
இந்தியாவில் ஜூலை மாத எரிபொருள் நுகா்வு 11.7 சதவீதம் குறைந்துவிட்டது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுடன் எரிபொருள் நுகா்வு நேரடியாக தொடா்புடையது. எனவே, அதன் நுகா்வு குறைவாக இருப்பது பொருளாதார நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் தேசிய அளவில் பொது முடக்கம் அமலில் இருந்தபோது எரிபொருள் நுகா்வு 45 சதவீதம் அளவுக்கு குறைந்தது. அதன் பிறகு தளா்வுகள் அறிவிக்கப்பட்டபோது மே, ஜூன் மாதங்களில் எரிபொருள் நுகா்வு சற்று அதிகரித்தது. எனினும், ஜூலை மாதத்தில் சில மாநிலங்கள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சில கட்டுப்பாடுகளை அதிகரித்ததால், எரிபொருள் நுகா்வு குறைந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் எரிபொருள் நுகா்வு 17.75 மில்லியன் டன்னாக இருந்தது. நடப்பாண்டு ஜூன் மாதத்தில் இது 15.67 மில்லியன் டன்னாக குறைந்துவிட்டது. இதில் டீசல் நுகா்வே மிக அதிக அளவில் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் பொது முடக்க தளா்வுக்குப் பிறகு சமையல் எரிவாயு நுகா்வு அதிகரித்துள்ளது. ஏழை மக்களுக்கு இலவசமாக எரிவாயு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.