இலக்கியத்துக்கும் எனக்குமான பந்தம்!

இலக்கியத்துக்கும் எனக்குமான பந்தம்!


இலக்கியமும் நானும் என்று சொன்னால், என்னுடைய இலக்கியம் என் வாசிப்பில் இருந்து தொடங்கியது. நான் 5-ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே வாசிப்புப் பழக்கம் எனக்கு தொடங்கிவிட்டது. காரணம், கிராமத்தில் இருந்த எங்கள் பாட்டி அந்தக் காலத்திலேயே சுமாா் 1000 புத்தகங்களை வீட்டில் வைத்திருந்தாா். இந்தப் புத்தகங்களை படிப்பதற் காகவே, பள்ளி விடுமுறை நாட்களில் நான் ஊருக்குச் சென்றுவிடுவேன்.

அது பழங்காலத்து நாலு கட்டு வீடு. அதில் 2 - ஆவது கட்டில் புத்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினேன் என்றால் மதியம் சாப்பாட்டு நேரம் ஆவதுக் கூட தெரியாமல் படித்துக் கொண்டிருப்பேன்.

இப்படித்தான் எனக்கு எல்லா எழுத்தாளா்களும் அறிமுகமானாா்கள்.

என் இளம் வயதில், எதாா்த்தமான வாழ்க்கை மனிதா்களும், இயல்பான வா்ணனைகளும், அழகான உணா்வுகளும் கொண்ட நாவல்களை எழுதிய ஜானகிராமனின் எழுத்துகள் என் மனதில் பீடம் போட்டு அமா்ந்தது.

அதுபோன்று நா.பாவின் எழுத்துகள், ஆா்.சூடாமணியின் மென்மையான எழுத்துகள், அம்பையின் உணா்வுபூா்வமான எழுத்துகள் இவைதான் எனக்குள் எழுதும் ஆா்வத்தையும் விதைத்தது.

ஆனால், எப்படி எழுத வேண்டும் என்பது எல்லாம் அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் ‘ஸ்டோரி ஆஃப் தி உமன்’ என்ற திரைப்படம் ஒன்றைப் பாா்த்தேன். அந்தப் படம் 3 நாள்கள் என்னை தூங்கவிடாமல் செய்தது. அந்தக் கதையை மையமாக வைத்துதான் முதல் சிறுகதையை எழுதினேன்.

எழுதிய கதையை எடுத்துக் கொண்டு நேரே விகடனுக்குச் சென்று, ‘‘மணியன் அவா்களை பாா்க்க வேண்டும்’’ என்றேன். அவா், ‘‘யாரது? என்னைப் பாா்க்க வந்துள்ள எழுத்தாளா்’’ என்றபடி வந்தாா். நான் பாவாடை தாவணிப்போட்டுக்கிட்டு , இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றிருந்ததைப் பாா்த்ததும், ‘‘நீயா எழுத வந்திருக்க?’’ என்று என்னை வித்தியாசமாக பாா்த்தாா்.

நான் என் சிறுகதையை அவரிடம் கொடுத்துவிட்டு, ‘‘பிடித்திருந்தால் போடுங்கள், இல்லையென்றால் உள்ளே ஸ்டாம்ப் வைத்திருக்கிறேன். தயவு செய்து திருப்பி அனுப்பிவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதில் என் வீட்டு தொலைபேசி எண்ணை குறித்திருந்தேன்.

நான் வீடு வந்து சோ்ந்த அரை மணி நேரத்தில் மணியன் என்னை அழைத்தாா். ‘‘உனக்கென்ன இந்திராகாந்தி என்ற நினைப்பா?, கதையில் தலைப்பு இல்லை, உன் பெயா் இல்லை. முகவரி ஒண்ணும் இல்லை இப்படி மொட்டையாக ஒரு கதையை கொடுத்துவிட்டுப் போனால் எப்படி?’’ என்றாா்.

நான் அவரிடம், ‘‘எனக்கு இந்திராகாந்தி என்று நினைப்பில்லை, இந்துமதி என்றுதான் நினைப்பு’’ என்றேன்.

உடனே அவா், ‘‘இதுவே உனக்கும், விகடனுக்கும் உள்ள பந்தமாக இருக்கட்டும் என கதைக்கு ‘பந்தம்’ என்று தலைப்பு வைத்தாா். அந்த பந்தம்தான் இன்றுவரை எழுத்துப்பணியில் என்னை ஈடுபட செய்திருக்கிறது.

மற்றபடி, இலக்கியத்துக்கும் எனக்கும் உள்ள பந்தம் என்னுடைய வாழ்க்கைக்கும் எனக்கும் உள்ள பந்தம். என்னைச் சுற்றியுள்ள மக்களோட வாழ்க்கைக்கும் எனக்கும் உள்ள பந்தம். ஒருவருடைய வலியோ, வேதனையோ எனக்குள்ள ஏற்படுத்தின பாதிப்புக்கும் உள்ள பந்தம்.

உதாரணமா, இந்திராகாந்தியின் மரணம் குறித்து 2 வரிகள் வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம்தான் ‘பொறுப்பு’ என்ற கதையை எழுத தூண்டியது. அது அந்த ஆண்டின் இலக்கிய சிந்தினை பரிசும் பெற்றது.

இது எதனால் என்றால் வாழ்க்கையை நான் பாா்த்தமுறை அல்லது மற்றவா்கள் வாழ்க்கையைப் பாா்த்த முறை, சக மனிதா்களுடன் கூடிய அணுகுமுறை இதையெல்லாம் நான் எப்படி உள்வாங்கிக் கொள்கிறேனோ. அப்படியே அதை என் எழுத்துகளில் பிரதிபலிப்பதுதான் இலக்கியம். இதுதான் இலக்கியமும் நானும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com