பொதுமக்களின் நண்பனா வங்கிகள்?

முன்னொரு காலத்தில் சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைத்திருந்தால் அதற்கான வட்டி தொகை சேர்க்கப்பட்டு அந்த தொகை பெருகியிருக்கும்.ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.
பொதுமக்களின் நண்பனா வங்கிகள்?

* பண பரிமாற்ற கட்டணம்
* குறுஞ்செய்தி கட்டணம்
* ஏடிஎம் பயன்பாட்டு கட்டணம்
* காசோலை கட்டணம்

முன்னொரு காலத்தில் சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைத்திருந்தால் அதற்கான வட்டி தொகை சேர்க்கப்பட்டு அந்த தொகை பெருகியிருக்கும்.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.
நமது சிறுக சிறுக சேமிக்கும் பணம், வங்கியின் சேவை கட்டணப் பிடித்தலுக்கே பற்றாக்குறையாகி விடுகிறது. பணம் எடுப்பதற்கு கட்டணம், பரிமாற்ற தகவல் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வருவதற்கு கட்டணம், காசோலைக்கு கட்டணம், ஏடிஎம் பயன்பாட்டுக்கு கட்டணம் என பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை கறப்பதிலேயே வங்கிகள் குறியாகிவிட்டன.
பொதுமக்கள் சேமிக்கும் பணத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதனை ஒருங்கிணைத்து தேவைப்படுவோருக்கு கடனாக அளித்து, தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் முதன்மையாக கொண்டே வங்கிகள் தொடங்கப்பட்டன. அப்போதெல்லாம், வங்கிச் சேவை என்பது கனியாக இனித்தது, இப்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டதால் கசப்பானதாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும், கட்டணம் என்பது வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது.
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏழை எளிய நடுத்தர மக்களே. மத்திய, மாநில அரசுகளின் உதவி திட்டங்களைப் பெற வங்கிக் கணக்கு என்பது தனிமனிதனின் அத்தியாவசிய தேவையாக இப்போது மாறிவிட்டது. தங்களிடம் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்று கூறி வங்கிகள் தங்களது இஷ்டத்துக்கு அபராத தொகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் அவர்கள்.
ஒரு சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் இருப்பை மைனஸ் டிகிரிக்கு கொண்டு செல்லும் வங்கிகள் பணத்தை அவசரத் தேவைக்காக போடும்போது வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே அதை எடுத்து விடுகின்றன. இதனால், அல்லல்படுவோர் ஏராளம். 
குறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதை மட்டும் காரணம் காட்டி சென்ற நிதியாண்டில் மட்டும் வங்கிகள் வசூலித்த அபராத தொகை ரூ.5,000 கோடி. இது ஏதோ வசதி படைத்தவர்கள் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை அல்ல. அன்றாடம் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை மக்களின் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம். வங்கிகள் தங்கள் இஷ்டம்போல் அபராத தொகையை நிர்ணயித்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணத்தை கறந்து விடுகின்றன. 
வங்கிகள் தங்களது இடர்பாடான கடன் செயல்பாடுகள் மூலம் ஈட்டும் லாபத்தை காட்டிலும் இது போன்று கணக்கிலிருந்து அபராதத்தின் மூலம் அநாயசமாக எடுக்கும் தொகை அதிகமாக இருப்பதை வைத்தே அப்பிரச்னையின் தீவிரத்தை நாம் உணரலாம். இதனால் பாதிக்கப்படுவது வசதி படைத்தவர்கள் அல்லர் ஏழை எளிய நடுத்தர மக்களே.
படித்தவர் உள்பட பலருக்கு வங்கிகளில் எவ்வளவு இருப்பு வைக்கவேண்டும், எந்தெந்த சேவைக்கு எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. வங்கிகள் அவ்வப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சேவை கட்டணங்களை மாற்றியமைப்பதும் அதற்கு ஒரு காரணம். இன்னும் சொல்லப்போனால், அதுபோன்ற விதிமுறைகளை வங்கிகள் விரிவாக வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க தயாராக இல்லை. 
முன்பெல்லாம், வாடிக்கையாளர்களுக்கும்-வங்கியாளர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான- அன்பான நட்புறவு காணப்படும். தற்போது வங்கிச் சேவை அனைத்தும் இயந்திரமயமாகிவிட்டதால் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. 
வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணப் பிடித்தலுக்கு வங்கிகள் கூறும் காரணங்கள், வாராக் கடன், தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், விரிவாக்க நடவடிக்கை, ஏடிஎம் மையங்களை அமைப்பது, டிஜிட்டல் சேவைகளை வழங்குவது உள்ளிட்ட இன்னும் பல.
வங்கிகளின் வாராக் கடன் என்பது ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரூ.1 லட்சம் கோடி கடன் மட்டுமே வேளாண் துறையைச் சார்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதி தொழில் நிறுவனங்களுக்கானவை. அதிலும், பெரும்பகுதி ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவை.
பல கோடி ஏழை எளிய நடுத்தர பிரிவு வர்க்கத்தினரின் சேமிப்பை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிறுவனங்களுக்கு வாரி இறைத்து விட்ட வங்கிகள் அதனை வாராக் கடனாக்கி விட்டு, பின் வாடிக்கையாளரிடம் பணத்தை கறக்க அதையே காரணமாக கூறுவது ஏற்க கூடிய செயலா? என்பதே பல வாடிக்கையாளர்களின் கேள்வியாக உள்ளது. 
கெடுபிடிகளின் பேரில் வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் தற்போதுதான் முழுமூச்சாக செயல்பாட்டில் இறங்கியுள்ளன. அதனை பிரதிபலிக்கும் விதமாகவே, வங்கிகளுக்கு நீண்ட காலம் பாரமாக இருந்த வாராக் கடன் தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அண்மையில் தெரிவித்துள்ளார். 
இதுபோன்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வாராக் கடனை குறைக்க வங்கிகள் வழி தேட வேண்டுமே தவிர அதனை காரணம் காட்டி வங்கிகள் வாடிக்கையாளரை கஷ்டத்துக்கு ஆளாக்க கூடாது என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.
வங்கிச் சேவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என்பதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம். அதனை அடிப்படையாகக் கொண்டே தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் வங்கிகள் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கோராமல் வாடிக்கையாளரிடம் சேவை கட்டணத்தை வசூலிக்க அதனை காரணமாக கூறுவது ஏற்புடையதாக இல்லை.
வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணத்தைப் பெற வங்கிகள் தெரிவிக்கும் மற்றொரு காரணம் ஏடிஎம் மையங்கள் அமைக்க மேற்கொள்ளப்படும் முதலீடு. வாடிக்கையாளர் பலர் இன்னும் கிளைகளுக்கு வந்து நேரடியாக பணம் எடுப்பதையே விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக, பெண்களும், முதியவர்களும். ஆனால், வங்கிகள் தான் அவர்களை ஏடிஎமில் பணத்தை எடுக்க கட்டாயப்படுத்துகின்றன. இதனால் அவர்களுக்கு இழப்புதான் ஏற்படுகின்றன. ஏனெனில், உழைத்து சேர்த்த பணத்தை ஒரு ரூபாய் கூட வீணாக போகக் கூடாது என்றுதான் எந்த வாடிக்கையாளரும் விரும்புவர். அதனை வங்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஏடிஎம் களில் ஏற்படும் குளறுபடிக்கும் வாடிக்கையாளரே பொறுப்பாளியாகி பணத்தை இழக்க வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. பணம் எடுக்கும்-போடும் அல்லது இருப்புத் தொகை உள்ளிட்ட சேவைகளை பெற முற்படும்போது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்படும் குளறுபடிக்கும் வாடிக்கையாளரே பொறுப்பேற்று தனது பணத்தை இழக்க வேண்டியுள்ளது.
பலருக்கு இதுபோன்ற இன்னல்கள் இருந்தபோதும் யாரும் இதுகுறித்த புகார்களை வங்கிகளுக்கு சென்று தெரிவிக்க முற்படுவதில்லை. இதற்கு அலைகழிப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், அவசர உலகில் அவரவர் பிழைப்பைத்தேடி ஓடி வேண்டிய கட்டாயத்தில் இது அவர்களின் கண்களுக்கு பெரிதாக படுவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. 
பொதுமக்களின் சலுகையை பறிக்கும் வங்கிகள்
ரொக்கப் பயன்பாட்டை குறைத்து மக்களிடம் டிஜிட்டல் வாயிலான சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால், அரசால் வழங்கப்படும் சலுகைகள் வங்கிகளால் பறிபோகின்றன.
சமையல் எரிவாயுவுக்கான பணத்தை ஆன்லைன் வழியாக செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அதன் அடக்க விலையில் ரூ.5-ஐ தள்ளுபடி வழங்குகிறது. இதனால் அகம் மகிழ்ந்து டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்தினால் நமக்கு ஏற்படுவதோ ரூ.10 வரை இழப்புதான்.
வங்கிகளின் உதவியில்லாமல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது எப்படி சாத்தியமாகும். ஆனால், அதிலும் பரிமாற்ற கட்டணம், ஜிஎஸ்டி என வசூலித்தால் மத்திய அரசின் சலுகைகள் பொதுமக்களை எப்படி சென்றடையும். வங்கிகள் தங்களது வருமானத்தை உயர்த்தி கொள்ள அக்கறை காட்டுகின்றனவே தவிர டிஜிடல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது குறித்து அவற்றுக்கு அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் ஆன்லைனில் சமையல் எரிவாயுக் கட்டணத்தைச் செலுத்தி பணத்தை இழந்த வாடிக்கையாளர் ஒருவர். 
கட்டணய நிர்ணயத்தைப் பொருத்தவரையில் வங்கிகள் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாகவே காணப்படுகிறது. அதன் காரணமாகவே, சேவை கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபட்டு காணப்படுகின்றன. இதற்கு, முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது பெரும்பாலான வாடிக்கையாளரின் கோரிக்கையாக உள்ளது.
சேவைகள் அனைத்தும் வணிகமயமாகிவிட்ட சூழலில் அதனை இலவசமாக எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தான். இந்த சூழ்நிலையில், அனைவரும் மனமுவந்து ஏற்க கூடிய வகையிலான ஒரேவிதமான கட்டணங்களை நிர்ணயிப்பது வங்கிகளின் கடமை.
அதேபோன்று, பொதுமக்களை பாதிக்கும் வகையிலான வங்கிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ரிசர்வ் வங்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடைமையும் கூட.
தற்போதைய விரும்பத் தகாத சூழ்நிலைகளால் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் சற்று அந்நியப்பட்டிருந்தாலும் கூட, அவை எதிர்காலத்தில் வாழ்க்கையின் உற்ற நண்பனாகவும், இக்கட்டான பொழுதில் கைகொடுக்கும் தோழனாகவும் விளங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
-அ. ராஜன் பழனிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com