Enable Javscript for better performance
tamilnathi's nandhakumaranuku |தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" சிறுகதை தொகுப்பு!- Dinamani

சுடச்சுட

  தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" சிறுகதை தொகுப்பு!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 07th February 2018 03:47 PM  |   அ+அ அ-   |    |  

  tamilnathi

   

  நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியதை வாசிக்கையில் உள்ளுக்குள் உறைந்து போன மௌனத்தைக் களைக்கும் விருப்பம் இல்லாது பின்னிரவின் நிசப்தத்தை சுவாசத்தால் ரசித்து அருந்தியவாறு அரூபமாய் மெல்லக் கதைக்குள் நீந்தித் திளைப்பது இதமாக இருந்தது. நதி நீர் இருக்கும் வரை ஓடக் கூடியதே. நீரே இல்லாமல் போனாலும் நதியின் போக்கு வழித் தடமாயேனும் நீடித்திருக்கக் கூடும். தண்ணீரே இல்லா விடினும் நீரின் ஜில்லிப்பு உணர்ந்தேன் நானும். சந்தியா காலத்தில் சில்லிடும் மணல் தன்னுள் பதுக்கி வைத்துக் கொண்ட குளிர்மையை உணர நதியில் நீர் இருந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை!

  சுகுணா திவாகரின் மிதக்கும் வெளியில் "கவித்துவ மொழிதலுக்கு" தமிழ்நதி என்றொரு வாசகம் தென்பட்டது. அழகுத்தமிழில் படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்த முடியுமெனில் அந்த வாசகம் எத்தனை நிஜமானது! அபாரமான கூடவே மனதுக்கு மிக நெருக்கமான எழுத்து நடை!

  "எசமாடன் கேட்கட்டும் " ஒரே சிரிப்பாணியாய் இருந்தாலும் பலதையும் யோசிக்க வைக்கிறது .

  "பெண் எனும் ஞாபகம்",  "கவரிமான்கள்", “நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" கதைகள் எல்லாம் மீண்டுமொருமுறை வாசிக்கக் கோருபவை.

  //துருவத்தின் குளிர் தாங்கி தனிமையின் துயர் பொறுத்து இரவும் பகலும் வேலையின் சக்கரத்தில் தன்னைப் பொருத்தி அவர் சுற்றியதன் பயனே இந்த வீடு, கூட்டத்திற்குள்ளே அவரை என் விழிகள் தேடி அணைத்தணைத்து மீள்கின்றன.//

  அயல் நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களாய் வாழ விதிக்கப்பட்டவர்களின் "இருப்பு" இருப்பில் ஊடாடும் வலி இரும்பை விடக் கனக்கிறது.

  என் பெயர் அகதி எனும் கதையில் வரும் வரி இது...

  ராணுவம் சோதனை என்ற பெயரில் தேடலைக் காட்டிலும் இளம் பெண்களை மானபங்கம் செய்வதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்ட பயங்கரம் ,இதனை அமானுஷ்ய பயமளிக்கும் நினைவு கொளல் எனக் கூறலாம்

  "வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சப்பாத்துத் தடங்கல் பதிந்தன, சாமிகளெல்லாம் சட்டங்களுக்குள் உறைந்திருந்தன"

  குழந்தைகள் பொம்மைகளைப் பிய்த்தெறிந்து விளையாடுவதைப் போல ராணுவம் இளம்பெண்களை தங்களது பாலியல் வக்கிரங்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை விளையாட்டைப் போல கைக்கொண்ட ஒரு நாட்டில் பிறந்து அகதிகளென பெயர் சூட்டிக் கொண்ட பாவத்தை என்னவென்று சொல்வது?!

  போரினால் தன் பிள்ளைகள் அனைவரும் புலம் பெயர தனிமையில் தவிக்கும் ஒரு முதியவரின் "காத்திருப்பு" மரணத்தில் முடிந்த பின் சுற்றம் சூழ நடக்கும் இறுதிச்சடங்கு, எதற்குக் காத்திருந்தார் அவர்?! இதற்கா!

  குளிர் நாடுகளில் தஞ்சமடைந்து திசையறியாப் பறவைகளாய் திகைத்துப் போன ஞாபகச் சுவடுகள் "கப்பற்பறவைகளாய்"

  கரை தேடிச் சிறகடித்து நடுக்கடலில் திசையறியாது திகைத்தபடி மீண்டும் மீண்டும் கப்பலுக்கே திரும்பும் பறவைகளானோம், கப்பலிலும் தங்கவியலாது, கரைக்கும் திரும்பவியலாது, அங்குமிங்கும் அலைக்கழிந்ததில் உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு"

  எத்தனை நிஜமான வலிகள் இவை !?

  ‘நிலம் மற்றுமோர் நிலா’ எனும் பகிர்வில் 'போராளியாய் இருந்த பெண்ணொருத்தி பின்னாட்களில் இயல்பு வாழ்க்கை வாழ்வதைக் காணுகையில்... சொல்லத் தெரியாத விருப்பமற்ற திகைப்பாய் உள்ளோடும் வார்த்தைகளாய் இவை,

  "தேவதைகளின் பாதங்கள் மண்ணைத் தொடுவதை சாதாரணர்கள் சகிப்பதில்லை"

  அந்தப் பெண் மறுபடி போராளியாக்கப்படவும் கூடும், நிச்சயமற்ற தன்மை நிலவும் ஒரு நாட்டில் தேவதைகள் செத்துப் பிழைக்கின்றன.

  ஊர் எனும் சிறுகதையில் ...

  அந்த கிராமத்தில் நடமாடித் திரிந்த மனிதர்கள் அயல் கிராமங்களுக்கு அடித்து விரட்டப்பட்டனர், உலக வரைபடத்தில் விரல்களால் உணரப் பட்ட தேசங்களெங்கும் சிதறினார்கள். நட்ட மரம், வெட்டிய கிணறு, வளர்த்த பிராணிகள், வயல்கள், தண்ணீரும்... வியர்வையும் ஊற்றிப் பாடுபட்ட தோட்டங்கள், தேடிய தேட்டங்கள் எல்லாம் விட்டுப் பெருமூச்செறிந்து பிரிந்தது அக்கிராமத்தின் உயிர் .

  உயிர் பிரிந்தாலும் ஊரின் ஆன்மா அங்கே வாழ்ந்து எங்கெங்கோ சிதறியவர்களை அமைதிப் பேச்சுவார்த்தை அறிவிக்கப்படும் காலம் தோறும் எல்லா... மற்றெல்லா அச்சங்களையும் மீறி மேவி அழைத்துக் கொண்டே இருக்கின்றது .

  ஊரின் உயிர் அங்கிருந்து வலிந்து பிரிக்கப்பட்டவர்களின் கண்ணில் திரையிடும் நீரில் கோடென வழிந்து துடைக்கப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது போலும்! எத்தனை துடைத்தாலும் அழியாக் கோடுகள் .

  கதை சொன்ன கதையில் இப்படி ஒரு வாக்கியம்...

  "வாசிக்க வாசிக்க தெளிவுங்கறாங்க... எனக்கு வாசிக்க வாசிக்கத் தான் குழப்பமே உண்டாகுது" சிரிக்கத் தோன்றினாலும் நிஜமென்னவோ இது தான். 

  கதைத்தொகுப்பினைக் குறித்த நிறைகளைப் பாராட்ட வேண்டுமானால் முழுப் புத்தகத்தையுமே மேற்கோள் காட்ட வேண்டி வரும், நடந்த துயரமான சம்பவங்களை நேர்த்தியாய் ஈர சிமென்ட்டில் பதித்த கைத் தடம் போல மனம் ஒட்டச் செய்தமை துன்பியல் அழகு .

  இதை கதைத்தொகுப்பாக எண்ணிக்கொள்ள இயலாது, பட்ட ரணங்களின் மிச்சமான வடுக்கள், புலி தன் காயங்களை மிக்க ஆதூரத்துடன் நாவால் வருடுவதைப் போலத்தான்... கையெட்டும் தூரத்தில் காலம் காலமாய் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைகளின் அகோரங்களை வலிக்க வலிக்க படிக்கக் கிடைத்த அனுபவத் தொகுப்பு எனலாம்.

  தொகுப்பில் அனைத்துப் பகிர்வுகளுமே அருமையாக இருந்தாலும் ஜென்ம ஜென்மாந்திர தொடர்புகள் போல நினைவை விட்டு அகலாத தன்மையுடன் ;

  வீடு
  ஊர்
  இருப்பு
  காத்திருப்பு

  இந்த நான்கினையும் கூறலாம், நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தி அழ வைக்கத்தக்கன. 

  இவரது பிற படைப்புகள் ;

  கானல் வரி குறுநாவல் - உயிர்மை வெளியீடு
  இரவுகளில் பொழியும் துயரப்பனி -ஆழிபதிப்பக வெளியீடு

  தொகுப்பில் ஓரிடத்தில் "இது கதையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறீர்களா?" என்றொரு கேள்வி வருகிறது.

  நிச்சயம் கதையாக இருக்க வாய்ப்பில்லை.

  புத்தகம் -நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது

  ஆசிரியர் - தமிழ்நதி
  விலை - ரூ/90
  வெளியீடு - காதை பதிப்பகம்


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp