
தனியார் துறையைச் சேர்ந்த பெடரல் வங்கி லாபம் மார்ச் காலாண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
வட்டி வருமானம் அதிகரிப்பு, வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு பெருமளவு குறைந்தது ஆகிய காரணங்களால் பெடரல் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.381.51 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.144.99 கோடியுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகமாகும்.
வங்கியின் மொத்த வருவாய் ரூ.2,682 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,444 கோடியானது.
வாராக் கடன்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.371.53 கோடியிலிருந்து பாதியாக குறைந்து ரூ.177.76 கோடியாக இருந்தது.
வட்டி வருவாய் ரூ.1,951 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.2,413 கோடியானது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.878.85 கோடியிலிருந்து 41.5 சதவீதம் அதிகரித்து ரூ.1,243.89 கோடியாக இருந்தது என மும்பை பங்குச் சந்தையிடம் பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.