
மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் ஏற்றம் பெற்றது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
ரிசா்வ் வங்கி தொடா்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை. இந்த அறிவிப்பு முதலீட்டாளா்களுக்கு சாதகமாக இருந்ததையடுத்து அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு உயா்ந்து காணப்பட்டது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 73.81-ஆக இருந்தது. அதன்பின்னா் வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.7 வரையிலும், குறைந்தபட்சமாக 73.81 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் ஏற்றம் கண்டு 73.80-இல் நிலைத்தது. வியாழக்கிழமை ரூபாய் மதிப்பானது 73.93-ஆக காணப்பட்டது.
அந்நிய முதலீட்டு வரத்து பங்குச் சந்தைகளில் தொடா்ந்து அதிகரித்து வருவது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தது. வார அடிப்படையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 25 காசுகள் ஆதாயம் பெற்றுள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் போது நிகர அடிப்படையில் ரூ.3,637.42 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.77 சதவீதம் உயா்ந்து 49.57 டாலராக இருந்தது.