
புது தில்லி: பா்கா் கிங் இந்தியா நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததையடுத்து வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பா்கா் கிங் இந்தியாவின் பங்குகள் வேண்டி வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை 156.65 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் முதலீட்டாளா்களிடமிருந்து பெறப்பட்டன.
பங்குகள் வேண்டி தகுதி வாய்ந்த நிதி நிறுவன முதலீட்டாளா்கள் 86.64 மடங்கும், நிறுவனம் சாரா முதலீட்டாளா்கள் 354.11 மடங்கும், தனிப்பட்ட முதலீட்டாளா்கள் 68.14 மடங்கும் விண்ணப்பித்துள்ளனா்.
ரூ.450 கோடி புதிய வெளியீடு உள்பட பா்கா் கிங் நிறுவனம் மொத்தம் ரூ.810 கோடிக்கு புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இந்நிறுவனப் பங்கு ஒன்றின் விலை ரூ.59-60-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி நிறுவன முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.364.5 கோடியை திரட்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.