Enable Javscript for better performance
AMISH TRIPATHI'S SITA - WARRIOR OF MITHILA BOOK REVIEW- Dinamani

சுடச்சுட

  

  அமீஷ் திரிபாதியின் 'சீதா - மிதிலாவின் போர்மங்கை’: அதி சுவாரஸ்யங்கள் மற்றும் புதிர் முடிச்சுகளுடனான பயணம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 01st November 2019 03:34 PM  |   அ+அ அ-   |    |  

  sita_warrior_of_mithila

   

  சீதாவை போர்மங்கையாக உள்ளம் வெகு எளிதில் ஏற்றுக் கொண்டது. அதை விட அந்த நாவலில் மிகப் பிடித்தமாயிருந்தது சீதையின் வளர்ப்புத் தாய் சுனைனா, தன் கணவரை ஜனகா என்று பெயர் சுட்டி அழைத்தது. ஆம், மிதிலையில் மட்டுமல்ல இந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களில் பலரும் கணவனைப் பெயர் சுட்டியே அழைக்கிறார்கள். இதிகாச காலத்தில் பெண்ணின் நிலை அப்படியொன்றும் அடக்குமுறைக்கு உட்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. சீதா, சீதாவின் தாய் சுனைனா, அவளது மெய்க்காப்பாளரும் காவல்படைத் தலைவருமான சமீச்சி, 

  நம்மில் பலருக்கும் தெரிந்த ராமாயணக் கதை என்பது 1987 ல் வெளிவந்த ராமானந்த சாஹரின் தூர்தர்ஷன் ராமாயணம் மட்டுமே! எனக்கெல்லாம் ராமர், சீதா  என்றாலே சட்டென நினைவுக்கு வருவது அருண்கோவிலும், தீபிகாவும் மட்டுமே! அந்த ராமாயணத்தில் ராமரும், சீதையும் அதிகம் பேசவே மாட்டார்கள். ராவணனால் கடத்தப்பட்ட பிறகு சீதைக்கு சதா சோகம் ததும்பும் முகம் வேறு. 80 களின் குழந்தைகள் அறிந்தது இப்படிப்பட்ட சீதையையே!

  உண்மையில் வால்மீகி படைத்த சீதை இப்படித்தான் இருந்தாரா? என்றால் இல்லையென்கிறார்கள் மூலநூலை வாசித்தவர்கள். 80 களில் வந்த ராமாயணம் வால்மீகி ராமாயணத்தைக் காட்டிலும், துளசி தாசர் எழுதிய ‘ராம சரித மானஸ்’ எனும் புத்தகத்தைத் தழுவியே எடுக்கப்பட்டிருந்தது. வால்மீகியின் சீதை போர்மங்கையாக இல்லாத போதும் மிக அழுத்தமான உறுதியான உள்ளம் கொண்டவளாக இருந்திருக்கிறாள். ஆனால், துளசி தாசரும், கம்பரும் படைத்த சீதைகள் அழகே உருவாகவும் பயந்து மருண்ட மான்குட்டிகளைப் போலவும் தான் நமக்குள் பாடம்.

  உண்மையில் சீதை எப்படிப் பட்டவள்? 

  வால்மீகியின் சமஸ்கிருத மூல நூலுக்கு அடுத்தபடியாக மொத்தம் 300 விதமான ராமாயணங்கள் இருக்கின்றன. இந்தியா தாண்டியும் ராமாயணம் பயணித்திருக்கிறது. பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, நேபாள், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், மங்கோலியா, வியட்னாம், சீனா என பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான ராமாயணங்கள் புழங்குகின்றன. அவற்றின் வால்மீகி ராமாயணம் மற்றும் அத்புத ராமாயணம் எனும் இரண்டு நூல்களின் தாக்கத்திலும் மேலும் சமஸ்கிருத பண்டிதரான தனது தாத்தா அளித்த தகவல்களின் துணையோடும் ராமாயணத்தைப் பற்றிய மிக நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் அமீஷ் படைத்தது தான் ‘சீதா - மிதிலாவின் போர் மங்கை’ எனும் இந்த நாவல். தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பு வாசிக்க எளிமையாக இருந்தாலும் ஹனுமனை சீதா ‘ஹனுண்ணா’ என்று விளிப்பதை சராசரி சம்பிரதாய திராவிட மனம் ஏற்கத்தான் இல்லை. ஏனெனில் நாமறிந்த ராமாயணத்தில் ஹனுமனுக்கு, சீதாபிராட்டி அன்னை ஸ்வரூபிணி.

  அமீஷின் நாவலில் நாரதரும், மந்தரையும் இந்துஸ்தானத்தின் மாபெரும் வர்த்தகர்கள் எனும் சித்தரிப்பைக் கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் இந்தியா என்று குறிப்பிடுவது மனம் நெருடச் செய்கிறது. ஏனெனில் ராமாயண காலத்தில் இந்தியா என்ற பதம் இருந்ததா என்ன? அத்துடன் விஸ்வாமித்திரர் சார்ந்த மலயபுத்ர குழுவினர் தேர்வின்படி சீதையே எட்டாவது விஷ்ணு அவதாரம் என்பதும் அந்த முடிவை வசிஷ்டர் ஏற்றுக்கொள்ளாமல் அவரிஷ்டத்துக்கு அவரும் ஒரு விஷ்ணுவைத் தேர்ந்தெடுக்க முயல அந்த விஷ்ணுவே சாட்ஷாத் ஸ்ரீஇராமன் என்பதும் கொஞ்சம் த்ரில்லிங்காகத்தான் இருந்தது. விஸ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்குமான ஜென்மப் பகை உலகறிந்தது. இருவரும் குருகுல நண்பர்கள் என்கிறது அமீஷின் நாவல்.

  80 களின் ராமாயணத்தின் படி நமக்குச் சித்தரிக்கப்பட்டது என்னவென்றால் வசிஷ்டரைப் போல பிரும்மரிஷி பட்டம் பெற முடியவில்லை என்பதால் அவர் மீது துவேஷம் கொண்டிருந்தவரான ராஜரிஷியே விஸ்வாமித்திரர். பிறப்பால் சத்ரியரான விஸ்வாமித்திரர் திரிசங்கு மன்னன் தன் மெய்யுடலுடன் சொர்க்கம் புக அருளுகிறார். இதை தேவர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் திரிசங்கு சொர்கம் புக முடியாமல் நடுவாந்திரத்தில் தலைகீழாக அலைய நேரிடுகிறது. சொர்கத்திற்கு மெய்யான உடலுடன் புகக்கூடிய சக்தி பிரும்மரிஷிகளுக்கே உண்டு என்பதை அறிய நேரும் விஸ்வாமித்திரருக்கு வசிஸ்டரின் மேல் ஆத்திரம் மிகுந்து கரைபுரண்டு ஓடுகிறது. இந்தப் பகை தனிக்கதை. வசிஸ்டருக்கும், விஸ்வாமித்திரருக்குமான பகைக்குக் காரணம் நந்தினி எனும் காமதேனு பசு என்று கூட ஒரு கதை உண்டு. 

  அமீஷின் கதையில் வரும் நந்தினி பசுவல்ல. இவர்கள் இருவருடனும் குருகுலத்தில் ஆசிரியையாக இருந்த ஒரு பெண்மணி. அவரால் தான் வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திரருக்கும் இடையே பகை மூள்கிறது. நாவலின் இந்த முடிச்சு இந்த இரண்டாம் பாகத்தில் அவிழ்க்கப்படவில்லை. ஒருவேளை அது இந்தத் தொகுதியின் அடுத்த நாவலான ராவணன் - ஆரியவர்த்தத்தின் அனாதை எனும் தொகுதியில் ராமச்சந்திரா, சீதா எனும் முதலிரண்டு தொகுதிகளில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட புதிர் முடிச்சுகள் அத்தனையுமே அவிழ்க்கப்படலாம். நாவலுக்குள் இந்தப் புதிர்களுக்கான தேடலுடன் பயணிப்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

  ராவணனின் புஷ்பக விமானத்துக்கான மூலப்பொருள் தாமிரவருணி பாய்ந்து குறுகும் உலோகச்செறிவுடன் கூடிய கேரள குகைகளிலிருந்து கிடைத்தவை என்பதும் அதை ராவணனுக்கு விற்றவர்கள் அல்லது பண்டமாற்று செய்து வந்தவர்கள் விஸ்வாமித்திரர் தலைமையிலான மலயபுத்திரர்கள் என்பதும் ஆச்சர்யமான தகவல்கள். இதில் உண்மை எத்தனை சதவிகிதம் கற்பனை எத்தனை சதவிகிதம் என்று தெரியவில்லை. அத்தனையிலும் ஆச்சர்யத்தைக் கூட்டுவது விஸ்வாமித்திரரும், ராவணனும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது :)

  எல்லாமிருக்கையில் சீதாவை பூமிப் பிளவில் இருந்து காப்பாற்றும் அந்தப் ராட்சதப் பருந்து யார்?

  பருந்து முக அமைப்பு கொண்ட ஜடாயூ மலயபுத்திரர்களின் காவல் தலைவரானது எப்படி? ஜடாயூவின் வர்ணிப்பில் தங்களுக்கான நியாயமான கொள்கைகளுடன் பம்பாய் அருகே கூட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் இந்திரர்கள் யார்? அவர்களது தற்கொலையின் பின்னேயே லங்காதிபதி ராவணனின் படையிலிருந்து ஜடாயூ தன்னை துண்டித்துக் கொள்கிறார். அமீஷின் சித்தரிப்பின் படி இந்திரர்கள் ஆரிய வர்த்தத்தின் மிகச்சிறந்த வர்த்தகர்களாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுக்கு உரித்தான நியாயங்களை கடக்க விரும்பாது, போரில் ஆர்வமற்ற இந்திரர் குழு கொடுங்கோள் ராவணப்படையுடன் போரிட மனமற்று சிதை வளர்த்து பத்மாவத் திரைப்படத்தில் ராணி பத்மாவத் கூட்டுத் தற்கொலை செய்து கொள்வதைப் போல சிதையில் இறங்கி விடுகிறார்கள். இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்ன? வரலாற்று ஆய்வு நூல்களின் படி இந்திரர்கள் பலர். பல்வேறு காலகட்டங்களில் வாழும் அவர்கள் அத்தனை பேரும் ஆரியபோர்த்தலைவர்கள். அவர்களை வர்த்தகர்களாக எப்படி இனம் காண முடியும்?! அதை விட நாவலில் என்னை ஈர்த்த அம்சம் விஷ்ணுவை வணங்குபவர்களாக அல்ல விஷ்ணு அம்சத்தையே உருவாக்கக்கூடியவர்களாக ரிஷிகள் அந்தக்காலத்தில் இருந்த நிலை!

  ஆக விஷ்ணு அம்சம் என்பது இன்றைய மடாதிபதி பதவி போல சகல கலைகளிலும் வல்லவர்கள் யாரோ? எவரொருவருக்கு இந்த இந்துஸ்தானத்தின் மீது பெரும்பற்று இருக்கிறதோ? எவரொருவருக்கு இகபர ஆசைகளற்றுப் தேசப்பற்று மிகுந்திருக்கிறதோ அவருக்கே உரியதென்று நாவல் சொல்கிறது. அந்தப் போராட்டத்தில் இரண்டு துறவிகளின் தேர்வுகளும் சோடையற்றுப் போய் ஒன்றிணைவதே சீதாராம கல்யாணமாகக் காட்டப்படுகிறது. அதுவும் கூட சீதாவின் பிடிவாதத்தால் என்பதாக நாவல் செல்கிறது.

  விஸ்வாமித்ரர் சீதாவை ஏழாம் விஷ்ணுவாக்க முயல்கிறார்

  வசிஷ்டர் அயோத்தியின் ராமனை ஏழாம் விஷ்ணுவாக்க முயல்கிறார்.

  ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாகச் செயல்படலாம் என்று முடிவெடுத்தது இரு முனிவர்களின் திட்டங்களிலுமே இல்லை.

  அது மாதா சீதாவின் முடிவாகக் காட்டப்படுகிறது.

  அமீஷின் சீதா முற்றிலும் வித்யாசமானவள். இவளை வால்மீகியின் படைப்பிலோ, கம்பரின் படைப்பிலோ காண்பது அரிது. இது துளசிதாஸரின் அத்புத ராமாயணத்தில் கண்டது. அதை அப்படியே விரிவாக்கி சீதாவை கழி கொண்டும், வில் அம்பு கொண்டும் போரிடச் செய்திருக்கிறார் அமீஷ். 

  ஒருவேளை அடுத்த பாகத்தில் சீதா, ராவணனின் மகள் என்று கூட சொல்லி விடுவாரோ என்றொரு ஐயமெழுகிறது. அதனாலென்ன அப்படியும் ஒரு கதை உலவத்தானே செய்கிறது இங்கு. ஆக சீதை பிறந்த கதை என்றுமே புதிர்!

  கதையில் மூளைச்சலவை செய்யப் படுகிறோம் என்ற உணர்வைத் தந்த பாகங்கள் சில உண்டு, அவை;

  மிதிலாவின், அயோத்தியின் வீழ்ச்சிக்கு காரணமாக முன் வைக்கப்பட்டவை நாட்டு மக்களிடையே மிகுந்து போன செளகர்ய பாவங்கள். ஆன்மீக நிச்சலன மனநிலை. மக்கள் யாவரும் ஒற்றுமையுடன் இன்புற்றிருக்க வேண்டுமே தவிர போரிடுதல் தவறு எனும் மனப்பான்மை. நியாயப்பூர்வமான கொலைகளின் மீது பேரார்வம் கொண்டவர்களான வீரர்களைப் போரிட விடாமல் தத்துவம் பேசி சாத்வீகர்களாக மாற்ற முனைந்த தலைவர்கள். இதனால் வீரர்களிடையே குற்ற உணர்வு மீதேறி அந்நியர் படையெடுப்புகளின் போது பாதுகாப்புக்கான சமநிலை குறைகிறது. அதனால் தான் கொடூர ராவணப்படையிடம் கரச்சாபாவில் தசரதர் தோற்க நேரிட்டது என்று விரிகிறது தகவல். அப்படியானால் நாட்டின் பாதுகாப்புக்கு போர் வேண்டும், போர் நிச்சயம் வேண்டும் எனும் கொள்கையை இந்த நாவல் வலியுறுத்துகிறது.

  அடுத்ததாக சீதாவின் தூர தூரமான கொண்ட இந்தியப் பயணங்கள். அமீஷின் சீதா மிதிலை தாண்டாதவள் அல்ல. அவள் ஸ்ரீராம பிரானை மணப்பதற்கு முன்பே மிதிலாவின் பிரதம மந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாள். அவளை அதைச் செய்யத் தூண்டுவது குரு விஸ்வாமித்திரர். அவள் இந்துஸ்தானத்தைச் சுற்றி ஒரு இடம் பாக்கியின்றி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாள். காரணமாக முன்வைக்கப்படுவது ஏழாம் விஷ்ணு பதவிக்குத் தன்னைச் செதுக்கும் முகமாக சீதா பயணிக்கிறாள் என்பதே! பிரதமரின் அந்நிய சுற்றுப்பயணங்களை பகடி செய்வோருக்கான மீச்சிறு பதிலாக இதைக் கொள்ளலாமில்லையா? இதில் நியாயமும் இருப்பதால்.

  சீதாராம வனவாசத்தின் போது வாலியை ஏன் ஜல்லிக்கட்டில் நிற்க வைத்தார்கள் என்று புரியவில்லை. தண்டகாரண்யத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ந்ததாகவும் அதில் கலந்து கொள்ள வந்த வாலியை ஆபத்திலிருந்து காக்க முயன்ற சீதையையும், ராம, லட்சுமணர்களையும் வாலி தவறான புரிதலுடன் எதிரிகளாகப் பாவித்தாற்போன்றும் சித்தரித்திருக்கிறார் அமீஷ். வால்மீகியின் வாலி அசாதாரண திறன் கொண்டவன். அவனது பராக்கிரமம் பற்றி இனி அடுத்த தொகுதியில் விவரிப்பார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சீதா தொகுதியில் வாலிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். வாலியாவது பரவாயில்லை சுக்ரீவனை மருந்துக்கும் காணோம்.

  மொத்தத்தில் அந்தக்கால இந்துஸ்தானம் அரசர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்ததென்றாலும் ஆட்டிப் படைத்தவர்கள் என்னவோ வர்த்தகர்களும், ரிஷிகளும் என்பது நாவலின் ஊடே தெள்ளத்தெளிவாகிறது. அல்லது திட்டமிட்டு அப்படியொரு தோற்றம் உண்டாக்கப்பட்டிருக்கலாம். மன்னர்கள் என்பவர்கள் போர் செய்யப் பணிக்கப்பட்டவர்கள். அவர்கள் பாட்டுக்கு ஒரு பக்கம் போரிட்டுக் கொண்டு நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தட்டும் நாட்டின் நிர்வாகம் மற்றும் குடிமக்கள் நல்வாழ்வுக்காக திட்டங்கள் குறித்த திட்டமிடல்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் வர்த்தகர்களும் ரிஷிகளும். 

  நிற்க!

  இனி சீதாவைப் பற்றிய சித்தரிப்பை மட்டும் கணக்கில் கொண்டால் மிதிலாவின் போர்மங்கையாக சீதா வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம். ராமாயண ரசிகர்கள் ஒரே நாளில் வாசித்து முடித்து விடலாம். மொழிபெயர்ப்பில் இன்னும் கொஞ்சம் வெகுஜனத் தன்மையையும் சாமான்ய பாஷயையும் தவிர்த்திருக்கலாம். ஒருவேளை அது இந்தத் தலைமுறை வாசிப்பாளர்களைக் கவர்வதற்காக என்றாலும் கூட அபத்தமாகத்தான் படுகிறது. இது காவியம். என்னதான் அதை நீங்கள் மாற்றி எழுத முயன்றாலும் ராமபிரான் ஏகபத்தினி விரதன் என்பதை மாற்றி எழுதி விட முடியாதே, அப்படித்தான் காவிய இயல்பை கொல்லாதிருந்திருக்கலாம்.

  மற்றபடி இந்த நாவலில் வரும் சீதா சித்தரிப்பைத் தவிர்த்து பிற கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் ஏதோ ஒரு விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தவும் மக்கள் மனங்களில் எளிதில் ஸ்தாபிக்கவும் வேண்டி  காவியத்தைக் கையில் எடுத்தாண்டாற்போலிருந்தது.

  எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ராமர் வனவாசத்திற்கும் கைகேயியிக்கும் சம்மந்தமே இல்லை என்பதைப் போல கதை நகர்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஸ்வாமித்திரரின் உருவேற்றலில் ராமன் தனது திருமண நாளன்றே மிதிலாவின் மீது போர் தொடுக்கும் ராவணப் படை மீது மஹா தேவரால் தடை செய்யப்பட்ட தெய்வி அஸ்திரத்தை எய்த காரணத்தால் 14 ஆண்டுகள் வனவாசத்தை விரும்பி ஏற்பதாக அமீஷ் கூறுகிறார். இதிகாச ராமன் சட்டத்தின் பிள்ளை என்பதால் சட்டப்படி  தன்னைத்தானே தேசப்பிரஷ்டம் செய்துகொள்கிறார். இதில் கைகேயியிக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதாக இந்தக் கதை பகர்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நமது மூளைகளில் திணிக்கப்பட்ட வகையில் சீதா, ராம வனவாசத்தின் மூலகாரணிகள் கைகேயியும், மந்தரையும் மட்டுமே! ஆகையால் இது ராமாயணத்தை மாற்றி எழுதும் முயற்சி என்பதில் ஐயமில்லை.

  இதை வாசித்த பிறகு மூல நூலான வால்மீகி ராமாயணத்தை வாசிக்கும் ஆவல் மிகுந்திருக்கிறது.

  சமஸ்கிருத ஸ்லோகங்களால் ஆன மூலநூலை ஒட்டிய பிரதி எதுவென்னும் குழப்பம் இருந்தாலுமே ஒரிஜினல் ராமாயணத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகப்பட்டிருக்கிறது என்பதே நிஜம்.

  நீங்களும் வாசித்துப் பாருங்கள் மூன்று தொகுதிகளில் இது இரண்டாம் தொகுதி என்றாலும் தனித்தனியாக வாசிக்கும் போதும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

  பதிப்பகம்: வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்
  ஆசிரியர்: அமீஷ் திரிபாதி
  விலை: ரூ 350 (தமிழில்)
  மொழிபெயர்ப்பு: பவித்ரா ஸ்ரீனிவாசன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai