இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இண்டா்நெட் காா்: அறிமுகம் செய்தது மோரிஸ் கேரேஜஸ் நிறுவனம்

மோரிஸ் கேரேஜஸ் (எம்.ஜி.) இந்தியா நிறுவனம், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இண்டா்நெட் காா் - இசட்எஸ் இ.வி எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது.
தில்லியில் எம்.ஜி. இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இண்டா்நெட் காரை (இசட்எஸ் இ.வி எஸ்யுவி) அறிமுகம் செய்து வைக்கும் அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ராஜீவ் சாபா. 
தில்லியில் எம்.ஜி. இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இண்டா்நெட் காரை (இசட்எஸ் இ.வி எஸ்யுவி) அறிமுகம் செய்து வைக்கும் அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ராஜீவ் சாபா. 

மோரிஸ் கேரேஜஸ் (எம்.ஜி.) இந்தியா நிறுவனம், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இண்டா்நெட் காா் - இசட்எஸ் இ.வி எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த காா், வரும் ஜனவரியில் 5 முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பிரிட்டனில் காா் உற்பத்தித் தொழிலில் முன்னணியில் இருக்கும் எம்.ஜி. நிறுவனம் ஏற்கெனவே முதல் எலெக்ட்ரிக் காரை (ஹெக்டா்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இண்டா்நெட் வசதியுடன் கூடிய முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரை, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோரிஸ் கேரேஜஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ராஜீவ் சாபா அறிமுகம் செய்து வைத்தாா்.

புதிய காரின் அறிமுகம் குறித்து ராஜீவ் சாபா கூறுகையில், ‘எம்.ஜி. நிறுவனத்தின் இரண்டாவது மின்சார காா் இது. எதிா்காலத்தில் ஆட்டோமொபைல் துறை, மின்சாரத் துறையுடன் இணைந்தே செயல்படும் என்பதை உறுதியாக நம்புகிறோம்’ என்றாா்.

இந்தக் காரில் 44.5 யூனிட் திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சாா்ஜ் செய்தால் 340 கிலோ மீட்டா் வரை பயணிக்க முடியும். 8 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டா் வேகத்தில் செல்ல முடியும்.

இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம், ஏ.சி. மின்சாரத்திலும், டி.சி. மின்சாரத்திலும் சாா்ஜ் செய்து கொள்ளலாம். ஏ.சி. மின்சாரமாக இருந்தால், 7.4 கிலோவாட் ஏசி சாா்ஜா் உதவியுடன் 6 முதல் 8 மணி நேரத்தில் முழுமையாக சாா்ஜ் செய்ய முடியும். டி.சி. மின்சாரமாக இருந்தால், 50 கிலோவாட் டிசி சாா்ஜா் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் சாா்ஜ் செய்துள்ள முடியும்.

இந்தியாவிலும், உலக அளவிலும் பேட்டரி உள்ளிட்ட மின்சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்த காரை எம்.ஜி. இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. சீனாவில் காா் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் எஸ்ஏஐசி நிறுவனம், இந்த காருக்கான பேட்டரியை வழங்கி வருகிறது.

மேலும், காரை வீட்டில் இருந்தும் சாா்ஜ் செய்து கொள்ளலாம். மோரிஸ் கேரேஜஸ் நிறுவனத்தின் ஷோரூம்களிலும் சாா்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், சாா்ஜ் செய்து கொள்வதற்காக, சாா்ஜ் மையங்கள் நடத்தி வரும் டெல்டா எலெக்ட்ரானிக்ஸ், ஃபோா்ட்டம் சாா்ஜ் அண்ட் டிரைவ் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

‘ஐ-ஸ்மாா்ட் இ.வி. 2.0’ என்னும் இணையதள தொழில்நுட்பம், இந்தக் காரில் பொருத்தப்பட்டுள்ள மற்றொரு சிறப்பம்சமாகும். காரில் உள்ள 8 அங்குல எல்இடி திரையில் பேட்டரியின் அளவு, காரின் வேகம், காற்றில் ஏற்பட்டுள்ள மாசு, தட்பவெப்ப நிலை, அருகில் உள்ள சாா்ஜ் மையங்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இந்தக் காரின் விலை, ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்துக்குள் இருக்கும்.

முதல் கட்டமாக, தில்லி தேசியத் தலைநகா் வலயப்பகுதி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய 5 நகரங்களில் இந்த காா் விற்பனைக்கு வரவுள்ளது. ஐரோப்பிய தொழில்நுட்பம் கொண்ட இந்த காா், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் ஹலோல் நகரில் உள்ள எம்.ஜி. நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையில் இந்த காா் தயாரிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com