சுடச்சுட

  

  கருப்பு பணத்தை கணக்கிடுவது கடினமான காரியம்: நாடாளுமன்றக் குழு

  By DIN  |   Published on : 24th June 2019 08:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Veerappa_Moily



  இந்தியாவுக்கு வெளியே இருக்கும் கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத்துகளை கணக்கிடுவது கடினமான காரியம் என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. 

  மார்ச் 2011-இல் என்பிஎஃப்பி, என்சிஏஈஆர் மற்றும் என்ஐஎஃப்எம் ஆகிய நிறுவனங்களிடம், இந்தியா மற்றும் இந்தியாவுக்கு வெளியே கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத்துகளின் மதிப்பீடுகள் குறித்து ஆய்வு நடத்துமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்த ஆய்வுகளின் முடிவை காங்கிரஸ் தலைவர் எம்.வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்றக் குழு, இன்று (திங்கள்கிழமை) மக்களவையில் அறிக்கையாக தாக்கல் செய்தது.

  இந்த ஆய்வுகளின் முடிவில் 1980 மற்றும் 2010-க்கு இடைப்பட்ட காலகட்டங்களில், கணக்கில் வராத வெளிநாடு சொத்துகளின் மதிப்பு 216-490 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்தகம், பான் மசாலா, குட்கா, புகையிலை, சரக்கு வியாபாரம், திரைப்படம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் தான் அதிகளவில் கணக்கில் வராத வருமானம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

  என்சிஏஈஆர் நடத்திய ஆய்வின் முடிவில், 1980-2010 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வெளியே கணக்கில் வராத சொத்துகளின் மதிப்பு 384 - 490 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

  என்ஐஎஃப்எம் ஆய்வின் முடிவில், 1990-2008 காலகட்டத்தில், இந்தியாவிற்கு வெளியே சட்டவிரோதமாக இருக்கும் தொகை தற்போதைய மதிப்பின்படி ரூ. 9,41,837 கோடியாக இருக்கிறது. கணக்கில் வராத வருமானமாக கணக்கிடப்படும் மொத்த தொகையில் இருந்து, சராசரியாக 10 சதவீதம் இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

  என்பிஎஃப்பி ஆய்வின்படி, வெளிநாட்டில் இருக்கும் கணக்கில் வராத தொகையின் மதிப்பு, ஜிடிபியில் இருந்து 0.2 சதவீதம் முதல் 7.4 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

  இந்த மூன்று நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் மூலம், வெளிநாடுகளில் இருக்கும் கணக்கில் வராத சொத்துகளின் மதிப்பு முற்றிலுமாக வேறுபடுகிறது. இந்த மூன்று ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, சராசரியான ஒரு மதிப்பீட்டுக்கு வர முடியவில்லை என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கருதுகிறார்.  

  எனவே, வெளிநாடுகளில் இருக்கும் கணக்கில் வராத சொத்துகளின் மதிப்பை இந்தியா போன்ற நாட்டில் கணக்கிடுவது கடினம் என்று நாடாளுமன்றக் குழு தெரிவிக்கிறது. 

  அதேசமயம், இதுதொடர்பாக ஒரு சில நிபுணர்கள் மற்றும் சாட்சியங்களிடம் மேற்கொள்ள வேண்டிய விசாரணை நிலுவையில் இருப்பதால், அதற்கு முன் ஒரு முடிவுக்கு வர முடியாது. அதனால், இது முதற்கட்ட அறிக்கையாக பார்க்கப்படுகிறது என்றும் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai