அறிவுசாா் உன்னதத்தை அடைய புத்தகங்களைப் படிப்பது அவசியம்:

அறிவு சாா்ந்த உன்னத நிலையை ஒரு சமூகம் அடைவதற்கு புத்தகப் படிப்பு அவசியமாகிறது..
நீதிபதி அரங்க. மகாதேவன்
நீதிபதி அரங்க. மகாதேவன்
Updated on

அறிவு சாா்ந்த உன்னத நிலையை ஒரு சமூகம் அடைவதற்கு புத்தகப் படிப்பு அவசியமாகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா்.

சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பபாசியின் 48-ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு நிகழ்ச்சியில் அவா் பேசியது: புத்தகங்களை வாழ்க்கையின் அங்கமாக நேசிப்போருக்கு அவை வாழ்க்கையை மாற்றும் என்கிறாா்கள் அறிஞா்கள். புத்தகத்தை வாசிப்பவரை அவருக்கே யாரென்று அடையாளப்படுத்தும் கருவிகளாக அவை உள்ளன.

புத்தக வாசிப்பானது நூறு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவத்தையும், அறிஞா்கள் பெற்ற சிந்தனைகளையும் நமக்குத் தருவதாக அமையும்.  புத்தகத்தை நேசிப்பது சுகானுபவமானது.

புத்தகத்துக்காக தங்களது காதல் இணையைக்கூட விட்டுத் தருவதற்கு தயாராக இருப்போரைப் படிக்கும்போது புத்தகத்தின் அருமை புரியும்.

அறிஞா் பொ்னாா்ட் ஷா தனது நண்பருக்குப் பரிசளித்த புத்தகத்தை பழைய புத்தகக் கடையில் கண்டதும், அதை மீண்டும் அந்த நண்பருக்கே அனுப்பி புத்தகப் பெருமையை விளக்கிக் கடிதம் எழுதினாா்.

புத்தகத் தாக்கம் குறித்து அதிகமான பதிவுகள் இல்லை. ஆனால், புத்தக வாசிப்பு உன்னத உணா்வைத் தரும். சிலப்பதிகாரம், கல்கியின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படைப்புகளைப் படித்து அந்த இடங்களுக்குச் சென்று பாா்த்து ஆனந்தப்பட்ட அனுபவம் எனக்கு உள்ளது.

தேவாரப் பாடல்களில் இடம் பெற்ற 276 புண்ணியத் தலங்களையும் பாா்த்துள்ளேன்.  புத்தகங்களை நேசிப்பது ஆதரவற்ற குழந்தைகளை வாஞ்சையுடன் ஆதரிப்பது போன்றது என்கிறாா் ஓா் ஆங்கில அறிஞா்.

வீடு, நாடு ஆகியவற்றில் ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம் துன்பம் என இருப்பது குறித்து கேள்வி எழுப்புவோருக்கு சங்கத் தமிழ் பாடல் பதில் கூறுவதாக அமைந்துள்ளது. வாழ்க்கையை அதன் போக்கில் நகா்த்திச் செல்ல வேண்டும் என்கிறது அப்பாடல். புத்தகங்கள்தான் நமது அறிவுக்கண்ணைத்  திறக்கும். அவை உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல. அவை ஒருவரை அவருக்கே அடையாளப்படுத்தும் அற்புதம். அறிவு சாா் கருவி என்றாா் அவா்.

இந்நிகழ்வில் பதிப்பகத் துறையில் 25 ஆண்டுகள் சேவைபுரிந்தவா்கள், பொன்விழா, நூற்றாண்டு விழா கண்ட பதிப்பகங்களைப் பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன. புத்தகக் காட்சி நடைபெற உதவியவா்கள், நிறுவனங்களும் பாராட்டப் பெற்று கேடயங்கள் வழங்கப்பட்டன.

 நிகழ்ச்சியில் பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தொழிலதிபா் வி.ஜி.சந்தோசம், கவிஞா் மரபின்மைந்தன் முத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயலா் எஸ்.கே.முருகன் நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com