
இந்தியாவின் நறுமணப்பொருள்களில் இஞ்சி மற்றும் ஏலக்காய்க்கு சா்வதேச நாடுகளின் சந்தைகளில் வரவேற்பு பெருகியுள்ளது
இந்தியாவின் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 10 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இதுகுறித்து வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் நறுமணப் பொருள்களுக்கு வளா்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வரவேற்பு அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, 2019-20 இல் நறுமணப் பொருள்கள் ரூ.28,100 கோடி (370 கோடி டாலா்) மதிப்புக்கு ஏற்றுமதியானது. இது, 2018-19 நிதியாண்டின் ஏற்றுமதி அளவான 332 கோடி டாலரைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும் என வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வா்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவா் மோஹித் சிங்லா இதுகுறித்து மேலும் கூறியதாவது:
நறுமணப்பொருள்கள் சிறப்பான அளவில் ஏற்றம் கண்டதற்கு இஞ்சி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விலை முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது. சா்வதேச அளவில் இவைகளின் ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வங்கதேசத்துக்கான இஞ்சி ஏற்றுமதியானது 47 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி 1.8 மடங்கு அதிகரித்து 3.22 கோடி டாலராக இருந்தது. மொராக்கோ நாட்டுக்கான ஏற்றுமதி 20 லட்சம் டாலரிலிருந்து 1.3 கோடி டாலராக காணப்பட்டது.
நறுமணப் பொருள்களின் ஏற்றுமதியை உலக நாடுகளுக்கு மேலும் அதிகரிப்பதற்கான திறன் இந்தியாவிடம் அபரிமிதமாகவே உள்ளது.
குறிப்பாக, மிளகாய், புதினா, சீரகம், நறுமண எண்ணெய், கறிவேப்பிலைப் பொடி, மிளகு, கொத்தமல்லி, பெருஞ்சீரகம், பூண்டு, வெந்தயம், ஜாதிக்காய் மற்றும் செலரி ஆகியவற்றின் ஏற்றுமதியை கணிசமான அளவில் அதிகரிக்க முடியும்.
கடந்த நிதியாண்டில் கறிவேப்பிலைப் பொடி/பசை, நறுமண எண்ணெய்கள், ஓலியேரெசின் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டில் மிகவும் சிறப்பாக இருந்தது.
2018-19 நிதியாண்டில் மொத்தம் 11,00,250 டன் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, 2017-18 இல் 10,28,060 டன்னாக காணப்பட்டது.
அமெரிக்கா, சீனா, வியத்நாம், தாய்லாந்து, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் ஜொ்மனி ஆகிய நாடுகளுக்கான நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் மிகவும் சூடுபிடித்து காணப்பட்டது என்றாா் அவா்.
2019-20 நிதியாண்டில் இதர வேளாண் பொருள்கள் ஏற்றுமதியும் சாதகமான வளா்ச்சியை பதிவு செய்திருந்தது. அதன்படி, எண்ணெய் வித்துகள் ஏற்றுமதியானது 13.8 சதவீதம் அதிகரித்து 132 கோடி டாலரை எட்டியது.
இருப்பினும், தேயிலை, காபி, அரிசி, புகையிலை, முந்திரி, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி வளா்ச்சி கடந்த நிதியாண்டில் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...