பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 377 புள்ளிகள் சரிவு

சாதகமற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவை சந்தித்தது.


சாதகமற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 377 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வேளாண் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சலுகை திட்டங்களால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. இதன் காரணமாக அவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாய் குறையும் என மதிப்பிட்டுள்ளது, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மோட்டார் வாகனம், மருந்து, உலோகத் துறை பங்குகள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதையடுத்து அத்துறை நிறுவனப் பங்குகளின் விலை 2 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்தது. 
மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஓஎன்ஜிசி, வேதாந்தா, டாடா ஸ்டீல், எல் அண்டு டி, என்டிபிசி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 3.04 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.
பேங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை இணைய மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது. 
அதன் எதிரொலியாக , தேனா வங்கி பங்கின் விலை 19 சதவீதமும், விஜயா வங்கி பங்கின் விலை 6 சதவீதமும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 377 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 35,513 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 120 புள்ளிகள் சரிந்து 10,672 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com