Enable Javscript for better performance
IN A FOREST , A DEER - WRITER AMBAI'S BOOK|அம்பையின்  ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதை தொகுப்பு!- Dinamani

சுடச்சுட

  

  அம்பையின்  ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதை தொகுப்பு!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 24th February 2018 11:10 AM  |   அ+அ அ-   |    |  

  Ambai1

   

  அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பில் ஏழெட்டு சிறுகதைகள் இருந்தன. அவற்றுள் "அடவி " என்றொரு சிறுகதையை மிக ரசித்து வாசிக்க முடிந்தது.

  வனத்தின் மீது ஆசை கொண்ட பெண் செந்திரு, அவளது கணவன் திருமலை, தொழிலதிபரான கணவன்... புத்திசாலி மனைவி, ஆசைக்கு ஒன்று... ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு அருமையான குழந்தைகள். பணப் பற்றாக்குறை அற்ற நிலை. இப்படியாக பொருளாதார கவலைகள் அற்ற நல்ல வாழ்க்கை என்று தானே தோன்றும் நமக்கு இவர்களைப் பற்றி வாசிக்கையில்.

  ஆனால் இக்கதையில் செந்திரு கணவனிடம் கோபித்துக் கொண்டு அல்லது கருத்து வேறுபாடு கொண்டு தனியே வனத்தை நோக்கிச் செல்கிறாள், வனத்திற்குப் போகிறாள் என்றதும் தனியே கால் நடையாய் என்றெல்லாம் அதீத கற்பனைகள் தேவை இல்லை. கணவனின் இளைய சகோதரன் அவளைக் காரில் கொண்டு போய் காட்டில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில்.விட்டு விட்டு வருகிறான்.

  அங்கே செந்திரு தனது கடந்த காலத்தை வனத்துடனும்... ராமனின் இல்லை... இல்லை சீதையின் கதையுடனும் கலந்து மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு தனக்கான சுய தேடலில் மூழ்குகிறாள். கொஞ்சம் செந்திருவின் கதை... நடுநடுவே சீதையே நேரடியாகச் சொல்வதைப் போல அவளது வாழ்வியல் நிகழ்வுகள். இடையில் அந்தக் காட்டில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் சவிதா பாயி, துர்கா பாயி, சந்திரா பாயி போன்ற சாமானியப் பெண்களுடனான அர்த்தமுள்ள அரட்டை, இப்படி சுமூகமாக சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறார் அம்பை.

  இந்தச் சிறுகதை வாசிக்கும் போது கதையோடு இயைந்த லயமாக உள்ளூற மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த மற்றொரு எண்ணம் "வால்மீகி ராமாயணம் வேறு தளம்... கம்ப ராமாயணம் வேறு தளம்" என்கிற பழைய உண்மை. சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம்... பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை. கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம்.

  செந்திருவுக்கு கணவன் தன்னைத் தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம்... மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள். அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது, அவளோடு நாமும் வனம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் கால் அசதியோ, உடல் அசதியே தோன்றித் தோன்றாமல்!

  செந்திருவின் பால்ய வயது, அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது, இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகிற போக்கில், இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம்! என உணர்த்தும் திண்மை, கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள், கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள்... இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு ‘தன்னிச்சையான மனுஷி’ யாகத்தான் தெரிகிறாள்.

  அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள், மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை, அது தந்தையோ அல்லது கணவனே ஆனாலும் சரி. அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள். திருமலை மீதான காதல் ஆகட்டும்... மன பேதம் கொண்டு வனத்திற்கு போதல் ஆகட்டும் செந்திரு வியப்பளிக்கக் கூடும் சிலருக்கு;

  இந்தச் சிறுகதையில் செந்திரு தன் நினைவுகளாக பகிர்ந்து கொள்ளும் சில விசயங்களும் வியப்பளிக்கவே செய்கின்றன, உதாரணமாக காட்டில் லட்சுமணன் மீது மோகம் கொண்ட சூர்ப்பனகை மூக்கறுத்து அவமானப் படுத்தப்பட்டது மட்டுமே நமக்கு கம்பராமாயணத்தில் படிக்கக் கிடைக்கிறது.

  இந்திரகாமினி எனும் கந்தர்வப் பெண் லட்சுமணன் மீது மோகம் கொண்டு அவனை நெருங்குகையில் அவளை அவன் உதாசீனப் படுத்தவே ஆசை நிறைவேறா கோபத்தில் அவளொரு சூழ்ச்சி செய்தாளாம், லட்சுமனனின் படுக்கையில் அன்றிரவு சில உடைந்த வளையல்கள் மற்றும் மலர்களை சந்தேகத்திற்கிடமான வகையில் போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டாளாம். இதற்கு ராமன் என்ன செய்தான் தெரியுமா? 

  லட்சுமணனின் அறையை கூட்டிப் பெருக்கி சுத்தமாக்க அங்கே சென்ற சீதை இதைக் கண்டு வந்து ராமனிடம் புறம் சொல்ல, ராமன் விடிந்ததும் அந்த வளையல்கள் யாருடையவை எனக் கண்டு பிடிக்க அந்தக் காட்டில் வசித்த எல்லாப் பெண்களின் வளையல் அளவுகளையும் வாங்கி சோதித்துப் பார்த்தானாம்!? 

  ‘புறம் சொல்லுதல்’ பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும்  ‘சீதை புறம் சொன்னாள்’ என்ற வரிகள் எனக்குப் புதியவை. கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் சீதையின் வளையல்களுடன் பொருந்துகிறது என கண்டுபிடிக்கப் பட்டதாக கூறும் போது ராமனின் சஞ்சல சந்தேக புத்தி விளக்கப்படுவதாக அர்த்தப் படுத்திக் கொள்வதா? அல்லது உலகிலுள்ள ஒட்டுமொத்த ஆண்கள்... ஆணித்தரமாகச் சொல்வதென்றால் கணவர்களான ஆண்களின் சஞ்சல சந்தேக புத்தி கடவுளின் அவதாரமாக அவதரித்தவனிடத்தும் இருந்தது என அர்த்தப்படுத்திக் கொள்வதா? என வாசிப்பவர்களுக்கு யோசிக்கத் தோன்றலாம்.

  லட்சுமணன் ஒன்றும் உத்தமன் இல்லை எனும் ராமனின் வாக்கு நிச்சயம் கம்ப ராமாயணத்தில் காண முடியாதென்று தான் நினைக்கிறேன், ஒருவேளை வடமொழி ராமாயணத்தில் இருக்கக் கூடுமோ என்னவோ? கம்பனின் ராமாயணத்தில் ராமன்... சஞ்சல ராமன் இல்லை... அவன் கோதண்டராமனாக... ஜானகி ராமனாக... "ஒருவனுக்கு ஒருத்தி எனும்" கோட்பாட்டை நிலை நிறுத்த வந்த அற்புத அவதார கடவுள் என்றல்லவா துதிக்கப் படுகிறான். ஏனிந்த முரண்பாடு? கம்பருக்கும், வால்மீகிக்கும்?!

  செந்திரு எனும் பெண்ணின் மன ஓட்டத்தில் அவள் எண்ணிப் பார்ப்பதாக கதை அமைவதால் சும்மா கற்பனை என்று ஒதுக்கி விடக் கூடும் தான்! "வித்யா சுப்ரமண்யத்தின் ஒரு நாவலில் கூட அம்பையின் இந்த ‘அடவி’ சிறுகதையை ஒத்த வரிகளை வாசித்த ஞாபகம் நெருடியதால் இதைப் பதியத் தோன்றியது.

  எது ராமாயணம்?

  புராணமே ஒரு கற்பனை என்றால் சேது பாலம் விசயத்தில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்ட எதிர்ப்புகள்?

  ராமாயணம் உண்மை என்றால் எந்த ராமாயணம் உண்மை? வால்மீகியின் மூல நூலே உண்மை என்றால் கம்பர் கூறும் ராமாயணம் என்ன சொல்ல வருகிறது? இப்படிச் சில குழப்பங்கள் மேலெழுகின்றன.

  ஆக மொத்தத்தில் இது அம்பையின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி. வாசிப்பவர்களை யோசிக்க வைத்தல்...பின் தெளிய வைத்தல் எனும் நிலையே நல்ல எழுத்துக்கு அழகாக இருக்கக் கூடும்.

  ராமாயணம் பற்றி இன்னும் நிறைய தேடி வாசித்தறிய வேண்டதின் அவசியத்தை உணர்த்துகிறது இந்தச் சிறுகதை. ராமாயணம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை இங்கே பதியுங்கள்.

  புத்தகம்: காட்டில் ஒரு மான்
  ஆசிரியர்: அம்பை
  விலை - ரூபாய் 80
  வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்

  kattana sevai