
சென்ற 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து காபி வாரியம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2017-இல் நாட்டின் காபி ஏற்றுமதி 3,78,119 டன்னாக இருந்த நிலையில், 2018-இல் அதன் ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவைக் கண்டு 3,50,280 டன்னாகியுள்ளது.
இதே காலத்தில், காபி ஏற்றுமதியானது மதிப்பின் அடிப்படையிலும் ரூ.6,091 கோடியிலிருந்து சரிந்து ரூ.5,770.48 கோடியாகியுள்ளது.
ரோபஸ்டா மற்றும் இன்ஸ்டண்ட் காபி ஏற்றுமதி சரிவடைந்ததையடுத்து ஒட்டுமொத்த காபி ஏற்றுமதி பின்னடைவைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டில் இத்தாலிக்கு அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு ரூ.76,437.56 டன் காபி ஏற்றுமதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனிக்கு 28,582 டன்னும், ரஷியாவுக்கு 21,397 டன்னும் காபி ஏற்றுமதியாகியுள்ளது.
ஒட்டுமொத்த காபி ஏற்றுமதியில் ரோபஸ்டா வகை காபி ஏற்றுமதி 2,18,463 டன்னிலிருந்து 17.65 சதவீதம் சரிவடைந்து 1,79,903 டன்னாக இருந்தது. இன்ஸ்டண்ட் வகை காபியும் 48,496 டன்னிலிருந்து 39.87 சதவீதம் வீழ்ச்சியடைந்து 29,157 டன்னானது. இருப்பினும், அராபிகா வகை காபி ஏற்றுமதி அவ்வாண்டில் 47,314 டன்னிலிருந்து அதிகரித்து 53,302 டன்னாக இருந்தது.
காபி ஏற்றுமதி குறைந்துள்ள போதிலும் அதனால் கிடைக்கக்கூடிய வருவாய் டன்னுக்கு ரூ.1,61,086-லிருந்து அதிகரித்து ரூ.1,64,738-ஆக இருந்தது என காபி வாரியம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...