Enable Javscript for better performance
nirayudhabaniyin ayudhangkaL by jeyandhan|ஜெயந்தனின் ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள்’ நூல் அறிமுகம்!- Dinamani

சுடச்சுட

  ஜெயந்தனின் ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள்’ நூல் அறிமுகம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 30th October 2017 04:35 PM  |   அ+அ அ-   |    |  

  jeyandhan_nirayudha_baniyin_ayudhangkaL

   

  "தீம்தரிகிட" மின்னிதழில் தனது "துப்பாக்கி நாயக்கர்"சிறுகதை மூலமாக முதன் முறையாக ஜெயந்தன் எனக்கு அறிமுகம் ஆனார். பாஸ்கர்சக்தி ஒரு நினைவுறுத்தும் பகிர்வாக இச்சிறுகதை குறித்து அங்கே எழுதி இருந்தார். அளவில் நீண்ட சிறுகதை... ஆயினும் படிக்கத் தூண்டும் வெகுஜன வாசம் நிரம்பிய எழுத்து நடை, சற்றே விவரமான வெள்ளந்திதனமான ஆதங்கங்கள், சமூகம் குறித்த தார்மீகக் கோபங்கள், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் படியான பகடிகள், பல்லிளிக்கும் பகட்டான முலாம் தேய்ந்த பின் கோரப்பட்டுப் போன மனித அக முகங்கள். இப்படி இவரது சிறுகதைகள் பேசாத பொருள் இல்லை எனலாம்.

  எல்லாக் கதைகளுமே திட்டமிட்டு கூடுதல் ஆயத்தங்களுடன் எழுதப் பட்டவை போலன்றி இயல்பாகவே தனது நிஜத் தன்மையால் முழுமையும் நிறைவும் பெற்று விட்டதான தோற்றம் தருபவை.

  வம்சி வெளியீடான ஜெயந்தனின் "நிராயுதபாணியின் ஆயுதங்கள்" தொகுப்பில் மொத்தம் 58 சிறுகதைகள், அனைத்துமே சிந்தனையை தூண்டத்தக்கவை, சில மிக ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 'நம்மில் இருக்கும் ‘நானை’ வெளிக்கொணரும் முயற்சிகளே அவரது பெரும்பான்மையான கதைகளும்.

  இந்த தொகுப்பில் என்னில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய சிறுகதைகள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், 

  • ஊமை ரணங்கள்
  • மரம்
  • துக்கம்
  • துப்பாக்கி நாயக்கர்
  • வெள்ளம்

  இந்த ஐந்து கதைகளும் வெகு கனமான விசயங்களை மிக லேசாகப் பேசிச்சென்று முடிவில் கதையைப் பற்றிய உள்ளுணர்தலில் நடுக்கமான ஒரு அதிர்வை ஏற்படுத்தி ஓய்கின்றன.

  "மரம்" சிறுகதை வாசிக்கையில் சற்றேறக் குறைய இதே உணர்வை ஏற்படுத்திய பிறிதொரு குறுநாவல், பாஸ்கர் சக்தியின் "ஏழுநாள் சூரியன் ஏழு நாள் சந்திரன்" ஞாபகத்தில் பளிச்சென்று நிழலாடியது. இரண்டிலுமே நிகழும் எதிர்பாரா துர்மரணங்கள் தற்செயலானவை. முடிவில் வாசிப்பவர்களை பதற வைத்து திடுக்கிடச் செய்பவை.

  இதே போல "துக்கம்" சிறுகதை வாசிக்கையில் தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது" சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையான "காத்திருப்பு" ஞாபகம் வந்தது. இரண்டு சிறுகதைகளுமே வாழ்ந்து சலித்த முதியவரின் மரணத்திற்குப் பின் அவருக்கு மிக நெருக்கமாகிப் போன இளைஞனின் அகக்கோபங்களைப் பற்றிப் பேசிச் செல்பவை.

  வயோதிகத்தில் அவர்களின் இருப்பை புறக்கணித்து மதிக்காத சுற்றமும் வாரிசுகளும் மரணத்தின் பின் கதறி அழுவது "புளிப்பும் கரிப்புமாய் வயிற்றுக்குள் நுரைப்பதைப் போலான ஒரு அவஸ்தையான உணர்வை" அந்த இளைஞர்களிடத்தில் ஏற்படுத்துவதாக வாசிக்கையில் எங்கேயோ... எப்போதோ பெயரற்று உணரப் பட்ட ஏதோ ஒரு உணர்வின் நினைவு மேலெழுகிறது.

  "ஊமை ரணங்களில்" மகளுக்கு தலை தீபாவளி சீர் செய்யப் பணம் கிடைக்காமல் திகைக்கும் ஒரு அப்பாவி அப்பாவுக்கும், விவரமான மகளுக்கும் இடையேயான உரையாடல் மெய்யான ஊமை ரணமே தான்.

  கல்யாணத்துக்கு முன்பு அவள் தகப்பன் வீட்டில் இருந்து வேலைக்குப் போகையில் பெற வேண்டிய சம்பளப் பணம் ‘அரியர்ஸ்’ என்ற பெயரில் கல்யாணத்துக்குப் பின் மொத்தமாக கிடைக்கவே படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி அதற்கான பலனை அனுபவிக்க கொடுத்து வைக்காத ஆதங்கமும், வேறு வக்கற்ற இயலாமையும் கலந்து மகளிடமே அந்த தகப்பன் பணம் கேட்டுப் பெற தயக்கம் நிறைந்த நம்பிக்கையோடு புறப்பட்டு வருகிறான், அங்கே மகளிடத்தில் அவனுக்கு கிடைத்த பதில் தான் ஊமை ரணமாகிப் போகிறது அவனுக்கு, நிஜத்தில் நாம் கண்ட கதை தான், புத்தகத்தில் வாசிக்கையில் புறக்கணிக்க இயலா வருத்தம் தழும்பி அந்த தகப்பனுக்காக திகைக்கச் செய்கிறது .

  "துப்பாக்கி நாயக்கர்" இன்னுமொரு அருமையான நிகழ்வின் அடிப்படையில் அமைந்த கதை. ஊரே பயந்து மிரளும் ஒரு பெரிய மனிதனின் இளைய தாரத்தை அவரது அடியாட்களில் ஒருவனே கை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய விழைய, ஒரு நிமிட சபலத்திலான அவனது அந்த செய்கை பிற்பாடு "முதலாளி" என்ன செய்வானோ எனும் பயத்திலேயே தானாக மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறான். சேதி அறிந்து இவனை எவ்வாறெல்லாம் மிரட்டலாம் என்றெண்ணிய அந்தப் பெரிய மனிதனுக்கு இவனது தற்கொலை மிகப் பெரிய அதிர்ச்சியாகி விடுகிறது. இப்படிப் போகிறது கதை. இந்தக் கதைக்கான லிங்க் கீற்று தளத்தில் தீம் தரிகிடவில் கிடைக்கும் என நினைக்கிறேன், கிடைத்தால் வாசியுங்கள், நல்ல எழுத்து.

  "வெள்ளம்" இந்தக் கதை வாசித்த பின் தான் நான் "கிருஷ்ணி "என்றொரு கதை எழுதினேன். சம்பவங்கள் வேறு வேறு எனினும் மூலம் ஒன்றே.கல்யாணமாகி மனைவியைப் பிரிந்து இருக்கப்பட்ட அல்லது அவ்வாறு இருக்க எதாவது ஒரு வாழ்வியல் சூழலால் நிர்பந்திக்கப் பட்ட ஒரு ஆணின் பார்வையில் பெண்கள். சொல்லப் போனால் பெண் எனும் பிம்பம், வயது ஒரு பொருட்டின்றி விவஸ்தை கெட்ட மனதின் அலங்கோல சிந்தனைகளைப் பற்றி சொல்லும் கதை இது,

  ஒரு ஆணின் அகத்துக்கும், அவனுக்கு கிட்டிய சந்தர்பங்களுக்கும் இடையிலான உரையாடல் தன்மை ஒத்த இச்சிறுகதை மிக நல்ல முயற்சி. பதற வைக்கும் விஷயம் தான்... ஆனாலும் முடிவில் மழை ஓய்ந்து வானம் தெளிவதைப் போல கருமை படர்ந்த அவனது விபரீத எண்ணங்கள் ஓய்ந்து அவன் தெளிவான வானம் பார்ப்பதாய் கதை முடிகிறது. வாழ்வும் இப்படித் தான். நமக்கு நாமே ஒரு கோல் வைத்துக் கொண்டு நம்மை நாமே எல்லா சந்தர்பங்களிலும் வழுவாதிருக்க முயற்சி செய்து கொண்டு ஆட்சி செய்து கொள்ள வேண்டியது தான். இது ஒரு தீராத ஆட்டம், ஆனாலும் கரணம் தப்பினால் மரணம் போன்ற ஆட்டம்.

  இந்த ஐந்து சிறுகதைகளுமே வாசிப்பளவில் என்னை மிகப் பாதித்தவை, இவை தவிர;

  உபகாரிகள் :

  பெண் பார்க்கச் செல்கையில் அக்கம், பக்கம் அந்தப் பெண்ணைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறார்கள் ஒரு இளைஞனின் சுற்றமும் நண்பர்களும், லயம் தப்பாமல் எல்லோருமே பெண் மிக நல்லவள், குணவதி என்று சர்டிபிகேட் தர பையன் ஆகாயத்தில் மிதக்காத குறை, ஆனால் அந்தப் பெண்ணிடமிருந்தே "நான் ஒரு பஸ் டிரைவரை காதலிக்கிறேன், என் அப்பாவும், தம்பிகளும் அவரை சில நாட்களுக்கு முன் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு முன்பாகவே எல்லோரும் வேடிக்கை பார்க்க, ஆள் வைத்து அடித்து உதைத்து விரட்டி விட்டார்கள், நான் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கடிதம் வரவே, அந்த மாப்பிளைப் பையன் ஆகாயத்தில் இருந்து தொபுக்கடீர் என்று தரையில் விழுகிறான்!!!

  பிறகெப்படி அப்படி ஒரு பெண்ணை என் தலையில் கட்ட, விசாரித்த இடத்தில் எல்லாம் நல்ல பெண்... நல்ல பெண் என்று சர்டிபிகேட் தருகிறார்களே! என்று இவர்கள் அவர்களிடமெல்லாம் மறுபடியும் விசாரிக்க,

  நடந்தது நடந்து போச்சு அதுக்காக ஒரு பொண்ணோட கல்யாண விசயத்துல விளையாட முடியுமா? அவளுக்கு நல்ல படியா கல்யாணம் ஆகட்டும், என்று எண்ணித்தான் இப்படிச் சொன்னதாக சொல்கிறார்கள். எப்படிப் பட்ட உபகாரிகள் பாருங்கள்?!!! இது தான் அந்தப் பெண்ணிற்கு அவர்கள் செய்யும் உபகாரமா!!!

  இதே போல "பைத்தியம்" என்றொரு சிறுகதை ; இன்ஜினியரான தன மகனுக்கு நயா பைசா வரதட்சினை இன்றி திருமணம் செய்து வைக்கும் ஒரு பேராசிரியரை... ஊரும் அந்த ஊர் எம்.எல் ஏ வும் புகழ்ந்து வாழ்த்துகிறார்கள், "புரட்சித் திருமணம்" என்று வாழ்த்துத் தந்தி எல்லாம் அனுப்பி கொண்டாடுகிறார்கள் அவரை. அதில் மிதப்பாய் சந்தோஷித்து திளைக்கும் அந்தப் பேராசிரியரை அவரில்லாத இடம் என்று எண்ணி அவரது சொந்த அக்காள் கணவரும் அவரது நண்பர்களும் "இப்படி ஒரு பைத்தியத்தைப் பாரேன்" என்றே ரேஞ்சில் எள்ளி நகைத்துப் பேச வானளவு மிதந்து கொண்டிருந்த அந்தப் பேராசிரியர் பூமிக்கு இறங்கி தரையில் கால் பாவி பித்துப் பிடித்தது போல அவர்களைக் கண்டு என்ன சொல்வதென புரியாமல் உரத்துச் சிரிக்கிறார், நம் செயல்கள் மிக உயர்ந்தவையாய் இருப்பினும் அதைக் குறித்து நாம் மட்டுமே உன்னதம் கொள்கிறோம், பிறருக்கு ஏதோ ஒரு வகையில் அது எள்ளல் மிகுந்ததாய் அமைந்து விடுகிறது, விசித்திரம் தான்.இது தானே வாழ்கை !

  இதே வரிசையில்

  வாசித்து நிமிர்கையில் இதழ்களில் மெலிதாகப் புன்னகைக்கத் தூண்டும் எள்ளல் நடையில் இன்னும் சில சிறுகதைகள் இதிலுண்டு ,அவை

  • 4 வது பரிமாணம்
  • இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்
  • ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது
  • அவர்கள் வந்து கொண்டிருகிறார்கள்
  • கவிமூலம்
  • மிஸ்.காவேரி

  - இந்தக் கதைகளைக் கூறலாம்.

  இவை மட்டுமல்ல "பிடிமானம் " எனும் சிறுகதை ஏற்றுக் கொள்ளவியலாத வகையில் அமைந்த ஒரு பெண்ணின் தாய்மையைப் பற்றி பேசுகிறது.

  "மொட்டை" இதே சாயலில் இனி எந்தக் கதை வந்தாலும் ஜெயந்தனின் இந்தக் கதை ஞாபகம் வரும்.

  "நிராயுதபாணியின் ஆயுதங்கள் " கதையின் தலைப்பே எத்தனை அர்த்தம் பொதிந்திருக்கிறது பார்த்தீர்களா?! இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது?! இந்த சிறுகதையும் வாசிக்க வேண்டிய சிறுகதையே.

  "டாக்கா மஸ்லின் " ஒரு மாறுபட்ட கற்பனை, வாசிப்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி நீடிக்கத்தக்க சிறுகதைகளை எழுதும் ஆசை இருக்கும் புதியவர்கள் வாசிக்க வேண்டிய படைப்புகளில் ஒன்று ஜெயந்தனின் சிறுகதைகள். 

  நூல்: நிராயுதபாணியின் ஆயுதங்கள்
  ஆசிரியர்: ஜெயந்தன்
  வெளியீடு: வம்சி பதிப்பகம்
  விலை: ரூ 400

  நோட்:

  வம்சி புக்ஸ் பவா செல்லத்துரை சொன்னதாக ஒரு வாக்கியம் நெட்டில் ஜெயந்தன் அஞ்சலிப் பதிவுகள் எதிலோ ஒன்றில் வாசித்தேன் ,அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது,ஏன் ஜெயந்தன் அதிகம் கொண்டாடப்படவில்லை?!ன்அவருக்கு தன்னை மார்கெட்டிங் செய்து கொள்ளத் தெரியவில்லையோ! அல்லது அவரது சிறுகதைகளில் அப்பட்டமாய் வெளித் தெரியும் இயல்புத் தன்மை போலவே "இது போதும்" என்று தன்னிறைவாய் இருந்து விட்டாரோ! எப்படியானாலும் சரி இலக்கிய வாசிப்பில் தவிர்க்க முடியாத படைப்புகள் ஜெயந்தனுடையவை. வாசிப்பவர்கள் ஜெயந்தன் குறித்த உங்களது பகிர்வுகளை இங்கே பதிந்து செல்லுங்கள்


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp