அனுஷத்தில் அவதரித்த அண்ணலின் அனுஜர் - ஸ்ரீ சிவன் சார்!

மகான் சிவன் சார் பற்றி...
சிவன் சார்
சிவன் சார்
Updated on
4 min read

நடமாடும் தெய்வமாகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது சங்கராச்சாரியாராகவும் விளங்கிய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், அனைவராலும் அன்புடன் மகா பெரியவா என்று அழைக்கப்படும் மாமுனி ஆவார். இந்த மகா குரு ஒளிவீசும் கருணை நிறைந்த அமைதியான முகம், எளிமையான உருவம், அபூர்வமான ஞானம், கேட்காமலேயே அள்ளி வழங்கும் அன்பு - இவற்றின் ஒருங்கிணைந்த வடிவமாகத் திகழ்ந்தார். பெரியவா பல நாடுகள், கிராமங்கள் என நடைப்பயணம் செய்து, மக்களுக்குத் தேவையான உதவிகளையும் உயரிய ஞான உபதேசங்களையும் வழங்கினார். அவரது போதனைகளின் சாரம் உலக மன சாந்திக்கான அடிப்படையாக அமைந்தது.

அகிம்சை தனிமனிதனை மட்டுமல்ல, சமூகத்தையே காக்கும். மதங்கள் மனிதனைத் தூய்மைப்படுத்தவே வந்தவை என்று அவரின் கூற்று. பெரியவா சன்னியாசம் ஏற்று நாடெங்கும் நடைப்பயணம் செய்து வேத தர்மத்தை உலகிற்கு எடுத்துச் சென்றார். அவரது உபதேசங்கள் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்ததால், பக்தர்கள் அவரை “நடமாடும் வேதம்” எனப் போற்றினர். வேத மந்திரங்கள் எந்த ஒரு இனத்திற்கோ நாட்டிற்கோ அல்ல; முழு உலக நலத்திற்காகவே அருளப்பட்டவை.

"ஆடம்பரம் குறைந்தால் ஆசை குறையும்; ஆசை குறைந்தால் போட்டி குறையும்; போட்டி குறைந்தால் போர்த் தானாகவே குறையும்." அவரோடு பழகிய தலைவர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் பெரிய சீடர்கள் - அவரின் பெருமைகளையும், அவரால் பெற்ற பயன்களையும் இன்றும் அவரை போற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மகா பெரியவாவுடன் இணைந்து நினைவுகூரப்பட வேண்டிய இன்னொரு உயர்ந்த சித்த புருஷர் - ஸ்ரீ சிவன் சார் (Shri Sivan SAR). மகா பெரியவாவின் பூர்வாஸ்ரம இளைய தம்பியான ஸ்ரீ சிவன் சார் பற்றி சிறிதளவு அறிந்து கொள்வோம். மகா பெரியவாவிடம் ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர் சிவன் சார். அவரது விசேஷ திறன்களையும் குணங்களையும் பெரியவா பலமுறை பாராட்டியுள்ளார்.

பல சோதனைகள் மூலம் சிவன் சாரின் ஆன்மிக ஆற்றலை வெளிப்படுத்தினார். பெரியவா அவரை "மகா பிறவி ஞானி", "மகான்" என்று அழைப்பார். இவரை அன்புடன் "சாச்சு" எனவும் கூறுவார். ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் - ஒருவர் ஜகத் குரு; மற்றவர் மௌன ஞானி. ஸ்ரீ சதாசிவ சாஸ்திரி எனும் சிவன் சார், 1904 அக்டோபர் 3ம் தேதி விழுப்புரத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் தனது சிறுவயது கல்வியை முடித்தார். அவர் படம் வரைவதிலும் போட்டோ கிராபிக்ஸ் துறையில் சிறந்தவர். இவர் பெரியவாளை பல்வேறு கோணங்களில் தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்து, காஞ்சி முனிவரை சந்தோஷப்படுத்தினார். இந்த மகா சித்தர் அபாரமான விவேகமும் ஞானமும், ஆழ்ந்த சிவபக்தி, சிவ மந்திர ஜபம், வேதங்கள் மற்றும் ஆன்மிக கிரியைகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஆடம்பரம் எதுவுமின்றி, சாந்தமான முகம், அமைதியைப் பிரதிபலிக்கும் பார்வை, வீறுகொண்ட நடையும், கருணை கலந்த மென்மையான பேச்சு - இவையே சிவன் சாரின் இயல்பான அடையாளங்கள். இவர் ஆன்மிக ஆடம்பரங்கள் இன்றி, தன்னை மறைத்து வாழ்ந்த ஒரு உயர்ந்த ஞானி. அறிவும் ஆன்மிக ஆழமும் உச்சத்தில் இருந்தபோதும், அவற்றை வெளிக்காட்டாமல் ஒரு சாதாரண மனிதரைப் போலவே அவரின் அன்புக்குரிய பக்தர்களின் குடில்களில் வாழ்ந்தார். அவர் கால் பட்ட இடம் அனைத்தும் செல்வச் செழிப்பாக இருந்தது.

எளிமையான தோற்றமும் சகஜமான பேச்சும் இருப்பதால் பயம் இன்றி அவரை சீடர்கள் அவ்வப்போது வந்து நமஸ்கரித்துச் செல்வார்கள். பக்தர்கள் அவரை தரிசித்து, மனநிறைவு பெற்றுத் திரும்புவதே அவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதினார்கள். வாழ்க்கையில் எத்தகைய குறை, துன்பம், குழப்பம் ஏற்பட்டாலும், அந்த மாபெரும் ஞானியை மனமார வணங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது அவர்களின் அனுபவத்தில் உறைந்த ஆணித்தனமான உண்மை. அவ்வப்போது தன் சீடர்களுக்கு பல்வேறு அதிசயங்களையும் நிகழ்த்தியுள்ளார். மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் மொழியையும் உணர்வையும் புரிந்துகொள்ளும் அபூர்வ திறன் அவருக்கிருந்ததாகக் கூறப்படுகிறது.

பணம் என்ற மாயைக்கு எள்ளளவும் இடமளிக்காதவர் என்பதை, அவரது வாழ்க்கை முழுவதும் ஒளிரும் எளிமை வெளிப்படுத்தியது. முக்கியமாகப் பதவி, புகழ், ஆசனம் எதையும் விரும்பாதவர் சிவன் சார். அது அவரை ஒருபோதும் ஈர்க்கவில்லை. இன்றும் அதற்குச் சாட்சியாக, பல செல்வந்தர்கள் வழங்கிய காசோலைகளை அவர் மறுத்ததே போதுமானது. இந்த சித்தர் சிறிதளவு நீர் கூட அருந்தாமல், மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்ந்தவர். அவருக்குத் தேவையானது 2-3 காவி உடைகள், சிறிதளவு பருக்கை உணவு, மற்றும் உறங்குவதற்கு ஒரு சிறிய இடம் அவ்வளவுதான். இத்தகைய எளிமையான சித்த மகானை காண்பது அரிது. அவரோடு வாழ்ந்து அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த பல ஆன்மிக அனுபவங்களுக்குச் சீடர்களும் பக்தர்களும் சாட்சிகளாக உள்ளனர். இன்றும் எண்ணற்ற சீடர்கள் மற்றும் பக்தர்கள் இவரை சிவனின் ரூபமாகவும், குருவாக நினைத்து வழிபட்டு வருகின்றனர், அவ்வப்போது பல்வேறு ஆன்மிக நுணுக்கங்களையும், கர்ம பலன்களையும், உபதேசங்களையும் தன்னுடைய பழைய நாட்குறிப்புகளில் சிவன் சார் எழுதி வைத்திருப்பார். அவருடைய கையெழுத்தைப் பார்க்கும் பொழுது, சரஸ்வதி தேவி அங்கேயே வீற்றிருப்பது போல ஒரு புனிதமான உணர்வு ஏற்படும்.

ஆன்மிக நுணுக்கங்கள், வானவியல், ஜோதிடம் ஆகிய அனைத்தையும் கரைத்துக்குடித்தவர் என்பதற்குச் சான்றாக, அவர் எழுதிய "ஏணிப்படிகளில் மாந்தர்கள்" என்ற நூல் விளங்குகிறது. அந்த நூலை ஒருமுறை படிப்பதால் அல்ல; பலமுறை படித்தால் தான் அதன் ஆழம் புரியும். ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய தெளிவு பிறக்கும். வாழ்க்கை எனும் ஏணியில் மனிதர்கள் மேலேற முயலும்போது, சிலர் புகழ் என்கிற உயரத்தைத் தேடுகிறார்கள். ஆனால் சிவன் சார் தான் ஏறாமல், பிறர் ஏறுவதற்காக ஒரு ஏணிப்படியாக நின்றவர். "பெரியவா இருக்கும்போது என்னிடம் ஏன்?" என்ற அவரது ஒரே வரி, அவரது முழு பணிவையும் ஆன்மிக உயரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நூலில் மனிதன் எவ்வாறு பொறுமையுடனும், நல்ல பண்புகளுடனும் வாழ வேண்டும் என்பதும், கர்மா, வேதங்கள் ஆகியவற்றின் தத்துவங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிவன் சார் உபதேசத்தின் மையச் சாரம்- எளிமை, அமைதி, சிவ நாம ஜபம், பணிவு, அகந்தை இல்லாமை ஆகியவையாகும்.

அவர் கூறிய சில உபதேசங்களின் முக்கிய சாரம்: "கோயிலுக்குப் போக முடியாவிட்டாலும், மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்". "எளிமைதான் உண்மையான தவம், எளிமையாக வாழ்வதே உயர்ந்த ஆன்மிக சாதனை". "அவசியமற்ற கூட்டமும், ஆசைகளும் மனக் குழப்பத்தை உண்டாக்கும்". "பொறாமை, அகந்தை, வெறுப்பு இல்லாத மனமே இறைவன் வசிக்கும் இடம்". "பேசாமல் இருப்பது பல சமயங்களில் பெரிய ஜபம் என்றும், அவசியமில்லாத பேச்சு, வாதம், கோபம் ஆகியவை மன அமைதியைக் குலைக்கும்".  வாழ்க்கை துன்பங்கள் பூர்வ ஜன்ம வினையின் கழிவாகவும், மனதைப் பக்குவப்படுத்தும் கருவியாகவும் அமைகின்றன என்றும் அவர் விளக்கினார்.

"சிவ நாமம் உச்சரித்தால் மன பயம் அகலும். எந்த சூழ்நிலையிலும் "ஓம் நமசிவாய" என்ற நாம ஜபத்தைக் கைவிடக் கூடாது". "கஷ்டம் வந்தால் இறைவனைக் குறை சொல்ல வேண்டாம்" என்று அவரின் கூற்று. முக்கியமாக தெய்வ பக்தி இருப்பதாகக் காட்டி, நேர்மை இல்லாமல் நடப்பவர்கள், செல்வத்தைப் பெருக்க யாசகத்தை ஆயுதமாகக் கொள்பவர்கள், உத்தமனைப் போல நடித்துக் கிடைத்ததைச் சுருட்டுபவர்கள், பசுக்களைக் கொல்லுபவர்கள், பொது ஸ்தாபனத்தின் பொருளை தனதாக்கிக் கொள்பவர்கள் அனைவரும் பாவச் செயல்களில் ஈடுபடுவோர் என சிவன் சார் கடுமையாகச் சுட்டிக்காட்டினார். 

நமக்குக் கொடுக்கப்பட்ட மகா பொக்கிஷங்களான மகா பெரியவாவையும், சிவன் சாரையும் பெற்றெடுத்த தாய்-தந்தையாருக்கு நாம் அவ்வப்போது நமஸ்கரிக்க வேண்டும். குரு, பெற்றோர், முதியோர் - இவர்களை மதிப்பதே ஆன்மிக வளர்ச்சியின் அடித்தளம். பெரியவர்களை மதிக்காத பக்தி, எந்நாளும் பூரணமடையாது. மகா பெரியவா உலகிற்கு உபதேசித்த ஞானத்தின் ஒரு மௌன வடிவமே சிவன் சார். பெரியவா சொன்னதை வாழ்ந்து காட்டிய ஒரு ஆன்மிக நிழல்; - அவரே சிவன் சார். மகா பெரியவாவும் சிவன் சாரும் ஒரே தத்துவத்தின் இரு வெளிப்பாடுகள். ஒருவர் சூரியனைப் போல வெளிச்சமாக வழிகாட்டினார்; மற்றவர் நிலாவைப் போல அமைதியாக மனங்களைக் குளிர்வித்தார். ஒருவர் குரு மார்க்கத்தின் உச்சம்; மற்றவர் பக்தி மற்றும் மௌன மார்க்கத்தின் உச்சம். இருவரும் சேர்ந்து, ஆன்மிகத்தின் முழுமையான வடிவத்தை நமக்குக் காட்டுகின்றனர். 

பெரியவா பேசுவதன் மூலம் உபதேசித்தார்; சிவன் சார் மௌனத்தின் மூலம் அதையே உறுதிப்படுத்தினார். பெரியவாவை பார்க்க வந்தவர்கள் சிவன் சாரிடமும் பேச முயன்றபோது, அவர் பெரும்பாலும் சொல்லும் வார்த்தை "நீங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? பெரியவா இருக்கும்போது…" என்று தன்னை மறைத்துக் கொண்டு, எப்போதும் பெரியவாவை முன்னிலைப்படுத்தும் பணிவுடன் சிவன் சார் திகழ்ந்தார். சிவன் சார் 1996 மார்ச் 7ஆம் தேதி சித்தி அடைந்தபோது, சிவன் சார் உடல் மறைந்தாலும், அவரது ஆன்மிக இருப்பு மறையவில்லை என்று பக்தர்கள் உணர்ந்தனர். அவர் வாழ்ந்த எளிமை, அமைதி, உபதேசங்கள், ஆன்மிக ஒளி இன்றும் பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வாழ்கின்றன.

இங்குக் கூறப்பட்டவை மிகச் சொற்பமே. இந்த கலிகாலத்தில் மாபெரும் ஞானிகளின் அருள் பெற்றவர்கள் - கல்வியாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வேதவித்தகர்கள், ஆராய்ச்சியாளர்கள், செல்வந்தர்கள், பெரியோர்களும் சான்றோர்களும் மற்றும் பல்வேறு பக்தர்கள். இவர்கள் காலடி வைத்த இடம் தெய்வீக கடாட்சமும் உருவாகும். ஸ்ரீ மகா பெரியவாவின் ஆசிர்வாதத்துடன், அவரின் இளைய தம்பியைப் பற்றி அறிந்துகொண்டோம்.

vaideeshwra2013@gmail.com

தொலைபேசி: 8939115647

Summary

The brother of the elder brother who was incarnated in Anushad - Sri Shiva sir!

சிவன் சார்
கன்னி ராசியினரின் பலம் பலவீனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com