திருப்புமுனை தேடும் திண்டுக்கல் பூட்டு

தமிழகத்தில் திண்டுக்கல் மட்டுமன்றி, ராஜபாளையம், தேவகோட்டை, கோவை(மலுச்சம்பட்டி) ஆகிய பகுதிகளும் பூட்டு உற்பத்தி தொழிலுக்கு பெயர் பெற்றிருந்தாலும், உலக அளவில் திண்டுக்கல் நகருக்கு மட்டுமே ஓர் அடையாளத்தை
திருப்புமுனை தேடும் திண்டுக்கல் பூட்டு
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் திண்டுக்கல் மட்டுமன்றி, ராஜபாளையம், தேவகோட்டை, கோவை(மலுச்சம்பட்டி) ஆகிய பகுதிகளும் பூட்டு உற்பத்தி தொழிலுக்கு பெயர் பெற்றிருந்தாலும், உலக அளவில் திண்டுக்கல் நகருக்கு மட்டுமே ஓர் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. திண்டுக்கல் நாகல் நகர், நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, மாலைப்பட்டி, பாலமரத்துப்பட்டி, குட்டியப்பட்டி உள்ளிட்ட இடங்களில், பூட்டுத் தொழில் நடைபெற்று வந்தது.
அலிகர் பூட்டுகளின் வரவு திண்டுக்கல் பூட்டு உற்பத்தி தொழிலுக்குத் தடை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இறக்குமதி செய்யப்பட்டு வரும் சீனப் பூட்டுகள், இந்தத் தொழிலை முழுமையாக நலிவடையச் செய்து வருகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு 1,000 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த பூட்டு உற்பத்தி தொழிலில், தற்போது 100 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். போதிய வருமானம் இல்லாத நிலையில், பல தொழிலாளர்களும், அவர்களின் வாரிசுகளும் மாற்றுத் தொழில் தேடி வெளியேறிவிட்டனர்.
பூட்டுத் தொழிலில் பல நுணுக்கங்கள் தெரிந்த பல தொழிலாளர்கள் இருந்தாலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தற்காலச் சூழலுக்கு ஏற்ப புதுமைகளைப் புகுத்தி முன்னேற்றம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், வர்த்தகர்களைக் கடந்து, உற்பத்தி செய்யப்படும் பூட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் திறன் தொழிலாளர்களிடம் இல்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், உற்பத்தித் திறனுக்கான விலையிலேயே பூட்டுகளைக் கொள்முதல் செய்கின்றனர். அதன் பின்னர், சந்தைக்கு வரும் இந்த பூட்டுகளின் மேல் 2 மடங்கு விலையேற்றம் செய்யப்படுகிறது.
ரூ. 100-க்கு சீனப் பூட்டும், ரூ. 200-க்கு அலிகர் பூட்டும் கிடைக்கும் நிலையில், ரூ. 400 கொடுத்து திண்டுக்கல் பூட்டுகளை வாங்குவதற்கு நுகர்வோர் விரும்புவதில்லை. தரத்தில் முன்னிலையில் இருந்தாலும், அதிகப்படியான விலை காரணமாக திண்டுக்கல் பூட்டுகள் விற்பனையில் சரிவை சந்தித்தன.
திண்டுக்கல் நகரின் அடையாளமாக விளங்கும் பூட்டுத் தொழிலை மேம்படுத்துவதற்கு அரசு நிதியுதவி அளித்தால், மீண்டும் உச்சத்தை எட்ட முடியும் என்கிறார் திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலர் ஏ.பிரேம்குமார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்திய அளவில் ஆண்டுதோறும் ரூ. 4 ஆயிரம் கோடிக்கு பூட்டுத் தொழில் மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தின் முக்கிய உற்பத்திக் கேந்திரமாக உள்ள திண்டுக்கல் பகுதியின் வர்த்தகம் ரூ. 4 கோடிக்கும் குறைவாகவே உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில், பழைமை, பாரம்பரியம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தால், போட்டிகளை சமாளிக்க முடியாமல் பின்னடைவை மட்டுமே சந்திக்க நேரிடும் என்பதைத் தற்போதுதான் பூட்டுத் தொழிலாளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல தொழிலாளர்கள், வியாபாரிகளிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு தொழில் செய்கின்றனர். இதனால், வியாபாரிகள் நிர்ணயிப்பதே ஊதியமாக உள்ளது. ஒரு கால கட்டத்தில், தகுந்த ஊதியம் கிடைக்காமல் தொழிலைவிட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எஞ்சியுள்ள தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் திண்டுக்கல் பூட்டுத் தொழிலை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அரசுத் தரப்பில் நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கும், தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தால், பூட்டுத் தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வாழ்வு உயரவும், திண்டுக்கல்லின் அடையாளத்தை மீட்டெடுக்கவும் முடியும் என்றார் அவர்.
-ஆ. நங்கையார் மணி

24 வகையான பூட்டுகள்

5, 6, 7, 8, 12, 14, 16 லீவர் பூட்டு, கொத்துப் பூட்டு, மாங்கா பூட்டு, பாட்னர்ஷிப் லாக் (4 சாவி பூட்டு), மாஸ்டர் கீ பூட்டு (ஒரு சாவியைக் கொண்டு பூட்டிய பிறகு, மற்றொரு சாவியைக் கொண்டு திறந்து பூட்டினால், மீண்டும் பழைய சாவி மூலம் திறக்க முடியாது) சாவி பிடிக்கிற பூட்டு (வேறு சாவியை பயன்படுத்தினால், வெளியே எடுக்க முடியாதவாறு பிடித்துக் கொள்ளும்), பெல் பூட்டு, டபுள் லாக், கோயில் பூட்டு (12 அங்குலம் முதல் 24 அங்குலம் வரை) என 24 வகையான பூட்டுகள் திண்டுக்கல் நகரில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சமீப காலமாக பூட்டை உடைத்துத் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், உடைக்கப்பட்ட பூட்டுகளில் திண்டுக்கல் பூட்டு இல்லை என்பதிலிருந்து இதன் தரத்தை அறிந்து கொள்ள முடியும். ஏழைகளின் உணவு என ஒதுக்கப்பட்ட கேப்பையும், கம்பும் இன்று ஆரோக்கிய உணவுப் பட்டியலில் இடம் பெற்றது போல், தரத்தில் சிறந்த திண்டுக்கல் பூட்டுகளுக்கு மீண்டும் வரவேற்பு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பூட்டுத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com