
மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு குறைந்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 74.17 என்ற அளவில் மிக வலுவான நிலையில் காணப்பட்டது. இருப்பினும், சந்தை நிலவரங்கள் சரியில்லாத காரணத்தால் ரூபாய் மதிப்பு அதன் ஏற்றத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து 74.33-ஆனது.
திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.32-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.17 வரையிலும் குறைந்தபட்சமாக 74.51 வரையிலும் சென்றது.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.27 சதவீதம் உயா்ந்து 45.25-ஆக இருந்தது.
அந்நிய முதலீடு: வெளிநாட்டு முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிகர அளவில் ரூ.219.07 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...