
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, வீட்டு வசதிக் கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆய்வுக் கூட்டம் இதுவாகும். நிதிக் கொள்கை முடிவுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதையடுத்து, கடனுக்கான புதிய வட்டி விகிதம் 6.50 சதவீதமாக இருக்கும்.
பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) தற்போதைய 5.75 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) 4 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன் பிறகு, 6 மாதங்கள் கழித்து வட்டி விகிதம் தற்போதுதான் குறைக்கப்படுகிறது.
பிற வர்த்தக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை ஏற்கெனவே 0.25%-0.50% குறைத்துள்ளன.
தனியார் முதலீடுகள் அதிகரிக்க இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கை உதவியாக அமையும்.
பொருளாதார வளர்ச்சி
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும். பணவீக்கம் 5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும். 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் காரணமாக பணவீக்கம் 1.5 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதிய வங்கி உரிமம்
நிறுவனத்தின் நிதி-சொத்துகளைப் பாதுகாக்கும் தனி வங்கிகள், நீண்ட கால அடிப்படையில் மொத்தமாக நிதி உதவி செய்யும் வங்கிகள் உள்ளிட்ட வித்தியாசமான செயல்பாடுகளைக் கொண்ட வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று ரகுராம் ராஜன் கூறினார்.
வரவேற்பு
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சிறப்பான அளவில் ஊக்குவிக்க உதவும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை ஏற்கெனவே குறைத்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை அவ்வங்கிகள் மேலும் வட்டியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.