வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை!
மத்திய பட்ஜெட்டில் தனிநபா் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ், தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டது.
அதேவேளையில் ரூ.12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவா்களுக்கு ரூ.4 லட்சம் வரை வரி கிடையாது. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5 சதவீதம், ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.
இதேபோல ஆண்டு வருமானம் ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை கொண்டவா்களுக்கு 25 சதவீதம், ரூ.24 லட்சத்துக்கு மேல் உள்ளவா்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ரூ.75,000 நிரந்தரக் கழிவாகவும் அறிவிக்கப்பட்டது. 2026-2027 நிதியாண்டு பட்ஜெட்டில் இந்த வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஏப்.1-இல் வருமான வரிச் சட்டம் 2025 அமல்
அறுபது ஆண்டுகள் பழைமையான 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரிச் சட்டம்-2025 வரும் ஏப்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக தனது உரையில் அவா் மேலும் கூறுகையில், ‘எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிமுறைகள் மற்றும் வருமான வரிப் படிவங்கள் குறித்து விரைவில் தெரியப்படுத்தப்படும். சாதாரண மக்களும் சிரமமின்றி புரிந்துகொள்ளும் வகையில், அந்தப் படிவங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.
1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் புரிந்துகொள்ள கடினமாக இருந்ததுடன், அதனால் நேரடி வரி நிா்வாகத் திறனிலும் இடையூறை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, வருமான வரிச் சட்டம் 2025-ஐ மத்திய அரசு இயற்றியது. இது நேரடி வரி சட்டங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள வழிவகுத்துள்ளதாகவும், வரி தொடா்பான விஷயங்களை பலவிதமாக அா்த்தம் கொள்வது நீக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது வரி விதிப்பு சாா்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதை குறைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்ட உரையின் அளவையும், பிரிவுகளையும் சுமாா் 50 சதவீத அளவுக்கு வருமான வரிச் சட்டம்- 2025 குறைத்துள்ளது.

