ஜவுளித் துறை: ஏற்றுமதியை அதிகரிக்க என்ன செய்யலாம்? - மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்களின் பரிந்துரைகள்

செயற்கை பஞ்சின் விலையானது மூலப் பொருள் நிலையிலேயே அதிகமாக இருப்பதால், அதனை பயன்படுத்தி ஆடை தயாரிக்கும் வியத்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடிவதில்லை.
ஜவுளித் துறை: ஏற்றுமதியை அதிகரிக்க என்ன செய்யலாம்? - மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்களின் பரிந்துரைகள்


செயற்கை பஞ்சின் விலையானது மூலப் பொருள் நிலையிலேயே அதிகமாக இருப்பதால், அதனை பயன்படுத்தி ஆடை தயாரிக்கும் வியத்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடிவதில்லை.


போட்டி நாடுகளின் கடுமையான சவால்களுக்கு இடையே இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதி சுணக்கத்திலேயே உள்ளது. இதை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வது எப்படி என்பது தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஜவுளித் துறை நிறுவனம் ஆய்வு நடத்தி, பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்களிப்பு சுமார் 14 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடி கொண்டதாக மாற்றுவதற்கு எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பான செயல் திட்டத்தை மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சகம் உருவாக்கி வருகிறது. ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கும் உதவிக்கூடிய துறைகளில் ஒன்றான ஜவுளித் துறையில், ஏற்றுமதி மந்த நிலையில் உள்ளது கவலை அளிப்பதாக மாறியுள்ளது.

கடந்த 2017-18ஆம் ஆண்டில் 586.78 கோடி டாலராக இருந்த பருத்தி ஆடைகள் ஏற்றுமதி, 2018-19 இல் 584.90 கோடி டாலராக குறைந்துள்ளது. அதேபோல செயற்கை இழை ஆடைகள் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 254.69 கோடி டாலராக இருந்த நிலையில், தற்போது 212.17 கோடி டாலராக குறைந்துள்ளது. இது ஏறத்தாழ 16 சதவீதம் சரிவாகும். இதர வகை ஆடைகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 191.41 கோடி டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு 189.53 கோடி டாலராக குறைந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் முன்னோக்கிய பயணத்துக்கு ஜவுளித் துறை தடைக்கல்லாக இருந்திடக் கூடாது என்ற எண்ணத்தில், கோவையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் அமைப்பான இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு, ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டது. 

அதன்படி, அந்தக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள, ஜவுளி உற்பத்தித் தொடரின் பல்வேறு நிலைகளில் தொடர்புடைய 320 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ஜவுளித் துறையின் ஏற்றுமதி வளர்ச்சி அடையாததற்கு சில காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதில் முதல் காரணமாக இருப்பது உற்பத்திச் செலவுதான். உள்நாட்டில் ஜவுளியை உற்பத்தி செய்வதற்கும் போட்டி நாடுகளில் உற்பத்தி செய்வதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் உற்பத்தி செலவு உயர்ந்து வரும் நிலையில், மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் வங்கதேசம், வியத்நாம், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதித் துறை வெறும் 3, 4 நாடுகள் அல்லது பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்திய ஆயத்த ஆடை உற்பத்தித் துறையின் உற்பத்தித் திறன் முன்னேறவில்லை. ஒப்பீட்டளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தித் திறனில் நாம் பின்தங்கியிருக்கிறோம். ஆள் பற்றாக்குறையும் கடுமையாக உயர்ந்துள்ளது. செயற்கைப் பஞ்சின் விலையானது மூலப் பொருள் நிலையிலேயே அதிகமாக இருப்பதால், அதனைப் பயன்படுத்தி ஆடை தயாரிக்கும் வியத்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடிவதில்லை.

சர்வதேச சந்தையில் செயற்கைப் பஞ்சும், இயற்கைப் பஞ்சும் கலந்த ஆடைகளுக்கே அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், நாம் வெறும் பருத்தி ஆடைகளைத் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பெரிய அளவிலான சந்தையை இழக்கிறோம். ஆனால் இதை சரி செய்ய நாடு தழுவிய அளவில் எந்த ஒரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று 320 ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் கவலை தெரிவித்துள்ளன.

அதேநேரம், குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்பை வழங்குவதாக இருப்பதும், வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான காரணியாக இருப்பதுமான ஜவுளித் துறையை சீரமைத்து ஏற்றுமதியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என்பதால், அதற்கான பரிந்துரைகளும் அந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:

 ஜவுளித் துறை சீரமைப்பு, ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, ஜவுளித் தொழில் முனைவோர் தரப்பில் இதுபோன்ற பிரம்மாண்டமான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த ஆய்வின் முடிவில் அரசுக்கு சில பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும் விடுத்திருக்கிறோம்.

 அதன்படி, மத்திய அரசு ஜவுளித் துறை ஏற்றுமதி வளர்ச்சிக்காக ஒரு வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு மாநில வாரியான ஜவுளி உற்பத்தி சங்கங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு ஏற்றுமதி வளர்ச்சிக்கான குறுகிய, மத்திய கால தீர்வைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். 

 தமிழகத்தைப் பொருத்தவரை கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பெரிய ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி மையங்கள் இருப்பதால் ஒரு இணைச் செயலர் அளவிலான அதிகாரி, மத்திய ஜவுளி அமைச்சகத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்பகுதிக்கு வந்து, அவரது தலைமையில் ஒரு வழிகாட்டும் குழுவை அமைத்து, வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை அளிப்பதுடன், உள்ளூரில் நிலவும் பிரச்னைகளுக்கும் தீர்வு காண உதவ வேண்டும்.

ஒட்டுமொத்த ஜவுளி மூலப் பொருள்களுக்கும் ஒரே மாதிரியான குறைவான ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் கொண்டு வருவதன் மூலம் இந்திய ஜவுளித் துறை, மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியும். புதிய பருத்தி தொழில்நுட்பக் கொள்கையை அறிவித்து, ஒரு ஹெக்டேரில் ஆயிரம் கிலோ பருத்தி விளைவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். உலகில் உள்ள பல நாடுகள் ஆயிரம் கிலோ உற்பத்தியைத் தாண்டிவிட்டன.

இதன் மூலம் இந்திய ஜவுளி உற்பத்தித் துறைக்கு மிகுதியான மூலப் பொருள்கள் கிடைப்பதுடன் விவசாயிகளுக்கும் வருமானம் இரட்டிப்பாகும். மேலும் தற்போதுள்ள அதிரடி ஏற்ற, இறக்கங்கள் பருத்தி விலையில் ஏற்படாது. பெரிய அளவிலான ஆயத்த ஆடை நிறுவனங்கள் அமைக்க சிறப்பு உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும். சிறிய, நடுத்தர ஜவுளி ஏற்றுமதியாளர்களை புதிய நாடுகளின் சந்தைகளுக்கு மார்க்கெட்டிங் செய்ய அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் தனி அலுவலரை நியமித்து உதவி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பல ஜவுளித் தயாரிப்பு நிறுவனங்கள் பசுமை முறையில் ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தயாரிப்பு முயற்சிகளை "பிராண்ட்' செய்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.

இந்தியா - யூரேசியா ஒப்பந்தம், பிற வர்த்தக ஒப்பந்தங்களை விரைந்து முடிக்க வேண்டும். அமெரிக்கா, சீனாவின் வர்த்தகப் போரை பயன்படுத்தி அமெரிக்க சந்தையைக் கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளலாம். 

ஏனெனில் அமெரிக்காவுக்கு சீனாவின் ஏற்றுமதி 4,001 கோடி டாலர். அதேநேரம் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 767 கோடி டாலர் மட்டுமே. துறையில் தற்போது நிலவும் சவால்களுக்கு தீர்வு காணும் வரையிலும் ஜவுளி ஏற்றுமதிக்கு வழங்கப்படும் ஏற்றுமதி ஊக்கத் தொகைகளைத் தொடர வேண்டும். இது தற்போது இருக்கும் வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். இந்த கோரிக்கைகளை மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். ஏற்றுமதியையும், அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com