கிரகிக்கும் நிலையையும் தெரிவுபடுத்தும். புதன், சந்திரன் இவ்விரு கிரகங்களின் வலிமை குன்றி இருப்பின் அவரால் அனுபவக் கல்வியால்தான் வாழ்வில் முன்னேற முடியுமே தவிர கற்ற கல்வியால் நிச்சயம் முன்னேற இயலாது. நெருப்பு ராசியின் அதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு இவர்களின் நல்ல நிலையைக் கொண்டுள்ள ஜாதகரால் தான் ஒரு ஜாதகர் தான் கற்ற கல்வியால் சமூகத்தில் மதிக்கத்தக்க வாழ்வு வாழ முடியும். வக்கிர கிரகங்கள் அதீத அறிவை தந்தாலும், ஒருவர் தான் கற்ற கல்வி அறிவை விட சுய ஞானத்தால் தான் அவரை முன்னேற வைக்கின்றன. கல்விக்குரிய பாவகங்களுக்கு ராகு, கேது மற்றும் கடுமையான பாவிகள் தொடர்பு ஏற்படின், கல்வி நிச்சயம் தடைப்படும்.

அதேசமயம் அந்த தடையை செய்யும் கிரகங்களின் காரக கல்வியைத் தடை செய்யாது.

ஜாதகத்தில், லக்கினாதிபதி சூரியன், அதிக பாகை பெற்று உச்சம் பெற்ற புதனுடன் சிறப்பாக அமர்ந்துள்ளார். 9ஆம் அதிபதியான உச்சம் பெற்று செவ்வாய் ராகுவுடன் அமர்ந்துள்ளதால் பாதிக்கப்பட்டு 6ஆம் இடத்தில் மறைந்துள்ளார். ஆனால் இந்த 6ஆம் இடம் 9ஆம் இடம் தரும் பாதகாதிபதி பாதிப்பிலிருந்து மீண்டு விடுவார். 2,3,4,5,9,11 ஆம் பாவகங்கள் சுபக்கிரக தொடர்பில் இருக்கின்றன. 9ஆம் இடம் மட்டும் ராகுவுடன் இணைந்த செவ்வாயின் பார்வையில் (4) உள்ளது. செவ்வாய், ராகு இணைவது ராகுவின் தொடர்புடைய கல்விக்கு சிறப்பு தரும். செவ்வாயின் காரக கல்வி சிறப்பு தராது. செவ்வாய், ராகு இருவரின் பொதுவான கல்வி கற்றால், ராகு, செவ்வாய் இருவருமே இணைந்து ஜாதகரை உயர்த்துவர்.

மேற்கூறிய பெண் ஜாதகத்தை இப்போது காணும்போது, துலா லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே அமர்ந்து மாளவ்ய யோகமும், 7ஆம் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்ததால் பிருகு மங்கள யோகத்தையும் பெறுகிறார். ஆனால், குடும்ப பாவகம் எனும் இராண்டாம் இடம் பாதகாதிபதியான சூரியனுடன், நீச்ச சந்திரன் அமர்ந்துள்ளதால் இந்த குடும்ப பாவகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

9,12 க்கு அதிபதியான புதன் பகை வீடான செவ்வாய் வீட்டில் இருப்பது மிகவும் பாதகமே. இப்படி கடுமையாக பாதிக்கப்பட்ட வீட்டை நோக்கி ராகு வருவது குடும்பத்தில் ஏற்படும் அதிகமான பாதிப்பால் ஜாதகியால் அடிப்படை கல்வியே கிடைப்பதில் சிரமம் உள்ளதை அறிய முடிகிறது. வித்யா ஸ்தானாதிபதி சனி ஆனவர் 8ஆம் இடத்தில் மறைந்து 2ஆம் இடத்தை பார்ப்பதும் மேலும் கடுமையை கூட்டுகிறது.

2ல் அரசு கிரகம் சூரியனுடன், தாய் மொழி கிரகம் சந்திரன் நீச்சம் அடைந்து கல்வி காரகர் புதனுடன் இணைந்துள்ளதால், அரசுப் பள்ளியில் பணிபுரிந்த தமிழ் ஆசிரியரின் மகளாய் பிறந்தவர் ஜாதகி. பள்ளி காலத்தில் திடீர் என தந்தை மறைவால் ஜாதகி நிலை குலைந்தார். தாயாரும் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார். இப்படிபட்ட கல்வி சூழலில் ஜாதகி பள்ளி கல்வியில் தோல்வியுற்றார். ஆனால் லக்கினாதிபதி நன்கு அமைந்ததால், 7,9 ஆம் இடங்களுக்கு குரு பார்வை கிடைப்பதாலும், 7 ஆம் அதிபதி லக்கினத்தில் வந்து அமர்ந்து இருப்பதாலும், ஜாதகிக்கு கை கொடுக்க நல்ல தொடர்புகளும் , ஆசான்களும் அடைவார். எனவே, ஜாதகி குடும்ப பாதிப்புகளை மீறி உயர் கல்வி கற்பார் எனலாம். 

இது போலவே ஒவ்வொரு ஜோதிடரும் ஒரு ஜாதகரின் மேற்கல்வி கற்க இயலுமா என முதலில் ஆய்வு செய்து பின்னர் அந்த ஜாதகர் எந்த கல்வியை உயர் கல்விக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சதுர்விம்சாம்சம் எனும் D -24 சக்கரம் மூலம் அறிந்து பின்னர் அந்த ஜாதகருக்கு ஏற்ற சம்பாத்தியத்தை இந்த கல்வி தருமா என்பதனை D -10 எனும் தசாம்சத்தை ஆராய்ந்து பின்னர் உரைக்கவேண்டி வரும். மேற்கூறியது முதல் படி என்றால் இன்னும் இரு நிலைகளை அறிந்து ஆய்ந்து தான் உரைத்திட வேண்டும்.

வேறொரு கட்டுரையில், சதுர்விம்சாம்சம் D -24 பற்றி அறியும் நிலையையும், தசாம்சம் D - 10 பற்றி அறியும் நிலையையும் விரிவான விளக்கத்தினை அறியலாம்.

தொலைபேசி : 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com