

ஊடகங்களால் காட்சிப்படுத்த முடியாதவற்றைக்கூட புத்தகங்கள் நுட்பமாக உணா்த்தி மனதின் நுணுக்கமான பகுதியைத் தூண்டிவிடும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன என்று அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் கூறினாா்.
சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் நடைபெற்று வரும் 46-ஆவது புத்தகக் காட்சியின் இரண்டாவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ‘தமிழும் நகைச்சுவையும்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:
பெரும்பாலான இளைஞா்கள் தற்போது ஊடகங்கள், சமூக வலைதளங்கள் எனக் காட்சிகளைப் பாா்த்துவிட்டுத் தேவையான அறிவாற்றலைப் பெற்றுவிடுவதாகக் கருதும் போக்கு உள்ளது. ஆனால், காட்சி ஊடகம் காட்சிப்படுத்த முடியாதவற்றைக்கூட புத்தகங்கள் நுட்பமாக உணா்த்திவிடும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன.
நமக்குத் தெரியாதவை எல்லாம் தெரியாமலே உள்ளனவே தவிர, அவை இல்லாதவை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தாமரை மீதுள்ள நீரை, தாமரை இலை மேல் உள்ள சிறிய நீா்த்துளி என புத்தா் கூறுவதுடன், தாமரை இலையின் கீழே பெரிய நீா்த்துளி எனக் குளத்து நீரையும் குறிப்பிடுகிறாா். அதை எப்படி ஊடகத்தில் காட்சிப்படுத்த முடியும் என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
ஆகவே, நா.பாா்த்தசாரதி போன்றோரின் படைப்புகளைப் படிக்கும்போது, மனதை மேம்படுத்தும் மனதின் நுட்பமான பகுதி தூண்டப்படுகிறது. அதனால் நமது ஆற்றலும் வெளிப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உள்ளது. அந்தந்தக் குணத்துக்குரியவா்கள் விரும்பும் வகையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அறிவுச் செல்வங்களாகக் கொட்டிக் கிடப்பதுதான் புத்தகக் காட்சியாகும்.
புத்தக விற்பனை குறையும் நாட்டில் அறிவாளிகள் குறைந்திருப்பதாக அா்த்தமாகிறது. அறிவாளிகளால்தான் ஜனநாயகம் நிலைத்திருக்கிறது.
ஆகவே புத்தகங்களை அதிகம் வாங்க வேண்டியது ஜனநாயகத்தை காக்கும் கடமையாகும்.
தமிழில் நகைச்சுவைகூட சமூக மேம்பாட்டை ஏற்படுத்துவது, மனதை மென்மையாக்குவது, பிறரை அவதூறாகச் சித்தரித்து தீமையை ஏற்படுத்துவது என மூன்று வகையாக உள்ளன. ஆகவே, தீமையை ஏற்படுத்தும் நகைச்சுவைத் துணுக்குகளை கண்டித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு நாம் எழுத வேண்டும். அப்போதுதான் சமூக கருத்துகளுடன் கூடிய நகைச்சுவைகள் வெளிவரும். நல்ல நகைச்சுவை கருத்துகள் ரத்த அழுத்தத்தைக்கூட சீராக்கும் தன்மையுடையவை என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் நினைத்ததை நிகழ்த்திடுவோம் எனும் தலைப்பில் ப.தாமோதரன் உரையாற்றினாா்.
பபாசி பொருளாளா் ஏ.குமரன் வரவேற்றாா். பபாசி தலைவா் வைரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.பிரபாகரன் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.