இரட்டை குணம் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள்!
காலபுருஷ தத்துவப்படி புதனின் வீடுகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும். இவர் 3, 6 ஆதிபத்தியங்கள் கொண்ட உபய ராசி. அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் வெப்பமான சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் முதல் கிரகம் புதன், இருந்தாலும் புதன் கிரகத்தில் அதிக வெப்பம் இருக்காது.
ஜோதிட தத்துவப்படி புதன் ஒரு அலி தன்மை கொண்டது. ஒரு ஜாதக கட்டத்தில் புதன் நன்றாக இருந்தால் தான் அந்த குழந்தை படிப்பில் நேர்மை ஆற்றலோடு செயல்படுவான். புதிய கண்டுபிடிப்புகள் முதல் அதிபதி புதன். மிதுனத்தில் எந்த கிரகமோ உச்சமோ, நீச்சமோ, மூலதிரிகோணமோ பெறுவதில்லை. இங்கு செவ்வாய், ராகு மற்றும் குரு நட்சத்திரங்களான மிருகசிரீஷத்தின் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்களும் உள்ளன. அப்பனுக்கே பாடம் சொல்லும் சுப்பையா யார் என்றால் அது மிதுன லக்னக்காரர்களை குறிக்கும். அவர்களுக்கு அந்த அளவு அதிக புத்திக் கூர்மையும், மறைந்திருக்கும் சட்ட நுணுக்கங்களும் அதிகம் தெரிந்து வைத்திருப்பார்கள்.
முக்கிய ரகசியங்களையும் காக்கும் தன்மை கொண்டவர்கள் இருந்தாலும், சில சமயம் அவர்களை தங்கள் வாயால் மாட்டிக் கொள்வார்கள். இவருக்கு தாய், மாமன், நண்பர்கள், மற்றும் தாய் வழி உறவுகளே இவர்களின் உயர்வுக்கு முக்கியமானவர்கள். மிதுன லக்கின யோகர் சுக்கிரனும், மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் நட்பு முறையில் நன்மை தருபவர். அதுதவிர ஜாதகருக்கு பாவியாக வருபவர் குரு, செவ்வாய், கிரகங்களின் திசை நடக்கும் பொழுது மாரகத்திருக்கு நிகராக செயல்கள் நடைபெறும். மிதுனம் லக்னக்காரர்கள் முதலில் நினைப்பது ஒன்று, செய்வது மற்றொன்று என்று இருக்கும். இது காற்று தத்துவம் கொண்ட ராசி. இவர்களிடத்தில் காற்றிற்கு ஒப்பான வேகமும், சுறுசுறுப்பும் இவர்களின் செயலிலிருந்து கொண்டே இருக்கும். குரு இல்லாமலே இவர் மேலே வர முற்படுவார். இவரின் புத்தி மற்றும் ஆற்றல் இவருக்கு நிகர் யாரும் இல்லை என்று இருப்பார்.
மிதுன ராசி, உடலின் கழுத்து தோள்பட்டையைக் குறிக்கும், சின்னம் - இரட்டையர் வீணையுடன் கூடிய பெண் மற்றும் சுதையுடன் கூடிய ஆண் ஆவார். இவர்கள் ஆண் பெண் கலந்த இரட்டை குணம், இரட்டை பேச்சு, கருநீல உடல், பார்க்க சாதுவாக, உயரமான, ஒல்லியான, மீன் போன்ற கண்களை உடைய அழகிய உருவம் கொண்டவர்கள். இந்த லக்கினகாரர்கள் கீர்த்திமான், கூச்ச சுபாவமுள்ளவன், சூதுவாது கொண்டவன், ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பான், மாற்றிப் பேசுவான், இறை நோன்புகளை அனுசரிப்பான், தன் காரியத்திலேயே கண்ணாயிருப்பான், பித்த வியாதியுடையவன், கணக்கில் அறிவாளியாகவும், திறமைசாலி என்பதால் சாதுரியமான செயல்கள் செய்வார்கள், முயற்சி, இளமையான அழகானவர், ரகசியம் காக்க முடியாதவன்.
வீடு மற்றும் வாகனம் மீது ஆசை, செலவாளி, புகழ் பெற ஆவல், அம்மா பிள்ளை, பல தொழில் செய்பவராகவும், எடுத்த காரியத்தை முடிப்பவர்களாகவும், கற்பனையில் வாழ்பவர், கலைநயம் மிக்கவன், ஜோதிட ஆர்வமிக்கவன், நல்ல ஆசான், நுண்கலை வல்லுநர்கள், வழக்குரைஞர், சிற்பம், கதை, கவிதையில் ஆர்வம், அதிகாரமிக்க வேலை அமையும், எதாவது ஒரு கலைகளில் வல்லுநராக இருப்பார் மற்றும் ஒரு சிலருக்கு குடும்ப உறவில் பிரச்னை ஏற்படும். புதன் என்பவர் இளைஞரைக் குறிப்பவர். இவருக்கு அந்த துடுக்குத்தனமும் சுறுசுறுப்பும் விளையாட்டின் மீது ஆர்வமும் அதிகம் இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் தாயின் அன்பு அல்லது மனைவியின் துணை அவசியம் தேவை.
தன்னைதானே சந்தோஷப்படுத்திக்கொள்ள, இவர்கள் எதாவது ஒரு கலையைக் கற்க வேண்டும். மிதுன ராசியினர் கொஞ்சம் பார்க்கப் பாவமாக இருப்பார் ஆனால் பல்வேறு குணங்கள் உள்ளே மறைந்து இருக்கும். அந்த குணமானது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வெளியில் தெரியும். அவை நல்ல குணமா கெட்ட குணமா என்பது பாவர்கள் சேர்க்கை பொருத்து மாறுபடும். ஒருவரின் லக்னாதிபதி சுபத்துவத்துடன் அதிக வலுப்பெற்றால் அவர்களின் ஆற்றாலும் புகழும் உயர்வு பெறும்.
மிதுன புதன் ஒன்றுக்கும், நான்கும் உரியவர். அதனால் இவர்கள் படிப்பு என்பது உயிர் மூச்சு, ஆடம்பர சுகம், புகழ், கீர்த்தி, ஆயுள் மீது அதிக அக்கரை கொண்டவராக இருப்பார். பல்வேறு வாகனம், அணிகலன் மீது மாற்றங்களை விரும்புவார். சந்திரன் புதன் அசுப நிலையில் இருந்தால் ஜாதகருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும். சந்திரன் வீடான கடகம் என்பது புதனின் பகை வீடு மற்றும் ரத்த சம்பந்தமான செவ்வாய் நீச்சம். ஒரு சில நேரம் பாசம் வைத்த ஒரு உறவு பிரிவையையும் வலியையும் ஏற்படுத்தும். அதே சமயம் யோகாதிபதி செவ்வாய் அஷ்டமத்தில் உச்சம். நரம்பு, தோல், கழுத்து, கபம் மற்றும் ரத்த சம்பந்த பாதிப்பு ஏற்படுத்தும். மிதுன லக்கினத்தில் 2க்குரியவராக சந்திரன், அங்கே குரு உச்சம் பெரும் இடம் என்பதால் இவர் கொடுத்த வாக்கில் உறுதி, கூர்மையான நேத்ரம், பேச்சில் இனிமை, பால் மற்றும் அரிசியால் செய்யப்பட்ட தின்பண்டம் உன்ன ஆசை, தாயின் பாசத்திற்கு அடிமை.
சந்திர மங்கள யோகம் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள், இந்த யோகத்தன்மையால் அதிக பலனடைவார்கள். சூரியனின் வீடு சிம்மம் இவர்களுக்கு மூன்றுக்குரியவர். அங்குள்ள சூரியன் சுபத்துவத்துடன் இருந்தால் அசாத்தியமான தைரியத்தையும், அரசியல் மோகத்தையும், கௌரவத்தையும் கொடுக்கும். சூரியன் ஐந்தில் நீச்சமாகவும் இருப்பதால் பூர்வ புண்ணியத்தில் ஏதாவது ஒரு ஏமாற்றத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும். மிதுன லக்னத்திற்கு நட்பான சுக்கிரன், ஐந்தாம் வீடானா துலாத்திலும், 12ம் வீடான ரிஷபத்திலும் ஆட்சி பெற்று இருக்கிறார். ஆடம்பர மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தை விரும்புவார். இதனால் இவரே சேர்த்து வைத்த செல்வத்தை, ஆடம்பர வாழ்க்கைக்காகவும் செலவு செய்வார். இவருக்கு வீண் செலவு என்று எடுத்துக்கொண்டால் ஆடம்பர உடை, நகை, குழந்தை மற்றும் மனைவிக்கான செலவு ஏற்படும். செவ்வாய் 6க்கும், 11க்கும் உரியவர், இவர் தேவையற்ற கடனுக்கு என்று செலவு செய்ய நேரிடும்.
மிதுனத்திற்கு முக்கிய பாதகாதிபதி குரு ஆவார். குருவே இவருக்கு முக்கிய எதிரியாவார். இவர்களுக்கு குருவின் ஆசிர்வாதம் குறை இருக்கும். களத்திரக்காரகனாகவும் குரு இருப்பது திருமணத்தில் ஒரு சில சங்கடங்களை ஏற்படுத்தும். பல்வேறு வேலை மாற்றம் மற்றும் கூட்டு தொழில் செய்ய முற்படுவார். இதனால் இவருக்கு நஷ்டமும் ஏற்படலாம். அவருக்கு தொழில் என்று எடுத்தால் குருவும் சனியும் பெரிய மாற்றங்களை செய்வார். சனி பகவான் இவரின் கர்ம பலனுக்கு ஏற்ப ஒரு சில நன்மைகளைச் செய்ய முற்படுவார். சனியானவர் அஷ்டமாதிபதியாக இருப்பதால், அவரின் தசை புத்தி காலத்தில் பல்வேறு பாதகத்தை ஏற்படுத்தத் தயாராக இருப்பார். மிதுனத்தில் கோச்சாரத்தில் குரு வரும் காலம் அவ்வளவு நற்பலனை செய்யமாட்டார். ஆனால் குருவின் பார்வை காலதாமதமான திருமணம் சீக்கிரம் நடைபெறும்.
கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிட்டும், முயற்சிமிக்க சாதனைகள் சாதிக்கும் நல்ல நாளாக அமையும். இந்த இடத்தில் குரு பாவியாக இருந்தாலும் இவர் பார்வை பலம் அதிக நற்பயன்கள் கிட்டும். மிதுன ராசிக்காரர்கள் இறந்த மூதாதையர்களின் திதியில் அவரவர் முறைப்படி படையல் போட்டு, குடும்பத்தோடு வணங்குவது சாலச்சிறந்தது. இந்த ராசிக்காரர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டு, விரதம் இருந்து சபரி மலைக்குச் செல்வது நன்று. இதுதவிர கன்னி சாமிகள், சத்திய நாராயணன் வழிபாடு, வைணவ குருமார்கள் மற்றும் பெரியவர்களை வணங்குவது நன்று.
The unique qualities and benefits of Gemini..
இதையும் படிக்க: சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.