
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவாக சரிந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது. அதன்படி, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான மொத்த வசூல் ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ. 98.202 ஆக சரிந்துள்ளது. இதுவே கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.02 லட்சம் கோடியாக காணப்பட்டது. எனவே, பொருளாதார மந்த நிலை நிலவி வருவதை குறிப்பிடும் மற்றொரு எடுத்துக்காட்டாக இந்த ஜிஎஸ்டி வசூல் சரிவு அமைந்துள்ளது.
இருந்தபோதிலும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 93.960 லட்சம் கோடியே ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை ஒப்பிடுகையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் நிகழாண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 4.5 சதவீதம் அதிகமாகவே உள்ளது.
நிகழாண்டில் ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவாக ஜிஎஸ்டி வசூல் காணப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜூன் மாதம் ரூ. 99.939 கோடியாக ஜிஎஸ்டி வசூல் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.