மோட்டார் வாகன விற்பனையில் கடும் வீழ்ச்சி

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகன  விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மோட்டார் வாகன விற்பனையில் கடும் வீழ்ச்சி


பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகன  விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நாட்டின் பொருளாதார மந்த நிலை பல்வேறு துறைகளின் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகன துறை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துறையின் வரலாற்றிலேயே மிக மோசமான அளவில் வாகன விற்பனை  பாதிப்புக்குள்ளானது தற்போதுதான் தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருகின்றன. 
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் பல நிறுவனங்களின் விற்பனை இரட்டை இலக்க அளவுக்கு சரிந்துள்ளதாக வெளியான புள்ளிவிவரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மோட்டார் வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 33 சதவீதம் சரிந்து 1,06,413-ஆனது. உள்நாட்டு விற்பனை 34.3 சதவீதம் குறைந்து 97,061-ஆனது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 1,47,700-ஆக காணப்பட்டது. ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் கார் விற்பனை 23.9 சதவீதம் குறைந்து 54,274-ஆக இருந்தது. கடந்தாண்டு ஆகஸ்டில் இவற்றின் விற்பனை  71,364-ஆக காணப்பட்டது.
உள்நாட்டைச் சேர்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 48,324 என்ற எண்ணிக்கையிலிருந்து சரிந்து 36,085-ஆகியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் விற்பனை 26 சதவீதம் குறைந்து 33,564-ஆக இருந்தது. கடந்தாண்டு ஆகஸ்டில் விற்பனை 45,373-ஆக காணப்பட்டது.
பயணிகள் வாகன பிரிவில் விற்பனை 32 சதவீதம் குறைந்து 13,507-ஆகவும், வர்த்தக வாகன பிரிவில் விற்பனை 28 சதவீதம் சரிந்து 14,684-ஆகவும் இருந்தன. 
அதேபோன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனையும் 58 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (பயணிகள் வாகன வர்த்தகப் பிரிவு) மயங்க் பரீக் கூறுகையில், சந்தை தொடர்ந்து சவாலானதாகவே உள்ளது. ஆனாலும் நிறுவனம் தற்போது சில்லறை விற்பனையை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தந்து செயல்பட்டு வருகிறது என்றார்.
இந்த நிறுவனங்களைப் போன்று, வாடிக்கையாளர் ஆதரவின்மையால் ஹோண்டா கார் உள்நாட்டு சந்தை விற்பனையும் 17,020 என்ற எண்ணிக்கையிலிருந்து 8,291-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 16.58 சதவீதம் சரிந்து 38,205-ஆகவும், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் விற்பனை 11,544-ஆகவும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com