கா.பாலமுருகனின் ‘நெடுஞ்சாலை வாழ்க்கை’!

பல திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போல லாரி ஓட்டுநர்கள் என்றாலே காமுகர்கள் அல்ல,
கா.பாலமுருகனின் ‘நெடுஞ்சாலை வாழ்க்கை’!

லாரி ஓட்டுநர்கள் என்றாலே அவர்கள் மோசமானவர்கள் தான் எனும் பொதுப்புத்தியை உடைக்க இந்த  ‘நெடுஞ்சாலை வாழ்க்கை’ உதவும்!

இதுவரை வாசித்த புத்தகங்களிலிருந்து இது முற்றிலும் வேறுமாதிரியான தளமும், களமும் சார்ந்து எழுதப்பட்டிருக்கிறது. இதை பயணக்கட்டுரைகள் என்பதா அல்லது தமிழில் இப்படியான படைப்புகள் இதுவரை இல்லை இதுவே முதல் என்பதா? எப்படியாகிலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழ் படைப்புலகம் மற்றும் இலக்கியம் சார்ந்து இயங்கும் வாசகர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய படைப்புகளில் இதுவும் ஒன்று. 

ஒரு படைப்பாளி தன்னை இந்தியச் சாலைகளுக்கு ஒப்புக் கொடுத்து இந்தியாவை சாலைமார்க்கமாக குறுக்கும், நெடுக்குமாக வகுத்துக் கொண்டு செல்லும் நெடுஞ்சாலைகளின் சக்ரவர்த்திகளான லாரிகள் மூலம் கடந்து ஒரு வெகுஜனப்பார்வையில் லாரி டிரைவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களது சுக துக்கங்கள், எந்த ஒரு தொழிலை எடுத்துக் கொண்டாலும் மாநிலத்துக்கு மாநிலம் வித்யாசப்பட்டு நிற்கும் மக்களின் குழு உணர்வு, அவர்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள், வெற்றிகள், தோல்விகள், எல்லாவற்றையும் விளக்க முயன்றது பாராட்டப்பட வேண்டிய முயற்சி!

புழுதி வாரி இறைக்கும் பட்டப் பகல் அல்லது பூச்சிகள் ரீங்கரிக்கும் நட்ட நடுநிசி... எனப் பொழுதுகள் மாறும்போதும் மேலே நிர்மலமான வானத்தையும் கீழே நிச்சிந்தையான பூமியையும் மட்டுமே துணையாகக் கொண்டு ஆளரவமற்ற தேசிய நெடுஞ்சாலைகளில் விரையும் லாரி ஓட்டுநர்களின் மனதில் எல்லையற்று நீள்வதாகத் தோன்றும் அந்த நொடியில் எஞ்சுவது தங்களது பாதுகாப்பும் தாம் பொறுப்பேற்றுக் கொண்ட சரக்குகளின் பாதுகாப்பும் மட்டுமே! அவற்றைக் காத்துக் கொள்ளத் தவறினால் பிறகு அவர்களுக்கு மொத்த வாழ்க்கையும் எஞ்சுவதில்லை. 

இப்படியாக நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி ஓட்டுநர்கள் படும் இன்னல்களை விவரிக்கிறது இந்தப் பயணநூல். அந்த இன்னல்களில் ஒன்று கொள்ளை; வெட்டவெளியில் பல்லாயிரக் கணக்கான விளக்குகள் மற்றும் நெடுஞ்சாலைக் கண்காணிப்புக் கேமிராக்கள் மத்தியில் தேசிய நெடுஞ்சாலைகளில் அப்படி என்ன பெரிய திருட்டும், கொள்ளையும் நடந்து விடப்போகிறது? என்பது தான் வெகுஜன மக்களில் விவரம் அறியாதவர்களின் கணிப்பாக இருக்கக் கூடும். ஆனால் நேஷனல் பெர்மிட் வைத்துள்ள லாரிகளில் பலவும், பலதரப்பட்ட சந்தர்பங்களில் இந்தக் கொள்ளையில் சிக்கி சின்னாபின்னமாகித்தான் வெளி வரவேண்டியதாயிருக்கின்றன. ஆனால், ஊருக்குள் லாரிகள், லாரி ஓட்டுநர்கள் என்றாலே ஒரு மாற்றுக் குறைவாக எண்ணும் சிந்தனைப்போக்கு தான் அதிகமுமிருக்கிறது. லாரி ஓட்டுநர்களை மிக மோசமானவர்களாகச் சித்தரிக்கும் நமது சினிமாக்கள். லாரி ஓட்டுநர் என்றாலே அவர் நடத்தைக் குறைபாடு உடையவராகத்தான் இருக்க வேண்டும் எனும் பொதுமனநிலையை மக்களிடையே உண்டாக்கி வைத்திருக்கின்றன. இதனால் லாரி ஓட்டுநர்களுக்கு திருமணத்திற்கு வரன்கள் அமைவதும் கடினமான காரியமாகவே இருக்கிறது.

பல திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போல லாரி ஓட்டுநர்கள் என்றாலே காமுகர்கள் அல்ல, எல்லா நேரங்களிலும் அவர்கள் நெடுஞ்சாலைகளில் தவறி வந்து மாட்டிக் கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறையில் சிக்க வைப்பதாகக் காட்டுவதெல்லாம் அதீத கற்பனை. அவர்களும் மனிதர்களே... நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்களே, பயணத்தின் இடையே உடல் இச்சைகளைக் காட்டிலும் ஊரில் தான் விட்டு வந்த தனது குடும்பத்தின் முன்னேற்றம் மற்றும் தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கலக்கங்களும், கனவுகளும், திட்டங்களுமே அவர்களுக்கு இயங்குவதற்கான ஆற்றலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே தவிர நெடுஞ்சாலை பாலியல் சுகங்கள் அல்ல. விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம். அவர்கள் லாரி ஓட்டுநர்களாக மட்டுமே இருந்தாக வேண்டுமென்பதில்லை. ஆகவே அவர்களை நல்லவர்களாகக் காட்டவும் நமது சினிமாக்கள் முயலவேண்டும் என்கிறது இந்த நூல். 

அதுமட்டுமல்ல, லாரிகளில் கிளீனர் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் அசிஸ்டெண்டுகள் வளர்ந்து தங்களுக்கென ஒரு லாரியை உரிமையாக்கிக் கொள்வதை லட்சியமாகவே வைத்திருந்தாலும் ஒரு லாரியை வாங்கி அதற்குத் தீனியிட்டு சரியாகப் பராமரிப்பதென்பது பல யானைகளுக்குத் தீனி போட்டு வளர்ப்பதற்கு ஒப்பானது என்பதை உணரும் போது இந்தத் தொழிலில் ஏன்டா இறங்கினோம் என வெறுத்துப் போகிறார்கள். தம்மை வாழ்நாள் கடன்காரனாக்கி விடும் வல்லமை லாரித் தொழிலுக்கு என்று என்பதை உணரும் போது அவர்கள் நேஷனல் பெர்மிட் லாரிகளை விற்று விட்டு வாடகைக்கு லாரியோட்டும் லோக்கல் லாரி ஓட்டுநர்களாக மாறி விடும் அவலமும் நடக்கிறது.

நெடுஞ்சாலைக் கொள்ளைகள் தவிர, ஒவ்வொரு மாநிலத்தைக் கடக்கும் போதும் பிறிதொரு மாநிலத்துக்குள் நுழைவதற்கான அனுமதி பெற வாங்க கால நேரமற்றுக் காத்திருக்க வேண்டிய அநியாயக் காத்திருப்புகள், தன் கையே தனக்குதவி என்பது போல் லாரிக்குள்ளேயே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தம், சுங்கச் சாவடிகளில் பணத்தைப் பறிகொடுக்காமல் மிச்சம் பண்ண எண்ணி குறுக்குச் சாலைகளில் லாரியோட்டி ஒவ்வொரு பைசாவையும் சேமித்தாக வேண்டிய நிர்பந்தம், பாதுகாப்புக்கான எந்த உத்தரவாதமும் இல்லாத அவல வாழ்க்கை. அப்படியே வெற்றிகரமாக பொறுப்பேற்றுக் கொண்ட சரக்கை உரிய இடத்தில் சேர்பித்து பிறிதொரு சரக்குடன் மீண்ட போதிலும் பெரிதாக லாபமென்று சந்தோசிக்க முடியாத அளவுக்கு லாரிகளின் பராமரிப்புச் செலவுகளில் கரையும் பொருளாதாரம். இதற்கு நடுவே திருமணம், குடும்பம், குழந்தை குட்டி என நீளும் இகபர வாழ்க்கை! அத்தனையும் சேர்ந்து லாரி டிரைவர்களது குரல்வளையை அனுதினமும் நெரித்துக் கொண்டு தான் இருக்கிறது இந்நள் வரையிலும். அதை வாசகர்களுக்குத் தெளிவாக உணர்த்துவதற்கானதொரு சித்திரத்தை இந்த நூல் மிக நேர்த்தியாக முன் வைக்கிறது.

முடிவாக இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தரைவழிப் போக்குவரத்தான லாரி பயணத்தில் ஏற்படும் இன்னல்களைக் களைய, தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தனி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார் நூலாசிரியர் கா.பாலமுருகன். அதுமட்டுமல்ல இந்த நூல் மூலமாக லாரி ஓட்டுநர்கள் பற்றிய தவறான கண்ணோடத்தை விலக்கி, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுடன் பயணித்து பதிவு செய்திருக்கிறார் என்ற வகையில் இந்நூல் தமிழின் மிக வித்யாசமான படைப்பு என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இந்தப் படைப்பை வாசித்த பின் இந்திய லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கை முறையைக் காட்சியாகக் காணும் விருப்பம் இருப்பவர்கள் The Good Road' எனும் குஜராத்தி திரைப்படத்தையும் சப் டைட்டிலுடன் யூ டியூபில் தரவிறக்கிப் பார்க்க முயற்சிக்கலாம். லாரி டிரைவர்களின் நல்ல பக்கங்களைப் புரட்டிப் பார்க்க அவகாசம் தரும் மிக அருமையான திரைப்படங்களில் ஒன்றான இத்திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வென்றுள்ளது.

வெளியீடு - விகடன் பிரசுரம்
ஆசிரியர் - கா.பாலமுருகன்
விலை - ரூ.175

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com