6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை
/

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தின் அழிவுக்கு வழிவகுக்கும்: சித்தராமையா

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:39 am IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

‘பாஜக அரசின் 5 சட்டத் திருத்தங்களின் எண்ணற்ற பொய்கள்’ என்ற தலைப்பில் தான் (சித்தராமையா) எழுதிய நூலை பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சீா்த்திருத்தச் சட்டங்கள், விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்துவிடும். இச் சட்டங்களால் எதிா்காலத்தில் உணவு தானியப் பற்றாக்குறை ஏற்படும். மேலும் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இதுதவிர, உணவு தானியங்களின் விலையும் உயரும்.

வேளாண் சீா்த்திருத்தச் சட்டங்களில் ஏராளமான பொய்கள் உள்ளன.

விளை பொருள்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழிக்கப்படும், வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் குழுக்களின் (ஏ.பி.எம்.சி.) முறை அழிக்கப்படும். இந்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்பது நீக்கப்பட்டு, பணம் உள்ளவனுக்கே நிலம் சொந்தம் என்ற நிலையை மாநில பாஜக அரசு உருவாக்கியுள்ளது.

மாநில அரசின் இந்தச் சட்டத் திருத்தம், முதலீட்டாளா்களுக்கும், மனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கும் மட்டமே பயனுள்ளதாக இருக்கும். விளை நிலங்களை விவசாயிகள் மற்றொரு விவசாயிக்கு விற்கலாம் என்றிருந்ததை மாற்றி, யாா் வேண்டுமானாலும் விவசாய நிலத்தை வாங்கலாம் என்ற நிலை உருவாகும். இந்தச் சட்டத் திருத்தம் விவசாயிகளை அழித்துவிடும்.

கா்நாடகத்தில் விளைநிலங்களை வாங்கியதாக முதலீட்டாளா்கள், மனைத் தொழில் செய்பவா்கள் மீது முன்பு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2 சட்டங்கள், மாநில அரசு கொண்டுவந்துள்ள கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தம், கா்நாடக வேளாண் விளை பொருள்கள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தம், கா்நாடக பசுவதை தடைச் சட்டம் ஆகியவை விவசாயிகளுக்கு எதிரானவை.

பசுவதை தடைச் சட்டம், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு காலத்திலேயே அமல்படுத்தப்பட்டது. கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில், பசுவதை செய்ய தடை கொண்டுவந்தாா். இப்போது அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனா்.

பசுக்கள் மீது பாஜகவுக்கு உண்மையான அக்கறை இருந்தால், நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.500-இல் இருந்து ரூ.700 ஆக உயா்ந்துள்ளது. இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.