

பாலமுருகனின் திருவடி பாதங்கள் பட்ட இடமானது இரண்டு ஸ்தலங்கள். ஒன்று நிச்சயதார்த்த கோலத்தில் தெய்வானை மற்றும் சுப்பிரமணியன் வீற்றிருக்கும் திருவிடைக்கழி, மற்றொன்று வேலூரில் உள்ள வள்ளியை மணந்த வள்ளி மலை. அவ்வப்போது அம்மை அப்பனுடன் கோபித்துக் கொண்டு முருகப் பெருமானுக்கு குன்றேறி அமர்ந்து தரிசனம் அளிப்பார். ஆனால் முருகப்பெருமான் குன்றில்லாத இடமான திருவிடைக்கழியில் ஸ்ரீ சிவ சுப்பிரமணிசுவாமி காட்சி தருகிறார்.
திருவிடைக்கழி கோயில் சோழ நாட்டு திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலைத் தரிசனம் செய்பவர்கள் திருச்செந்தூரில் உள்ள முருகனைப் பார்த்த பலன் கிட்டும். முக்கியமாக இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று முருகனை தரிசித்தால், நம்முடைய பாவங்களுக்குச் சிறிது வினை கழிந்துவிடும் என்பதே ஒரு சூட்சும விதி. ஆனால் எல்லோராலும் இந்த கோயிலுக்குச் சுலபமாக சென்றுவிட முடியாது. இங்கு வழிபட நினைக்கும் பொழுதே பல்வேறு இன்னல்கள் நமக்கு ஏற்படும். ஏனென்றால் நாம் செய்த பாவ கர்மாக்களை சுலபத்தில் கழிப்பது கடினமே. இந்த புண்ணிய ஸ்தலத்திருக்கு வருவதே பெரும் பாக்கியம்.
எடுத்துக்காட்டாக நான் கும்பகோணம் மற்றும் மாயவரத்தில் உள்ள பெரும்பாலான பழம்பெரும் கோயிலுக்கு அவ்வப்பொழுது சென்று வருவேன். ஆனால் என்னால் திருவிடைக்கழிக்கு மட்டும் செல்ல முடியாத அளவுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். சிறிது காலத்திற்கு முன்பு தான் அந்தக் கோவிலுக்குச் செல்ல எனக்கு மாபெரும் பாக்கியம் கிட்டியது. அனைவரும் இந்த ஸ்தலத்திற்கு ஒருமுறை மட்டும் செல்லாமல், பலமுறை தொடர்ந்து சென்றால் நற்பலன்கள் கிட்டும்.
திருவிடைக்கழி கோயிலை முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் கட்டியதாகத் தலவரலாறு கூறுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் திருப்புகழ், வேல் விருத்தம் பதிக்கப்பட்டுள்ளன. சேந்தனார் முக்தி பெற்றது இந்த தலம். அருணகிரிநாதர், வசிட்டர், சேந்தனார், முசுகுந்தன் மற்றும் ராகு பகவான் வழிபட்ட ஸ்தலம். இங்கு சர்வமும் சுப்பிரமணி என்பதால், பிரதோஷ நாயகர்கள் சோமஸ்கந்தரும் சந்திரசேகரர் சண்டிகேஸ்வரர் மற்றும் அனைத்து சிவமூர்த்திகளும் கையில் வஜ்ரவேலுடன் சிவசுப்பிரமணியாக காட்சியளிக்கிறார். இக்கோயிலில் முருகன் மற்றும் சிவனின் தலவிருட்சங்கள் குரா மற்றும் மகிழ மரங்கள் உள்ளன. இங்கு உள்ள தீர்த்தம் : கங்கை கிணறு மற்றும் சரவண தீர்த்தமாகும். கோயிலின் நான்கு திசையிலும் ஐயனார் காவல் தெய்வங்கள் இருக்கின்றனர்.
முருகனுக்கு தோஷ நிவர்த்தி: திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி. அடுத்து சூரபத்மன் இரண்டாவது மகன் இரண்யாசுரனை வதம் செய்ய தேடி அலைந்தார். அந்த அசுரன் தரங்கம்பாடியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் சுறா மீனாக மறைந்து வாழ்ந்தான். வைகாசி மாதம், சதயம் நட்சத்திரமன்று முருகன் இரண்யாசூரனை தேடி கண்டுபிடித்து சம்ஹாரம் செய்தார். அந்த அசுரன் ஒரு தீவிர சிவ பக்தன். அவனை அழித்ததால் முருகனுக்கு தோஷம் ஏற்பட்டது. அதற்கு அன்னை பராசக்தியின் ஆலோசனைபடி திருவிடைக்கழியில் உள்ள சரவண பொய்கையில் நீராடி, திருவிடைக்கழியில் உள்ள குரா மரத்தடியில், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தன் தந்தைக்கு குரா மலர்களால் அர்ச்சனை செய்தார். பின்பு அங்கு உள்ள மரத்தின் அடியிலிருந்து முருகன் சிவனை நோக்கி தவம் செய்தார். இங்கு முருகருக்கு தோஷ நிவர்த்தி கிடைத்தது. சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இம்மரத்தடியில் பத்ரலிங்கத்திற்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். இங்கு முருகர் மூலவராகவும், யோக சுப்பிரமணியராக குரா மரத்தடியிலும் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் தெய்வானை முருகனின் அழகில் மயங்கி நாணத்துடன் சற்று வலப்புறம் தலை சாய்த்து அழகிய முருகனை தன் கடைக்கண்ணால் நோக்கும் பாவனையில் தனித்து சன்னதியில் காட்சியளிப்பாள். இங்குதான் தெய்வானைக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் கடவுள் முருகருக்கு குரா மரம் என்பது பிடித்த விருட்சம். "திருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே" என்று அருணகிரிநாதர் குரா மரத்தடியில் இன்றும் சர்வ சாதாரணமாக உளவிய குமரேசனே என்று திருப்புகழில் பாடப்படுகிறார். ‘குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்’ என்று குரா மலர்களை சங்க கால இலக்கியத்தில் கூறப்படுகிறது. இளவேனிற் காலத்தில் பூக்கும் குராமரத்து பூக்களை முருகருக்கு அர்ச்சனை செய்தால் குறைவில்லாத செல்வமும் வளமும் கிட்டும். இங்கு தினமும் குராமரத்தடியில் உள்ள லிங்கத்திருக்கு அர்த்தஜாம ஆராதனை நடைபெறும். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்தில் தோன்றி, தழைத்து காட்சி தருகிறது. சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் தியானம் செய்த அபூர்வ தலவிருட்சம். கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. குரா மரத்தடியில் அமர்ந்து நாம் மனம் ஒன்றி பகவானை நினைந்து தியானம் செய்தால் மன அமைதி, சரியான பாதை மற்றும் செயலில் வெற்றி என்று முருகனின் வேல் வழிகாட்டும்.
முருகப்பெருமான் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். முருகனின் திருவுருவ அழகு குமார தந்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி, திருவிடைக்கழி முருகன் ஒரு முகம், இரண்டு கரங்கள், வலது கரத்தில் அபய முத்திரையுடனும், இடது கரம் தொடையில் இருப்பது போன்ற தோற்றத்துடன் உள்ளார். முருகரின் வாகனம் ஐராவதம். இங்குள்ள கருவறையில் முன்புறம் சுப்பிரமணிய பெருமானும், அவருக்குப் பின்புறம் பாபநாசப் பெருமானும் லிங்க வடிவில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பெற்ற முருகன் பூஜித்த ஸ்படிக லிங்கம் முன்னே உள்ளது. சிவன் தன்னுடைய மூல ஸ்தானத்தை முருகனுக்குக் கொடுத்து, அவர் பின்னே அமர்ந்து கவனிப்பதுபோல இருந்தது. இது ஒரு தந்தை தன் மகனுக்குக் கொடுக்கும் கௌரவமாகும். இங்கு உள்ள கருவறையில் சிவனும் முருகரும் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் அழகு காணக் கிடைக்காத ஒன்று. இரு மூர்த்தங்களுக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும் உள்ளது. யோக முத்திரையில் முருகன் இங்குக் குரா மரத்தடியில் தவம் செய்து கொண்டிருப்பார். தந்தை மகன் ஒற்றுமை இல்லாதவர்கள் இங்கு வந்து சிவனையும் முருகரையும் தரிசித்தால், குடும்ப ஒற்றுமையைப் பலப்படும்.
நவக்கிரகங்களின் நாயகன்: இக்கோயிலில் நவ நாயகர்கள் உள்ளடங்கிய முருகன் சிவனுடன் சேர்ந்து காட்சி தருவதால், இங்கு நவக்கிரகங்களுக்குத் தனி சன்னதி கிடையாது. முக்கியமாகச் செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் மற்றும் அனைத்து நவகிரக தோஷங்களுக்கும் ஒரே அருமருந்து திருவிடைக்கழியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி. அதிலும் பாவ கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் இக்கோயிலில் முருகரை வழிபட்டதாக தல வரலாற்றில் கூறப்படுகிறது. குரா என்று வார்த்தையைத் திருப்பி போட்டால் ராகு என்று வரும். முக்கியமாக இக்கோயிலில் ராகுவால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்ய திருவிடைக்கழிக்கு செல்வது நன்று. "அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர்குரவின்" என்ற அகநானூறு பாடலில் குரவ மலரின் அரும்பு பாம்பின் பல்போன்ற வடிவம் உடையது என்பது ராகுவைக் குறிப்பது போல இருந்தது. இந்த காலகட்டத்தில் தோஷத்தை நிவர்த்தி செய்ய ராகுவின் சூட்சுமம் உள்ளடங்கியுள்ளது.
“கொந்து ஆர் குரா அடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறி பல
கொண்ட வேத நல் முடிவினும் மருவிய குரு நாதா”
கொந்துவார் குரா அடி என்பது திருவிடைக்கழியில் உள்ள குரா மரத்தடி பற்றி அருணகிரியால் திருப்புகழில் கூறப்பட்டுள்ளது.
முருகன் இரணிய சூரனை வதம் செய்த நாள் ஆராய்ந்து பார்த்தால், ஜோதிடத்தில் வைகாசி என்பது சூரியன் (சிவன்) ரிஷபத்தில் இருக்கும் மாதம். அங்கே சந்திரன் (சக்தி) உச்சம் பெரும் இடம். சிவனும் சக்தியும் இங்கு குருவாக இருந்து முருகனுக்குத் துணையாக இருக்கிறார். செல்வம் மற்றும் திருமண வளத்தைத் தரும் சுக்ரன் வீடானா ரிஷபதில் ஆட்சி, சதயம் என்பது ராகுவின் நட்சத்திரம். இங்குள்ள பச்சை மரம் என்பது செழிப்பு (புதன்), சனியால் ஏற்படும் கர்மாவை குறைக்கக்கூடிய பாபநாசா பெருமான் இங்கிருக்கிறான். இவ்வாறாக முருகருக்கு எல்லா நவகிரகங்களும் உள்ளடங்கி உதவியாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லா கிரகங்களின் தோஷங்களை விலக்கக்கூடிய இடம் திருவிடைக்கழி. இக்கோயில் தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மற்றும் திருக்கடையூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குத் தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தரிசனம் செய்தால் தீராத கர்மா மற்றும் திருமண தோஷங்கள் விலகும். இங்குக் கந்த சஷ்டி விழா, தை பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம், மற்றும் கார்த்திகை திருவிழா காலங்களில் முருகரைத் தரிசிக்க வைத்தீஸ்வரன் கோயில், காரைக்கால், சுவாமி மலை மற்றும் பல்வேறு மாவட்டத்திலிருந்து நடைப்பயணமாகக் காவடி எடுத்து வருகை புரிவார்கள். இது தவிர புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிதம்பரத்திலிருந்து பாதயாத்திரையாக இந்த ஆலயத்திற்குச் சென்று குமரனை வழிபடுவார்கள். இக்கோவிலைப் பற்றி அறிந்த நமக்கும், இந்த சோழ நாட்டுத் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க உகந்த நேரம் வந்துவிட்டது.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.