
நவீன விறகு அடுப்புகள் அதிக அளவில் புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், அதற்கான வணிக வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
கெரோசின், கேஸ், எலக்டிரிக் அடுப்புகள் கண்டுபிடிப்பதற்கு முன்னதாக, நம் நாட்டு சமையலறைகளில் மண் அடுப்புகள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. விறகு, விவசாய விளைபொருட்களில் வீணாகும் காய்ந்த கழிவுகளை அந்த அடுப்புகளில் பயன்படுத்தினர். காலப்போக்கில், நவீனமயமாதல் காரணமாகவும், நகரமயமாதல் காரணமாகவும் கெரோசின், கேஸ் மற்றும் எலக்ட்ரிக் அடுப்புகள் புழக்கத்துக்கு வந்தன.
ஆனாலும் இன்றளவும் கிராமங்களில் விறகு அடுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. நகர்ப்புறங்களில் கூட ஒருசில பயன்பாட்டிற்கு விறகு அடுப்புகளை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், புகை மாசுக் கட்டுப்பாடு போன்ற காரணங்களுக்காக, விறகுகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், விறகு அடுப்புப் புகையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் காலத்திற்கு உகந்த நவீன விறகு அடுப்புகள் புழக்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்டங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டு புதிய கண்டுபிடிப்பாக இந்த நவீன விறகு அடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பழங்கால அடுப்புகளைப் போல விறகுகளைப் பயன்படுத்தினாலும், புகை வெளியேறாத வகையில் இந்த நவீன விறகு அடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும், பெண்களுக்கு புகையினால் ஏற்படும் சுவாச கோளாறுகளில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் இந்த நவீன விறகு அடுப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிலும், குறைந்த அளவு விறகைப் பயன்படுத்தி அதிக எரிசக்தியை வழங்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த உற்பத்தியாளர் எம்.வி. சுவாமிநாதன் கூறியது: இன்றும் கூட, உலக அளவில் கணிசமான எண்ணிக்கையினர் பல்வேறு காரணங்களுக்காக விறகு போன்ற எரிபொருளை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில், சுற்றுச்சூழல், பாரம்பரிய சமையல் முறைகள், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், புகையில்லா நவீன விறகு அடுப்புகளுக்கான தேவையும் உணரப்படுகிறது. இதற்கான நல்ல வணிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. குறைந்த விலையில், தரமான அடுப்புகளைத் தயாரித்து விற்பனை செய்தால் தொழில் மேலும் வளர்ச்சி அடையும்.
வீட்டு சமையலறைகளுக்கு மட்டுமல்லாது, மிகப் பெரிய அளவில் சமையல் செய்யும் உணவகங்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் பெரிய அடுப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவு இந்தப் புகையில்லா நவீன விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய அடுப்புகளுக்கு ஏற்றுமதி வணிக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அவர் கூறினார்.
- ஆம்பூர் எம். அருண்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.