அமேசானையே ஆட்டிப்படைத்த 'அதிபுத்திசாலிகள்' கைது: ரூ.12 லட்சம் பறிமுதல்!

பிரபல ஆன்லைன் நிறுவனம் அமேசானிடம் இருந்து பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டனர். 
அமேசானையே ஆட்டிப்படைத்த 'அதிபுத்திசாலிகள்' கைது: ரூ.12 லட்சம் பறிமுதல்!
Published on
Updated on
1 min read

இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தகம் தற்காலத்தில் அதிகளவில் பிரபலமானதாகத் திகழ்கிறது. அங்காடிக்குச் சென்று பொருள் வாங்கும் பழக்கம் குறைந்து அனைத்தும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்யப்படுகிறது.

இதில், பிரபல பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் உள்ளிட்டவை பிரபலம். மொபைலில் உள்ள ஆப்ஸ் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்வதன் மூலம் அவை இல்லம் தேடி வருவது இதன் சிறப்பம்சமாகும். 

ஆனால், இதுமாதிரியான ஆன்லைன் ஆர்டர்களில் செங்கல், காலி பெட்டி உள்ளிட்டவையும் வருவது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை. அதுபோல இந்நிறுவனங்களை ஏமாற்றும் கில்லாடிகளும் அவ்வப்போது சிக்குவதும் வாடிக்கைதான்.

அவ்வகையில், தில்லியின் புறநகர் பகுதியில் ஆன்லைன் நிறுவனமான அமேசானை பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய பலே கில்லாடிகள் இருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் விலை உயர்ந்த மொபைல் ஃபோன்களை ஆர்டர் செய்துவிட்டு பிறகு அது சரியில்லை, வீடு வந்து சேரவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி தங்கள் பணத்தை திரும்ப கேட்டுப் பெறுவர். ஆனால் அந்த மொபைல் ஃபோன்களை வெளியே கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் இதுபோன்று 166 ஆர்டர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அமேசான் நிறுவனத்தில் பதிவாகியுள்ளன. எனவே இதன் அடிப்படையில் தில்லி காவல்துறையில் அந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறை, அந்த இருவரின் இந்த குற்ற நடவடிக்கைகளை கண்டுபிடித்து, கைது செய்தனர். அப்பகுதியின் அமேசான் நிறுவனத்தின் ஊழியர் இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு உதவி செய்தார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான அமேசான் நிறுவனத்திடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் ஷிவம் சோப்ரா (21 வயது) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் சச்சின் ஜெயின் (38 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து உபயோகத்தில் உள்ள 141 சிம் கார்டுகள், 150 புதிய சிம்கார்டுகள், 40 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 19 மொபைல் ஃபோன்கள், ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் உளளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றிருந்தது.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அமேசான் நிறுவனம் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com