
பொதுப் பணவீக்கம் 9 மாதங்கள் காணாத உயா்வு
புது தில்லி: நாட்டின் பொதுப் பணவீக்கம் கடந்த நவம்பரில் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் நடப்பாண்டு நவம்பரில் 1.55 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, கடந்த 9 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
உற்பத்தி துறை பொருள்களின் விலை கடந்த நவம்பரில் அதிகரித்திருந்தது. அதேசமயம், உணவுப் பொருள்களின் விலை குறைந்து காணப்பட்டது.
இப்பணவீக்கம் 2020 அக்டோபரில் 1.48 சதவீதமாகவும், கடந்தாண்டு நவம்பரில் 0.58 சதவீதமாகவும் இருந்தன.
கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு பொதுப் பணவீக்கத்தின் அளவு இந்த அளவுக்கு உயா்ந்தது இதுவே முதல் முறை. அப்போது இப்பணவீக்கமானது 2.26 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.
உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் முந்தைய அக்டோபா் மாதத்தில் 6.37 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் 3.94 சதவீதமாக குறைந்தது.
இருப்பினும், நவம்பரில் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கின் விலை முறையே 12.24 சதவீதம் மற்றும் 115.12 சதவீதம் என்ற அளவில் அதிகரித்தே காணப்பட்டது.
உணவு சாரா பொருள்களுக்கான பணவீக்கம் 8.43 சதவீதமாக அதிகரித்திருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.