எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் செய்யலாம்?

12 ராசிக்காரர்களும் கிரிவலம் செய்யவேண்டிய கிழமையும், பலன்களும்..
கிரிவலம் செல்லும் பக்தா்கள்.
கிரிவலம் செல்லும் பக்தா்கள்.Center-Center-Chennai
Published on
Updated on
4 min read

இறையருள் அதிகம் உள்ள இடம் என்றால் தெய்வம் குடிகொள்ளும் அமைதியான, இயற்கை வாசம் மிக்க பகுதியாகும்.

உலகையே காக்கும் நம் சிவபெருமான் பூமியின் உயரமான மலையான திருகைலாயத்தில் தவக்கோலத்தில் நமக்கு அருள்புரிகிறார். அந்த கையிலாய மலைக்கு அனைவராலும் எளிதாகச் சென்றுவிட முடியாது. கைலாச மலையில் சிவன் லிங்கமாகவும் திருவண்ணாமலையில் நம் எம்பெருமானும் தேவியாருடன் இணைந்து காட்சியளிக்கின்றார். அதற்கு ஏற்ப நம் புராணங்கள் “கயிலையைக் கண்டால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் மரணமடைந்தால் முக்தி, அருணாசலத்தை நினைத்தாலே முக்தி” என்று சொல்லப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட அடர்ந்த மரங்கள் சூழ்ந்த தெய்வீக மலையில் உள்ள ஈஸ்வரன், பெருமாள், மற்றும் கடவுளின் பல்வேறு அவதார ரூபங்களையும் சித்தர்களும், தேவர்களும் வலம் வந்து தரிசிப்பார்கள். சிவ தொண்டர்களும், முனிவர்களும் எங்கு வாசம் செய்கிறார்களோ அங்கு அதீத தெய்வீக ஆற்றல் உண்டு. அங்குச் சென்றாலே அந்த ஆற்றலை நம்மால் உணர முடியும்.

அந்த நேர்மறை சக்தியைப் பெற எந்த ராசிக்காரர்கள் எந்த நாள்களில் சென்று இறைவனைத் தரிசிப்பது சிறந்தது என்பதை தெரிந்து பயனடைய வேண்டும். நம்முடைய கடவுளைக் காண கால்நடையாக மலை ஏறியோ அல்லது மலையை வலம் வந்தோ கடவுளை வணங்குவது என்பது ஒவ்வொருவருக்கும் மன வலிமையுடன் கூடிய சக்தியையும் ஏற்படுத்தும். அதனால் தான் இன்றளவும் திருவண்ணாமலை, திருமலை, பழனி, மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை மாதம் ஒருமுறையேனும் தரிசிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக வசதி குறைவான அக்காலகட்டத்தில் பல மாநிலத்திலிருந்து வருடத்திற்கு ஓரிரு முறையாவது திருமலைக்கு நடந்தே சென்று, தங்களுடைய காணிக்கையைச் செலுத்துவார்கள். முக்கியமாக தெய்வீக சக்தி மிக்க மலைகளில், அந்த நேர்மறை சக்தியைப் பக்தர்களால் உணர முடிகிறது.

பௌர்ணமியில் மட்டும் தான் கிரிவலம் செய்ய வேண்டுமா?

பௌர்ணமி அன்று ஒளி தன்மை மிக்க கிரகங்களான சூரியனும் சந்திரனும் சம சப்தம பார்வை பார்க்கும் பொழுது ஒளிரும் தன்மை அதிகம் வெளிப்படும். இக்கால கட்டத்தில் கடவுளின் மந்திரத்தை உச்சரித்து, அமைதியான முறையில் தெய்வீக மலையைச் சுற்றுப்பொழுது நம் உடலில் உள்ள இருள் என்ற அசுப தன்மை அகற்றி நேர்மறை ஆற்றல் வெளிப்படும். இந்த தெய்வீக ஒளியானது சரியான பாதையைக் கண்ணுக்குப் புலப்படுத்தும்.

ஒருவரின் ராசி மற்றும் கிரகங்களின் வலுவின்மையால் அவரவர் கர்ம பலனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். கடவுளின் அருளால் அவரவர் கர்மாவின் பாதையைக் கடக்க முடியும். அதோடு நாம் செய்யும் செயலின் தொடர் முயற்சியும், கடவுளின் ஆசிர்வாதமும் வெற்றிக்கு வழிகாட்டும். ஒளி என்றதும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னியின் ரூபமான திருவண்ணாமலை கோயில் தான் நம் நினைவுக்கு வரும். இந்த நெருப்பு மலையில் சிவனுக்கு ஜோதி வழிபாடு மிகவும் சிறந்தது. அதனால் ஒளியின் தொடர்பு கொண்ட பௌர்ணமி, சித்திரை, மற்றும் கார்த்திகை மாதம் விசேஷமாகும். இங்கு சேஷாத்ரி சுவாமி, ரமணரும், விசிறி ஸ்வாமிகள், பல்வேறு சித்தர்கள் இந்த மலையில் வாசம் செய்கிறார்கள். சிவனை நோக்கி பல்வேறு தெய்வீக ஆற்றல்மிக்க முனிவர்கள் மற்றும் ஞானிகள் நம் கண்ணுக்குப் புலப்படாமல் நடந்து செல்லுவதாகக் கூறப்படுக்கிறது.

அருணகிரிநாதரின் வாழ்வில் ஒரு அருள் திருப்பமாக இக்கோயில் விளங்கியது. இந்த மலையின் சுற்றுப் பாதையில் கிரிவலம் சென்றால் இங்குள்ள பல்வேறு சித்தர்களின் ஆசிர்வாதம் மறைமுகமாகக் கிட்டும். “இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், தற்போது கலியுகத்தில் கல் மலையாக மாறி காட்சியளிக்கிறது என்று புராணங்கள் கூறுகின்றன”. வீட்டின் வாஸ்து குறைபாடு உள்ள அனைவரும் வழிப்படும் தெய்வம் திருவண்ணாமலை பாதையில் எட்டுத் திசைகளிலும் உள்ள எட்டு லிங்கத்தையும் மனதார வேண்டிக் கொண்டால் அவரவர் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீக்கப்படும். இங்கு 1008 லிங்கங்கள் புதைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

எல்லா தெய்வீக மலைக் கோயில்களுக்கும் கிரிவலம் செல்லலாம். கிரிவலம் என்றவுடன், முதலில் நமக்கு நினைவுக்கு வருவது அக்னி ரூபம் கொண்ட திருவண்ணாமலை. இதுதவிர சதுரகிரி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர், பர்வத மலை, திருக்கழுக்குன்றம், திருக்கச்சூர் மற்றும் குன்றக்குடி, திருக்குற்றாலம் எனப் பல தெய்வீக மலை ஸ்தலங்கள் உள்ளன. இந்த மலை வலம் வருவது புண்ணியத்தைத் தருவதுடன் மலைமீது இருக்கும் மூலிகைகளில் கலந்து வரும் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலனும் மேம்படுகிறது.

சென்னையில் உள்ள திருக்கச்சூர் மருத்துவ மலையில் வாசம் செய்யும் மருதீஸ்வரர், வைதீஸ்வர ஸ்வாமியாக அருள் பாலிக்கிறார். இங்கு இருக்கும் மண்ணையே மருந்தாக்கி மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த மலைப் பாதை வசதி மிகவும் குறைவாக உள்ளது. அதனால் இங்கு அனைவரும் செல்வது கொஞ்சம் கடினம். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நம்மால் முடிந்த அளவு நீராகாரம் மற்றும் அன்னதானம் என்று கொடுக்கும்பொழுது நம்மில் உள்ள கர்ம வினை சிறிது சிறிதாக அகலும்.

தெய்வீக நேர்மறை ஆற்றல் பெற எந்த நாள்களில் தரிசிக்க வேண்டும்?

கிரகங்களை வலுப்படுத்த, அவரவர் பலவீனம் மிக்க நட்சத்திரம், மற்றும் பிறந்த கிழமை நாளில் கிரிவலம் சென்று, நம்முடைய தெய்வத்தை வணங்கினால் நன்று. அனைவரும் ஒரே நாளில் கூட்டம் கூட்டமாகச் செல்வது நம் மனதில் ஸ்த்ர தன்மையும், மன அமைதியும் கொஞ்சம் குறைவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நமக்கு ஏற்றார் போலவும், அவரவர் நேரத்திற்கு ஏற்ப சரியான முறையில் கிரிவலம் சென்று கடவுளைத் தரிசித்தால் வெற்றி நிச்சயம். எல்லா ராசிக்காரர்கள் அவரவர் கிரகங்களைப் பலப்படுத்த மற்றும் அவரவர் பிரச்னையின் வழிக்கான தீர்வை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவரின் ராசியை பலப்படுத்த அவரவர் நட்சத்திர நாள்களில் அல்லது வலுகுன்றிய அசுப கிரகத்தின் நட்சத்திர சாராதிபதியின் கிழமையில் கிரிவலம் செல்வதும் நன்று. ஒருவரின் தலையெழுத்து அவரவர் ராசி, லக்கினம் பொருத்து அமையும். அவை பலவீனமாக இருந்தால் எந்த செயலிலும் முயற்சியிலும் வெற்றி அடைவது கடினம். அவரவர் ராசியைப் பலப்படுத்தச் சரியான நாள்களில் தெய்வீக மலையைச் சுற்ற வேண்டும்.

எந்த ராசிக்காரகளுக்கு எந்த கிழமை

சிம்மம் - ஞாயிறு

கடகம் - திங்கள்

மேஷம், விருச்சிகம் - செவ்வாய்

ரிஷபம், துலாம் - வெள்ளி

மிதுனம், கன்னி - புதன்

தனுசு, மீனம் - வியாழன்

மகரம், கும்பம் - சனிக்கிழமைகளில் மலை ஏறுவதும், கிரிவலம் செய்வதும் ராசியைப் பலப்படுத்தும்.

அதற்கு அடுத்து அவரவர் பிறந்த கிழமையில் கிரிவலம் சென்று கடவுளின் அருளோடு சக்தியைப் பெறலாம். ஒவ்வொரு கிழமைக்கும் ஒருவித சக்தி அடங்கியுள்ளது. கிரக தோஷத்தை அகற்ற அதற்கு ஏற்ற கிரகங்களின் கிழமைகளில் வலம் வருவது நன்று. இதனால் உடல், மனச்சோர்வு மற்றும் நீண்ட நாள் பிரச்னை தீர்க்கப்படும்.

எந்த கிழமையில் கிரிவலம் வந்தால் என்ன பலன்?

ஞாயிறு: பதவி உயர்வு பெற, அரசியல் /அரசு சார்ந்த அனுகூலம் கிட்ட, மரண பயம் விலக, தந்தை மற்றும் மூத்த மகன் சுபிக்க்ஷம் பெற, எலும்பு, இருதய நோய், உயிர் பாதிப்பு அகல, தந்தை வழி பொருளாதாரம் கிட்ட, சிவலோக பதவி முக்தி பெற.

திங்கள்: சந்திரன் வலுப் பெற, தாயின் வழி சொத்து கிட்ட, தாயின் நோய் தீர, கிட்னி மற்றும் ரத்த சம்பந்த நோய், மனம் மற்றும் நீண்ட நாள் உடலில் பாதிப்பு விலக.

செவ்வாய்: தீரா கடன், நில பிரச்னை, மாங்கல்ய தோஷம் அகல, சகோதரர்கள் பிரச்னைக்கு தீர்வு, உடலில் ரத்த எண்ணிக்கை மறுபாடு, ஆபரேஷன் நிலைக்கு தீர்வு, நீரில் கண்டம் அகல.

புதன்: படிப்பில் உயர்வு பெற, சொந்த தொழில் மற்றும் கலையில் வெற்றிபெற. கோர்ட் தீர்ப்பு நமக்கு சாதகமாக அமைய. நரம்பு தோல் நோய் குணமாக.

வியாழன்: குலசாமி அருள் கிட்ட, குழந்தை பேரு கிட்ட, மங்கள நிகழ்வு, தங்கம் மற்றும் சேமிப்பு உயர, ஞானம் மற்றும் குரு கடாட்சம் பெற, குழந்தைகள் மேன்மை, கொழுப்பு மற்றும் உடலில் வீக்கம் குறைய.

வெள்ளி: வீட்டில் சுப தன்மை பெற, திருமண மற்றும் குடும்ப பந்தத்தில் மகிழ்ச்சி பெற, கட்டிய வீடு வாங்க, வெள்ளி சேர்க்கை, வைகுண்ட பதவி. ஹார்மோன், கருப்பை பிரச்சனை தீர.

சனி: உடலில் உள்ளேயும் வெளியேயும் அழுக்கால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொழு நோய்ப் பாதிப்பு அகல, தொழிலில் மேன்மை பெற, மூதாதையர் சாபம் விலக, பூர்விக சொத்து பிரச்னை. பிறவி பிணி அகல, சுற்றம் சூழ உள்ளவர்களால் பிரச்சனை அகல.

மலைக் கோயில்கள் சென்றால் சிறிது நேரம் கிழக்கு முகமாக அமர்ந்து தியானம் மற்றும் கடவுளின் மந்திரத்தை உச்சரிப்பது நன்று. கடவுளின் பாதம் பற்றிய பிறகு நாளும், கோளும், வினையும், ஒன்றும் செய்ய முடியாது. இந்த நம்பிக்கையோடு மலை ஏறி அல்லது கிரிவலம் சென்று கடவுளின் பாதத்தைப் பற்றி முயற்சியுடன் வெற்றிப் பாதையில் செல்வோம். உடம்பு முடியாதவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தெய்வீக மலையை கீழே நின்றபடியே தரிசிக்கலாம். ஒருவரின் நோய் குணமடைய அவரவர் ரத்த சம்பந்தம் உள்ளவர்களும் எந்த நாள்களிலும் கிரிவலம் செல்லலாம். கடவுள் எந்த தீரா நோயாக இருந்தாலும் குணமடையச் சரியான வழியைக் காட்டுவார் என்பது சந்தேகமில்லை.

Whatsapp:8939115647

vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com