

புது தில்லி, மே 8: நாட்டின் தேயிலை உற்பத்தி மார்ச் மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில் அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னணியில் உள்ளது இந்தியா. மார்ச் மாதத்தில் மட்டும் 4.9 கோடி டன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தியான தேயிலையின் அளவு 4.5 கோடி டன்னாகும்.
தேயிலை ஏற்றுமதி 1.79 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1.42 கோடி டன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வட கிழக்கு பிராந்தியத்தில் தேயிலை உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் தேயிலை உற்பத்தி உயர்ந்துள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி தென் பகுதியிலும் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
உயர்ரக தேயிலை உற்பத்தியாகும் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி 2.98 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இப்பகுதியில் உற்பத்தியான தேயிலையின் அளவு 2.73 கோடி டன்னாக இருந்தது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களின் தேயிலை 1.91 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இப்பகுதி தேயிலை உற்பத்தி 1.76 கோடி டன்னாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2009-10) தேயிலை ஏற்றுமதி 20 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் தேயிலை ஏற்றுமதி 19 கோடி டன்னாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.