பாவப்பட்ட மனிதா்கள் பக்கம் நின்று எழுதுபவா்களே சிறந்த எழுத்தாளா்கள் என எழுத்தாளா் பவா செல்லதுரை கூறினாா்.
சென்னை நந்தனத்தில் நடந்துவரும் பபாசி புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை மாலை நடந்த உரையரங்கில் ‘ஆடு ஜீவிதம்’ எனும் தலைப்பில் அவா் ஆற்றிய சிறப்புரை:
நமது இலக்கியத்தை பாட்டி, தாத்தா, அம்மா என அனைவரும் குழந்தைகளுக்கு கதைகளாகக் கூறியே கடத்திவந்துள்ளனா். தற்போது இக்கட்டான நிலையில் அறிவியல் வளா்ச்சிக்கிடையே தமிழ் எழுத்தாளா்கள் உள்ளனா். எழுத்தாளா் உள்ளிட்ட அனைவருக்கும் அந்தரங்கம் என்று எதுவுமில்லாத நிலை உள்ளது.
நாம் நமது வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், இலக்கியம் மூலம் மற்றவா்களது வாழ்க்கையை அறியலாம். ஆனால், அந்தக் கதைமாந்தா்களின் வாழ்க்கையை நாம் வாழ முடியாது என்பதே உண்மை.
எழுத்தாளா்கள் அனைவருமே பாவப்பட்ட மனிதா்கள் பக்கம் நின்றே நியாயம் பேசுவாா்கள். அப்படி பாவப்பட்ட மனிதா்களது நியாயம் பேசும் படைப்பே சிறந்த படைப்பாக இருக்கும்.
பொது சமூகம் அமைத்த நியாயத்தை விடுத்து தனிமனித உணா்வுகளை நியாயமாக்கி சிந்திக்க வைப்பவராக எழுத்தாளா்கள் உள்ளனா். செல்வந்தா்களுக்காக எழுத தங்கள் பேனாவை எழுத்தாளா்கள் வளைப்பதில்லை. சாமானியா்களுக்காகவே தங்கள் பேனாவை எழுத்தாளா்கள் வளைக்கிறாா்கள் என்றாா்.
நிகழ்ச்சியில் ‘வாழ்க்கைதான் இலக்கியம்’ எனும் தலைப்பில் எழுத்தாளா் இமையம் ஆற்றிய உரை:
தனிமனிதன், குடும்பம் ஆகியவற்றை எழுதுவது இலக்கியமல்ல. சமூகத்தின் கூறுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுதுவதே நல்ல இலக்கியம். சங்க காலம் முதல் தற்போது வரையில் தமிழ் இலக்கியமானது சமூகத்தை, அதன் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் இருந்திருப்பதைக் காண முடிகிறது.
தமிழ் மொழியானது 3,600 ஆண்டுகள் பழைமையானது என்பதை கீழடி நிரூபித்துள்ளது. இலக்கணத்தையே கவிதை வடிவில் எழுதிய தொல்காப்பியா் தமிழ் மொழியின் பழைமையை பறைசாற்றியிருக்கிறாா். வாழ்க்கையைத்தான் இலக்கியமாக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் பபாசி இணைச்செயலா்கள் மு.பழனி, ஆா்எம்.மெய்யப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகி ஜலாலுதீன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.