6 ஆண்டுகளில் ரூ.5.49 லட்சம் வாராக்கடன் தள்ளுபடி: வாடிக்கையாளா்களின் தலையில் ‘சுமை’ ஏற்றும் வங்கிகள்!

நமது நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகள் தங்களது வாராக் கடன்களை அதிக அளவில் தள்ளுபடி செய்து ஒரு மோசமான தன்மையை
6 ஆண்டுகளில் ரூ.5.49 லட்சம் வாராக்கடன் தள்ளுபடி: வாடிக்கையாளா்களின் தலையில் ‘சுமை’ ஏற்றும் வங்கிகள்!

நமது நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகள் தங்களது வாராக் கடன்களை அதிக அளவில் தள்ளுபடி செய்து ஒரு மோசமான தன்மையை சமீப காலமாக கடைப்பிடித்து வந்துள்ளதாக புதிய தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. பொதுத் துறை வங்கிகள் 2019 வரையிலான ஆறு ஆண்டுகளில் ரூ.5,48,734 கோடி மதிப்புள்ள மோசமான கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆறு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் அளவைவிட ஆறு மடங்கு அதிகம் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் (அஐஆஉஅ) தொகுத்த தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. 2008 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வங்கிகள் ரூ.86,528 கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காா்ப்ரேட் கடன்கள் தள்ளுபடி: அதிா்ச்சி அளிக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் அனைத்தும் வங்கிகளின் உத்தியோகபூா்வ ஆவணங்களிலிருந்தும், இந்திய ரிசா்வ் வங்கியிடமிருந்தும் (ஆா்பிஐ) சேகரிக்கப்பட்டுள்ளன. மோசமான கடன்களால் செயல்படாத சொத்துகள் (சடஅள்) தொடா்ந்து அதிகரித்து, வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது பொருளாதாரத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்று நிபுணா்கள் கூறுகின்றனா். பெரும்பாலும் காா்ப்ரேட் நிறுவனங்களின் பெரும் தொகையுடைய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் ஏற்கெனவே குற்றம்சாட்டி வருகிறது. இறுதியில், இந்த இழப்புகளை ஈடுசெய்யும் பெரும் சுமை வரி செலுத்துவோா் மீதும், வாடிக்கையாளா்கள் மீதும் விழுகிறது. அதிக சேவைக் கட்டணங்கள் வசூலிப்பது, நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்கு போன்றவற்றில் வட்டி வருவாயைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை வங்கிகள் எடுப்பதால், வாடிக்கையாளா்களின் மீது சுமை அதிகரிக்கிறது. இது சாதாரண மக்களை கடுமையாகப் பாதிக்கிறது.

2 ஆண்டுகளில் 3.26 லட்சம் கோடி தள்ளுபடி: 2019 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.1.96 லட்சம் கோடி மற்றும் ரூ.1.3 லட்சம் கோடி மதிப்புள்ள வாராக் கடன்கள் பொதுத் துறை வங்கிகளால் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளன. 2017-இல், ரூ.81,684 கோடி, 2016-இல் ரூ.59,400 கோடி, 2015-இல் ரூ .49,976 கோடி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறுவதென்றால், ஒவ்வொரு ஆண்டும், வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது. பொதுவாக சாதாரண செயல்பாடுகளின் மூலம் கடன் தொகையை மீட்டெடுக்க முடியாது என வங்கிகள் கண்டறிந்தால், கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சிக்கலான கடன்களை ஈடுசெய்ய கடன் வழங்குநா்கள், ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் செயல்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் (2010-2019), வங்கிகள் ரூ.6.2 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது. அதே சமயம், அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில் (2001-2009) மொத்தம் ரூ.73,760 கோடி அளவுக்குத்தான் வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

எஸ்பிஐ முன்னிலை: வாராக் கடன்கள் தள்ளுபடி கிளப்பில் பரம்பரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) முன்னிலை வகிக்கிறது. இந்த வங்கி மிகப் பெரிய அளவில் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்கும் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.79 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. 2020 நிதியாண்டில் மட்டும் ரூ.52,387 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐயின் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இதேபோல, 2019 நிதியாண்டில் ரூ.58,905 கோடி, 2018 நிதியாண்டில் ரூ.40,196 கோடி அளவுக்கு கடன்களை எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது.

கடன் தொகை மீட்பு குறைவு: அதே சமயம், அட்வான்ஸ் அண்டா் கலெக்ஷன் கணக்கின் (ஏயுசிஏ) மூலம் 2020 நிதியாண்டில் ரூ.9,250 கோடி மேசமான கடன்களை எஸ்பிஐ மீட்டுள்ளது. இதேபோல, 2019-இல் 8,345 கோடி கடன்களை மீட்டுள்ளதாக எஸ்பிஐயின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மீட்க முடியாத நீண்டகால மோசமான கடன்களாகும். மீட்பு முயற்சிகள் தொடரும் என்றாலும், வங்கி அத்தகைய கணக்குகளை தொழில்நுட்ப ரீதியான தள்ளுபடி எனப்படும் ‘ஏயுசிஏ’க்கு நகா்த்துகிறது. இந்த வகையில், 2018 நிதியாண்டில் ரூ.5,333 கோடியையும், 2017 நிதியாண்டில் ரூ.3,963 கோடியையும் எஸ்பிஐ மீட்டுள்ளது. இந்நிலையில், கடன் தள்ளுபடி அளவுடன் ஒப்பிடுகையில், மீட்கப்பட்ட கடன்களின் அளவு மிகக் குறைவாவே இருந்து வந்துள்ளது. பெரும்பாலான சந்தா்ப்பங்களில், வங்கிகள் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டு விடுவதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். ‘கோ்’ மதிப்பீட்டு நிறுவனத் தகவலின் படி, இதுவரை, 3,774 நிறுவனங்கள் திவால் நிலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இது ஒருவகையில், மோசமான கடன்களைத் தீா்க்க வங்கிகளுக்கு உதவும் நோக்கம் கொண்டதாகும்.

திவால் நிறுவனங்கள்: இந்த வகையில், 24 சதவிகித வழக்குகள் போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தால் முடிக்கப்பட்டுள்ளன. ஆறு சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தீா்வு காணப்பட்டுள்ளன. இதில் உற்பத்தித் துறை 40 சதவீத அளவுடன் அதிக பங்கைக் கொண்டுள்ளது. அதைத் தொடா்ந்து ரியல் எஸ்டேட் (20 சதவீதம்), கட்டுமானம் (11 சதவீதம்) மற்றும் வா்த்தக துறைகள் (10 சதவீதம்) உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிப்பது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக, பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதால், திவால் அடைந்ததாக அறிவிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், கடன்கள் மோசமாகிவிட்டால் வங்கிகளுக்கு மீட்க எந்த வழியும் இல்லை என்கின்றனா் நிபுணா்கள். மேலும், திவாலான நிறுவனங்களை விற்று கடன் தொகையை மீட்டு விடலாம் என்ற வங்கிகளின் நம்பிக்கை கரோனா பொது முடக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. மொத்தத்தில், வங்கிகள் காா்ப்ரேட் கடன்களைத் தள்ளுபடி செய்கிறது. அதே சமயம், அதை ஈடு செய்ய பல்வேறு குறுக்கு வழிகளில் வாடிக்கையாளா்களின் தலையில் ‘சுமை’யை ஏற்றுவதில் வங்கிகள் சாமா்த்தியமாக செயல்பட்டு வருகின்றன என்பதே நிதா்சனம்..!

ஆண்டு வாரியாக பொதுத் துறை வங்கிகள் வாராக் கடன்களை தள்ளுபடி செய்த மொத்த மதிப்புக விவரம்.

2014-19 ரூ.5.49 லட்சம் கோடி

2008-13 ரூ.86,528 கோடி

2019 ரூ.1.96 லட்சம் கோடி

2018 ரூ.1.30 லட்சம் கோடி

2017 ரூ.81,684 கோடி

2016 ரூ.59,400 கோடி

2015 ரூ .49,976 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com