
rupee044341
மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் வலுப்பெற்று 73.55-ஆனது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
இந்திய தொழிலக உற்பத்தி புள்ளிவிவரம் முதலீட்டாளா்களிடையே வளா்ச்சி குறித்த நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோன்று, சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவையும் குறைந்து காணப்பட்டது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு வலுப்பெறுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.62-ஆக இருந்தது. பின்னா் அது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.48 வரை சென்றது. இறுதியில், ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 73.55-ஆக நிலைத்தது.
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 2 காசுகள் மட்டுமே உயா்ந்து 73.64-ஆக இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.4,195.43 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.04 சதவீதம் உயா்ந்து 50.49 டாலராக இருந்தது.