‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ 

வீரசிங்கத்தார் சாமான் வாங்குவது ஒரு தனிக்கலை. கத்தரிக்காயென்றால் ஊதா நிற லெபனீஸ் கத்தரிக்காய், கிறீஸ்லாந்து பால் வெண்டி, வியட்நாம் கட்டைப் பாவற்காய், இலங்கை பச்சை மிளகாய், கோயம்பத்தூர் உலாந்தா 
asikantharajas sellappakkiyam mamiyin muddik kaththarikkai book review
asikantharajas sellappakkiyam mamiyin muddik kaththarikkai book review
Published on
Updated on
3 min read

சுஜாதா தமது ‘கற்றதும் பெற்றதுமில்’ இப்படி எழுதி இருந்தார் ஒருமுறை.. அதாவது இனிமேற்கொண்டு தனக்கு புத்தகம் அனுப்புபவர்கள் சமையல் குறித்த புத்தகங்களை அனுப்பினால் அதை வாசிக்க தனக்கு மிகவும் இஷ்டம் என்று. இதை சுஜாதாவின் மொழியில் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் சொன்னதின் அர்த்தம் இது தான். அந்த நேரத்தில் அவர் கையில் ஆசி.கந்தராஜாவின் ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ புத்தகம் கிடைத்திருந்தால் ஒருவேளை உச்சி முகர்ந்திருப்பாராயிருக்கும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

  • ‘மாமிக்கு ஊர் அரிசிப் புட்டுக்கு, நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியல் வேண்டும். பொரியலுக்கு மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் தோதுப்படாது’
  • ‘ஒரு வாய்க்குள் அடங்கக்கூடிய இனிப்பான சின்னச்சின்ன மோதகங்கள் அவை, பொரித்த மோதகங்கள் ஒவ்வொன்றாக வாய்க்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தன’
  • வீரசிங்கத்தார் சாமான் வாங்குவது ஒரு தனிக்கலை. கத்தரிக்காயென்றால் ஊதா நிற லெபனீஸ் கத்தரிக்காய், கிறீஸ்லாந்து பால் வெண்டி, வியட்நாம் கட்டைப் பாவற்காய், இலங்கை பச்சை மிளகாய், கோயம்பத்தூர் உலாந்தா முருங்கை, பிஜி நாட்டு புடலங்காய் என அவரது காய்கறிப் பட்டியல் கோளமயமாகும்.
  • இந்த மனுஷன் மூண்டு நேரமும் லெபனீஸ் ‘ஷவர்மா’ சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏத்திக் கொண்டு வரப்போகுது’ - என பணி நிமித்தம் மூன்று ஆண்டுகள் லெபனான் செல்லும் வீரசிங்கத்தைப் பற்றி அவரது மனைவி கொள்ளும் கவலை.

இப்படி புத்தகத்தில் ஏராளமான ருசிகரத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

வாசிப்பு இன்பம் என்பது எல்லாப் புத்தகங்களிலும் கிடைத்து விடாது.

சில புத்தகங்கள் அரிதான தின்பண்டங்கள் போன்றவை.. சேமிப்பில் வைத்துக் கொண்டு அவ்வப்போது நினைக்கும் போதெல்லாம் எடுத்தெடுத்து வாசித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும். அப்படியொரு புத்தகம் தான் இது. புனைவுக் கட்டுரை வகையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் அளித்த வாசிப்பு இன்பம் அலாதியானது. இத்தனைக்கும் புத்தகத்தை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. அலுவலகத்தில் ஆண்டுக்கொருமுறை எடிட்டோரியலில் மூட்டை மூட்டையாகச் சேர்ந்து விட்ட புத்தகங்களை அள்ளிக் கொடுத்து ஆரவமிருப்பவர்கள் எடுத்து வாசித்துக் கொள்ளுங்கள் என்று தருவார்கள். அப்படி எனக்கு தினமணியில் கிடைத்த புத்தகங்களில் ஒன்று இது. நேற்றைய ஞாயிற்றை பூரணப்படுத்தி விட்டது. 

புத்தக ஆசிரியர் ஆசி.கந்தராஜா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பூங்கனியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர். பிறந்தது ஈழத்தில்.. அவரது எழுத்துக்களில் வேரோடியிருக்கிறது மண் வாசனை. சிற்சில இடங்களில் பொருளறிய ஏலாவிட்டாலும் கூட வாசிக்க அத்தனை சுகம். 

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 8 புனைவுக் கட்டுரைகள் உள்ளன.

முதற்கட்டுரையில் சிவன் கோயில் வாசலில் விஸ்வரூபம் எடுக்கும் செல்லப்பாக்கியம் மாமியைக் காணும் போது மனம் பேச்சற்றுத் திகைக்கிறது. இப்படியும் மனிதர்களா என்று!

தானாக கண்கள் அடுத்த சுவாரஸ்யத்திற்கும், ஆச்சர்யத்திற்காகவுமாக அடுத்த கட்டுரைக்குத் தாவுகின்றன. அங்கே காத்திருக்கின்றன ஒட்டுக் கன்றுகள். நாகமுத்து பரியாரிக்கும், அடுத்த வீட்டு அன்னம்மாவுக்கும் வளவுச் சண்டை முற்றி அது செல்ல நாய்க்கு விஷம் வைத்துக் கொல்வதில் முடிகிறது. நாயைக் கொன்று எலுமிச்சை மரத்தடியில் புதைத்தால் மரம் காய்த்துத் தள்ளும் என்று முன்னெப்போதோ எங்கோ வாசித்த நினைவு. இங்கே என்னடாவென்றால்.. மரம் காய்த்துத் தான் தள்ளியது எலுமிச்சைகளை அல்ல நாரத்தைகளை! இதென்னடா அதிசயம் என்று பார்த்தால் அதற்குள் இருக்கிறது ஒட்டுக்கன்றுகளின் நுட்பம். இப்படி கட்டுரைக்கு கட்டுரை தனது துறை சார்ந்த அறிவை எளியோர்க்கு மிக எளிதில் விளங்கச் செய்யும் வண்ணம் அருமையாக விவரித்துக் கொண்டு செல்கிறார் ஆசி.கந்தராஜா. 

  • கறுத்தக் கொழும்பான் மாம்பழம்
  • செண்பகவரியன் பலாப்பழம்
  • யாழ்ப்பாணத்து இதரை வாழை
  • மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் 
  • குலையை ஈன்ற பின் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் வாழையாக வேதவல்லி அக்காவின் கதை... 
  • ஆஸ்திரேலியாவிலும் வாழை இலையில் வக்கணையாகச் சாப்பிட்டுப் பழகிய வீரசிங்கத்தாரின் லெபனான் பயணம்...

- இப்படி எதை விடுவது எதை சிலாகிப்பது என்று தெரியவில்லை.

வீரசிங்கத்தின் பயணத்தின் ஊடே லெபனானியர்களைப் பற்றி கட்டுரை விரிகிறது. கிழக்கு ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படக்கூடிய லெபனானில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என சுவை பட விவரிக்கும் போது நமக்கும் கூட இந்த ஒற்றை வாழ்வில் இங்கெல்லாம் ஒரு முறை சென்று திரும்ப வாய்ப்புக் கிடைத்தால் தகுமே என்று கற்பனையில் சிந்தை விரிகிறது. 

‘விலாங்கு மீன்கள்’ எனும் கட்டுரையில் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளான அபோர்ஜினிகளுக்கான நில உரிமைகளை வெள்ளை அபோர்ஜினி கலப்பினக் குழந்தைகள் தங்களுடையதாக்கிக் கொண்டு அவர்களை இன்றளவும் வஞ்சிப்பதைக் காணும் போது மனம் கசங்குகிறது.

‘மைனாக்கள்’ என்ற கட்டுரையில் பிஜி தீவில் தமிழர்கள் வாழ்க்கை பற்றி விவரிக்கிறார். தமிழர்கள் தான் என்றாலும் அங்குள்ளவர்கள் பேசிக் கொள்ள பிஜி இந்தி என்றொரு புது பாஷை இருக்கிறது என்பது வியப்பூட்டுகிறது. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு அங்கு வாழ்தல் நிமித்தம் நாடு கடந்த குடும்பமொன்றில் இளவல் இந்தியா வந்து செல்ல ஆசைப்படுவதாகக் கட்டுரை சொல்லும் போது புலம் பெயர்ந்தவர்களின் சொல்லொணாத் துயரை உணர முடிகிறது.

இப்படி கட்டுரைத் தொகுப்பு முழுவதுமே வெறுமே தான் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே கேள்விகளுக்கு பதில் என்பது போல விளக்காமல் ஒரு சிறு கதைசொல்லும் உத்தியோடு சுவை படச் சொல்லிச் செல்வதில் கவனம் ஈர்க்கிறார் ஆசிரியர். உயிரித் தொழில்நுட்ப விஞ்ஞானியொருவருக்கு 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளைப் பற்றிய விளக்கங்களாகட்டும் என் பி கே உரம் பற்றிய விவரிப்பாகட்டும், பிளாஸ்டிக் அரிசி பற்றிய சந்தேகத் தெளிவாகட்டும், மீனில் நடுத்துண்டா, வால் துண்டா என்று சுவைக்கத் தோதான அறிவியல் விளக்கமாகட்டும் அத்தனையும் குழந்தைகளுக்கு கதை சொல்வது போலவோ அல்லது நண்பர்களுடன் இணைந்த மாலை நேர அரட்டை போலவோ எளிமையும் இதமுமாக சுவைபட விரிகின்றன.

அதனால் தான் வாசித்த மாத்திரத்தில் இதைப்பற்றி வாசகர்களிடம் பகிரத் தோன்றியது.

செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் புத்தகம்
செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் புத்தகம்

புத்தகம் செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்
ஆசிரியர்: ஆசி.கந்தராஜா
வெளியீடு: ஞானம் பதிப்பகம்
விலை: ரூ400

அடுத்து வரவிருப்பது...

விழுப்புரம் கோ. செங்குட்டுவனின் ‘சமணர் கழுவேற்றம்’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com