

அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் பலமா, பலவீனமா, என்ன செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
பஞ்சாங்கத்தில் முக்கிய அங்கம் மற்றும் பஞ்சபூதத்தில் நீரின் தத்துவம் கொண்டது அஷ்டமி. திதி என்றவுடன் திவசம், சிராத்தம் என்று நினைப்போம், அதுதவிர ஒவ்வொரு திதியிலும் ஒரு சில சூட்சுமங்கள் மறைந்துள்ளன. சாதகருக்குத் தெய்வ அருள் கிட்ட, அவரவர் இஷ்ட / குலதெய்வங்கள், நட்சத்திர தெய்வங்கள், மற்றும் திதி தேவதைகள் வணங்குவது முக்கியமான ஒன்று. சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைப்பட்ட தொலைவு திதி ஆகும். இவற்றில் நாம் முக்கியமாகப் பார்ப்பது அசுப திதி என்று சொல்லப்படும் அஷ்டமி திதியின் பலங்கள். அஷ்டமியில் திருமணம், கிரகப்பிரவேசம் மற்றும் சுப செயல்களைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு மாதமும் இரு அஷ்டமிகள் உள்ளன. வளர்பிறையின் 8ம் நாள் வரும் சுக்லபட்ச அஷ்டமி மற்றும் தேய்பிறையின் 8ம் நாள் வரும் கிருஷ்ணபட்ச அஷ்டமியும் ஆகும்.
அஷ்டமியில் பிறந்தவர்களுக்கு..
பயமில்லாத மனோபலம், விடாமுயற்சி, தைரியசாலி, வல்லமையான பேச்சு, உழைப்பாளி மற்றும் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் மனைவியின் சொல் கேட்டு நடப்பவராகவும், துணைவருக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்துபவராகவும் இருப்பார்கள். அஷ்டமியில் பிறந்த பகவான் கிருஷ்ணன் எதிரியை வெல்லும் ஆற்றல் கொண்ட பெரும் பலசாலியாக இருந்தான். அஷ்டமி நாளில் அரண் அமைத்தல், கலைகளைத் துவங்குதல், ஆயுதம் எடுத்தல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், தானியம், சிற்பம், தளவாடம் வாங்கலாம் மற்றும் தற்காப்புக் கலை கற்றல் ஆகியவை உகந்தது. சாதாரணமாக நம் முன்னோர்கள் அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. அஷ்டமி திதிக் காலத்தில் சில சமயங்களில் குழப்பம், மன அழுத்தம், தடைகள் மற்றும் சோதனைகள், அவசர செயல் போன்றவை ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் எடுத்த முடிவுகள் ஆரோக்கியமாகவும், யோசித்துச் செயல்படுத்த வேண்டும். ஒருசில சமயங்களில் சோதனைகள், தாமதங்கள், எதிர்ப்புகள் உருவாகலாம். ஜோதிட ரீதியாக, அஷ்டமி திதி ராகு, கேது கிரகங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதனால் இந்த நாளில் சாயக் கிரக தாக்கம் அதிகம்.
ஜென்ம சனி, பாத சனி, விரய சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி உள்ளவர்கள்..
ஜாதகத்தில் எட்டுக்குரியவன் பலவீனம் அல்லது அசுபராக இருந்தால், அவருக்கு ஜென்ம சனி, பாத சனி, விரய சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி பாடாய் படுத்திவிடும். அந்த நபர்களால் எழுந்திருக்க முடியாது அளவுக்கு பிரச்னைகள் இருக்கும். எட்டின் ஆதிக்கம் கொண்ட சனி ஆட்சியோ உச்சமோ அல்லது மகர, கும்ப ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அவ்வளவாக இருக்காது. அஷ்டமம் என்றால் எட்டு எண்ணைக் குறிக்கும். அதனால் சனியின் நட்பு ராசிகள், 8 மற்றும் அதன் கூட்டுத் தொகையில் கொண்டவருக்கு அஷ்டமியில் பாதிப்பு நிகழாது. முக்கியமாக சனி பகவனை நம்முள் வசப்படுத்த சனிக்கிழமையில் வரும் அஷ்டமியில், காலையில் வரும் ராகு காலத்தில் பைரவர் மற்றும் காளியை வழிபட வேண்டும்.
எதிரிகளை அழிக்க, தீய சக்திகள் நம்மை விட்டு விலகச் சரியான சூட்சும திதி அஷ்டமி. ஆக்ரோஷமான தோற்றத்துடன் அருள்பாலிக்கும் தெய்வங்களை வணங்குவது சிறந்தது. அஷ்டமியில் சிவபெருமானின் புருவ மத்தியிலிருந்து வெளிவந்த சிவ ரூபமாக, பைரவர், ஏவல் பில்லி சூனியங்கள் போன்றவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்ட உக்கிர காளி, நீலி, துர்க்கை, பிரத்தியங்கரா மற்றும் கன்னி தெய்வங்களை வணங்குவது நற்பலனைத் தரும். அஷ்டமி திதியில் இந்த ஆக்ரோஷமான தெய்வங்களை வணங்கி, அவர்களை நம்முள் வசியமாகினால், நாம் கேட்டதை அள்ளி தரும் ஆற்றல் கொண்டது. முக்கியமாக திருவண்ணாமலை ஸ்ரீ கால பைரவர் மற்றும் பைரவப்பட்டியில் உள்ள பைரவருக்கு அஷ்டமியில் சென்று வழிபடுவது சிறப்பு.
காரியங்களை வெற்றியடைய செய்யும் அஷ்டமி திதி...
முக்கியமாக ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமான ஒன்று. ஒருவரால் ஏற்படும் பலவீனங்களை அஷ்டமி திதியின் மூலமாக வெற்றியாக மாற்றமுடியும். அஷ்டமியில் உபவாசம் இருந்து, சிவபெருமானை போற்றி துதி பாடுபவன் மற்றும் சிவபுராணத்தைப் படிப்பவன் சகல சௌபாக்கியங்களையும் அடைவான். அதுவும் காரியத் தடை, எம பயம் அனைத்திற்கும் ஒரு தீர்வு கிட்டும். அஷ்டமியில் குமிட்டி காயை சுற்றிப்போட்டால் முடக்கு தோஷம் மற்றும் திருஷ்டி விலகும். நிறையப் பேருக்கு முன்னோர்களின் திதி தெரியாமல் இருக்கும். அவர்கள் ஆடி, தை அமாவாசை மற்றும் மாளயபட்சத்தில் தர்ப்பணங்கள் செய்வார்கள். இது தவிர அஷ்டமி திதி மற்றொரு வழி ஆகும். முன்னோர்களின் ஆசி பெற, பிதூர் சாபம் போக, அஷ்டமியிலும் எள்ளும் நீரும் கலந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணங்கள் மற்றும் திவசம் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. அவற்றின் பெயர்கள்...
சித்திரை : ஸ்நாதனாஷ்டமி
வைகாசி: சதாசிவாஷ்டமி
ஆனி : பகவதாஷ்டமி
ஆடி: நீலகண்டாஷ்டமி
ஆவணி: ஸ்தானு அஷ்டமி
புரட்டாசி: சம்புகாஷ்டமி
ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி
கார்த்திகை: காலபைரவாஷ்டமி
மார்கழி: சங்கராஷ்டமி
தை: தேவதாஷ்டமி
மாசி: மகேஸ்வராஷ்டமி
பங்குனி: திரியம்பகாஷ்டமி
எடுத்துக்காட்டாக ஒளிக்கதிர் பிரகாசம் அதிகம் உள்ள மேஷத்தில் சூரியன் வரும் நாள் சித்திரை. உலகைக் காக்கும் பொறுப்பை இந்த ஸ்நாதனாஷ்டமியில் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய நாள் கோதுமையால் செய்யப்பட்ட ஆகாரத்தை மட்டும் உண்டு விரதம் இருந்தால் அனேக நற்பலன்கள் கிட்டும் என்பது விதி. அடுத்ததாக வைகாசி மாதம் வரக்கூடிய சதாசிவாஷ்டமியில் சுத்த ஜலம் மட்டும் உட்கொண்டு சிவபுராணம் படிக்க வேண்டும். இது கடன் தீர உகந்த திதி. பன்னிரண்டு மாத அஷ்டமியில் விரதம் பகவானை தியானிப்பவன் முக்தி அடைவான் என்பது விதி.
என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை சுத்தமான நல்லெண்ணெயில் நான்கு முகம் கொண்ட செளமுக விளக்கை ஏற்றி, செவ்வரளி மலர்களைச் சூட்டி, உளுந்து வடை, வெல்ல பாயசம், செவ்வாழை மாதுளை பழங்களை நிவேதனம் வைத்து வழிபடுவதன் மூலம் கர்ம வினைகள் நீங்கும். இவற்றில் சௌமுகம் என்பது நான்கு வேதங்கள், நான்கு வாழ்க்கை நிலைகளை (பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், மற்றும் சன்னியாசம்) குறிக்கும். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி 'கால பைரவ ஜெயந்தி' சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
vaideeshwra2013@gmail.com
தொலைபேசி- 8939115649
In this article, we will learn about the strengths and weaknesses of those born on the Ashtami tithi, what they should do, and what they should avoid.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.