புது தில்லி, அக்.7 : செப்டம்பர் மாதத்தில் சுங்கம் மற்றும் உற்பத்தி வரி வசூல் குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம்:
பொருளாதார மந்த நிலை,பெட்ரோலிய பொருள்கள் மீதான வரிகள் குறைப்பு போன்ற காரணங்களால், செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி வரி மற்றும் சுங்க வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது. சுங்க வரி வசூல் வரவு 10.9 சதவீதம் குறைந்து ரூ.10,126 கோடியாக உள்ளது.
உற்பத்தி வரி மூலம் கிடைக்கும் வருமானம் 0.3 சதவீதம் குறைந்து ரூ. 11,417 கோடியாக உள்ளது.
ஆனால், இதில் ஆறுதல் அளிக்கும் விதமாக, மறைமுக வரி விதிப்பில் சேவை வரிகள் மூலம் கிடைக்கும் வருமானம் 29.6 சதவீதம் அதிகரித்து ரூ.6,967 கோடியாக காணப்படுகிறது. சென்ற ஆண்டு இதே காலத்தில் இது ரூ.5,374 கோடியாக இருந்தது.
செப்டம்பர் மாதத்தில் மறைமுக வரி விதிப்புகளின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் 1.2 சதவீதம் உயர்ந்து ரூ.28,510 கோடியாக அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயு, டீஸல்,மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் மீதான இறக்குமதி மற்றும் உற்பத்தி வரி விகிதங்களை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு குறைத்தது. இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.49,000 கோடி இழப்பு ஏற்பட்டது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ( ஏப்ரல்-செப்டம்பர்) மறைமுக வரிகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ 1.69 லட்சம் கோடியாக உள்ளது. இதே காலத்தில் சுங்க வரிகள் மூலம் கிடைக்கும் வருமானம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.73,247 கோடியாக உள்ளது. உற்பத்தி வரிகள் மூலம் கிடைக்கும் வருமானம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.58,964 கோடியாக காணப்படுகிறது. சேவை வரிகள் மூலம் கிடைக்கும் வருமானம் 35.6 சதவீதம் உயர்ந்து ரூ.36.459 கோடியாக இருந்தது.
2011-12 ம் ஆண்டின் முதல் அரையாண்டின் இறுதியில், சுணக்க நிலை போன்ற காரணங்கள் சுங்கம் மற்றும் உற்பத்தி வரிகள் மூலம் வருமானத்தில் சரிவு ஏற்பட்டது.
ஜுலை மாதத்தில் தொழில் துறை உற்பத்த வளர்ச்சி 3.3 சதவீதமாக உள்ளது. கடந்த 21 மாதங்களில் இதுவே மிக குறைவானதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.