

வளர்ப்பு பிராணிகள் என்பது நமக்கு நன்மையையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளி தரும் என்பது நிதர்சனமான உண்மை.
நாய் காவல் தெய்வமாகவும், கால பைரவர் அம்சமாக கருதி நம் வீட்டில் வளர்ப்போம். அதேபோல் பூனை என்றவுடன் கெட்ட சகுனத்தை மட்டுமே பார்ப்போம். அதனால் நிறையப் பேர் அதனை வீட்டில் வளர்க்க மாட்டார்கள். பூனைகள் உலகெங்கிலும் செல்லப் பிராணிகளாகவும் உள்ளன. பூனைக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் கெட்ட கர்மாவை நீக்கும் தன்மை உண்டு. பூனைகள் ஒரு வீட்டில் உள்ள தீய சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களை உணர்ந்து அவற்றை உறிஞ்சி, நேர்மறை ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டவை. நமக்கு ஏற்படும் துன்பங்களை எளிதாக முன்பே அறியக் கூடிய தன்மை நம் வளர்ப்பு பிராணிகளுக்கு உண்டு. முக்கியமாகப் பூனைக்கு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பூனை வளர்ப்பதால் அதிக நன்மைகள் உண்டு, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பூனை குறுக்கே வந்தால் அது ஒரு அபசகுனம் என்று சொல்லுவார்கள். அதுவும் நமக்கு ஒரு எச்சரிகை மணி என்று புரிந்துகொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக நாம் போகும்போது பூனை குறுக்கே வந்தால் "நாம் செல்லும் வேலையில் பொறுமை தேவை" என்று எச்சரிக்கை சொல்லும் விதமாக இருக்கும். அதுவும் அன்றைய தினம் செய்யும் பிரயாணம் யோசித்துச் செல்ல வேண்டும். அந்த வேலையைத் தள்ளிப் போட வேண்டும். அதுவே தினந்தோறும் செல்லும் அலுவலக வேலையாக இருந்தால், ஒரு நிமிடம் அமர்ந்து பிறகு செல்ல வேண்டும். இதுவே நமக்குப் பூனை உணர்த்தும் சகுன செயல். பூனை தொடர்ந்து சத்தம் போட்டால் எதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். பூனை எதிர்மறை ஆற்றலை உணரும் திறன் அதிகம் உண்டு. தீய சக்தி இருக்கும் இடத்தில் பூனை இருக்காது. பாரம்பரிய ஜோதிடக் கருத்துகளோடு சேர்த்து, இன்றைய ஆன்மிக-உளவியல் பார்வையில் பூனை நேர்மறை ஆற்றல் கொண்ட உயிர் என்றே அதிகமாகப் பார்க்கப்படுகிறது.
நம்மைத் தேடி வீட்டுக்குள் பூனை வந்தால் செல்வம் உங்களைத் தேடிவரும், குடும்பத்தில் அமைதி, பாதுகாப்பு உணர்வு மற்றும் நல்ல செய்திகள் வரும் என்று உணர்த்தும். வீட்டில் சண்டை, பதட்டமற்ற சமநிலை நிலவ, அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத வீட்டு விலங்கு இருப்பது நன்மையே. அதுவும் பூனை அருகில் இருப்பது அமைதியை உண்டாக்கும். வீட்டில் பூனை குறுக்கு நெடுக்கும் ஓடி, விளையாடுவதால் நாமும் அதனோடு சுறுசுறுப்புடன் இருப்போம். நாம் கிரகங்களுடன் பூனை வளர்ப்பு பற்றியும் அவற்றின் சூட்சுமத்தையும் பார்ப்போம். தொடர்ந்து ஒரு வீட்டிற்குப் பூனை வருவது என்றால் அங்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். அதாவது மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்யத் தயாராக உள்ளார் என்று அர்த்தம்.
சந்திரன் தாக்கம் அதிகம் கொண்ட ஜாதகர்கள் மற்றும் ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்கள் வேலையில் தெளிவற்ற நிலை, பதட்டம், குழப்பங்கள் அதிகமாக இருக்கும், இவர்களின் மனதின் ஓட்டம் சீராக இருக்க, குழப்பம் தெளிவு பெறப் பூனை வளர்ப்பு அவசியம் தேவை. ஒரு வீட்டில் வளர்க்கும் பூனை திடீர் என்று இறந்துவிட்டால் அது நமக்கு வந்த ஆபத்தைத் தடுத்து அவை பெற்றுக் கொண்டதாக அர்த்தம்.
ஜாதகத்தில் சாய கிரகமான ராகு–கேதுக்களின் தொடர்பு பெறும் பொழுது, ஜாதகரின் செயல்கள் மற்றும் உடல் பாதிப்புகள் மறைமுகமாக வெளிக்காட்டும். அதேபோல் பூனை ஒரு எச்சரிக்கையின் அறிகுறியைச் சூட்சமமாக வெளிப்படுத்தும். கேதுவின் காரகத்துவங்களான ரகசியங்கள், மற்றும் மறைக்கப்பட்ட மர்மமான குணங்களும் சூட்சுமங்களும் பூனைக்கும் உண்டு. பூனைகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும், அவற்றின் செயல்கள் சில நேரங்களில் மர்மமாகத் தோன்றும், இது கேதுவின் மறைமுகத் தன்மையைக் குறிக்கும்.
வாஸ்துப்படி பூனைகளை வீட்டில் வளர்ப்பது செல்வத்தையும், அதிர்ஷ்டத்தை மற்றும் வீட்டின் வளத்தைக் கொண்டு வரும். சனிதசையில் பிரச்னைகளை சந்திப்பவர்கள் மற்றும் சனியின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் கருப்பு பூனைக்குப் பால், கஞ்சி, மற்றும் அதற்கு ஏற்றார் போல் உணவு கொடுப்பது நற்பலனை ஏற்படுத்தும். பூனைக்கு அன்பு, கருணை காட்டுதல், உணவு போடுதல் நம்முடைய அனைத்து துர்கர்மாவை போக்க ஒரு சிறு வழியாகும். பூனை செல்ல பிராணி மட்டும் அல்ல, வீட்டின் சுப ஆற்றலை அதிகப்படுத்தும் மற்றும் வீட்டிற்கு நல்ல அதிர்வுகளைத் தரும்.
வீட்டைச் சுற்றி பில்லி சூனியம் ஏவல் மற்றும் தீய துர் சக்தி இருந்தால் அவை அருகில் வராமல் தடுக்கும். நம்முள் மன அழுத்தம், பொறாமை, தீய எண்ணங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். முக்கியமாக ஒவ்வாமை உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பூனைகளை முறையாகப் பராமரிக்க நேரமும் வசதியும் இல்லாதவர்கள் பூனை வளர்ப்பதைத் தவிர்க்கவும்.
vaideeshwra2013@gmail.com
தொலைபேசி - 8939115647
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.