அழிந்து வரும் பாரம்பரிய கால் கொலுசு டிசைன்கள்

அழிந்து வரும் பாரம்பரிய கால் கொலுசு டிசைன்கள்

சேலம் மாவட்டம் கடந்த நூறு ஆண்டுகளாக வெள்ளிக் கால் கொலுசு தயாரிப்புத் தொழிலில் கொடிக்கட்டிப் பறந்து வருகிறது.
Published on

சேலம் மாவட்டம் கடந்த நூறு ஆண்டுகளாக வெள்ளிக் கால் கொலுசு தயாரிப்புத் தொழிலில் கொடிக்கட்டிப் பறந்து வருகிறது.

சௌராஷ்டிரப் பிரிவினரைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் கால் கொலுசு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலை மாறி, தற்போது அனைத்துத் தரப்பினரும் வெள்ளிக் கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னர், கொலுசு தொழில் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு ஆகிய சில பகுதிகளிலேயே நடைபெற்று வந்தது. தற்போது சேலம் மாநகரில் குகை, மணியனூர், சேலத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி, இரும்பாலை, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, மூன்று சாலை உள்ளிட்ட இடங்களில் பிரதான தொழிலாக உள்ளது.

இந்த இடங்கள் வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட ஆபரணங்கள் தயாரிக்கும் முக்கிய இடங்களாக அறியப்படுகின்றன.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முதலாளிகள் வெள்ளிக் கட்டிகளை உருக்கி, வெள்ளிப் பட்டறைகளுக்கு கொடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் வெள்ளிப் பட்டறைகள் மூலம் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

வெள்ளிக் கொலுசை உருவாக்குவதற்கு 13 வகையான பணிகளைச் செய்ய வேண்டி உள்ளது. இதன் மூலமும் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

சேலத்தில் தயாராகும் கேரள செயின், ஆந்திரா செயின், பாம்பே டிசைன் உள்ளிட்ட பல்வேறு வகையான கொலுசுகள், பலவித மெட்டிகள், குழந்தைகளுக்கான தண்டை, கொலுசுகள், அரைஞாண் கயிறுகள், ஒட்டியாணங்கள் போன்ற ஆபரணங்கள் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவற்றில் கைகளால் தயாரிக்கப்படும் சேலம் கொலுசுகளுக்கு வட மாநிலங்களில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளதால், இந்தத் தொழில் சேலத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலையில் பாரம்பரியமிக்க பழைமையான டிசைன்கள், அதாவது கைகளால் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்படும் கால் கொலுசுகளை செய்யத் தெரிந்தவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால், பழைமையான டிசைன்கள் அழிந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அழிந்து வரும் பாரம்பரிய டிசைன்களை மீட்டெடுக்கும் முயற்சியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னையில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள் சேலத்தில் பாரம்பரியக் கலைஞர்களிடம் கொலுசு டிசைன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, டிசைன்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் வெள்ளி கால் செயின் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், மாநகர மாவட்ட பாஜக தலைவருமான ஆர்.பி.கோபிநாத் கூறியதாவது:

சேலத்தில் தயாராகும் வெள்ளிக் கொலுசுகள் தமிழகம் மட்டுமன்றி, கடல் கடந்தும் பிரபலமாக உள்ளது. ஆனால், பழைமையான, பாரம்பரியமான கால் கொலுசுகளான ஜிலேபி, திராட்சை கொடி, சிந்தாமணி, மேனகா, காபி கொட்டை உள்ளிட்ட டிசைன்களில் தயாரிக்க தற்போது போதிய நபர்கள் இல்லை.

தற்போது கொலுசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 60% பேருக்குப் பாரம்பரியமிக்க கொலுசு டிசைன்கள் குறித்து தெரியாததால், அவை முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. பாரம்பரிய வடிவங்களை உருவாக்குவதில் நவீன முறைகளை அறிமுகப்படுத்தவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

படம்: மா. பாலசுப்பிரமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com