மீண்டும் புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை  பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சத்தைப்  பதிவு செய்தது.
மீண்டும் புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி
Updated on
2 min read

புது தில்லி:  இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை  பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சத்தைப்  பதிவு செய்தது. பின்னர்,  ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிந்தது.  இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 154.45  புள்ளிகள் உயர்ந்து 46,253.46- இல் நிலைபெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு  வலுப்பெற்றது மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் அந்நிய முதலீடுகள் ஆகியவை சந்தைக்கு ஊக்கமளித்தன. இதைத் தொடர்ந்து, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் மீண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சந்தை மதிப்பு ரூ.183.57 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,216 பங்குகளில் 1,921  பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,117 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 178 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 301 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 534  பங்குகள் வெகுவாக உயர்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தது.  சந்தை மூலதன மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.183.57  லட்சம் கோடியாக இருந்தது.

மீண்டும் புதிய உச்சம்:  சென்செக்ஸ் காலையில்  185.69 புள்ளிகள் உயர்ந்து 46,284.70- இல் தொடங்கியது. அதிகபட்சமாக 46,373.30 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.  பின்னர், ஏற்றம், இறக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து,  45,951.53  வரை கீழே சென்ற சென்செக்ஸ்,  இறுதியில் 154.45  புள்ளிகள் (0.30 சதவீதம்) உயர்ந்து 46,253.46- இல் நிலைபெற்றது.

ஓஎன்ஜிசி  முன்னிலை:  சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 19 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 11  பங்குகள் சரிவைச் சந்தித்தன.   இதில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி  4.91 சதவீதம், எல் அண்ட் டி 4.61 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக  என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா, ஹெச்சிஎல் டெக், டைட்டன்,  ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 1 முதல் 2. 20 சதவீதம் வரை உயர்ந்தன.  டிசிஎஸ், எச்டிஎஃப்சி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

எம் அண்ட் எம் வீழ்ச்சி: அதேசமயம்,  எம் அண்ட் எம் 1.98 சதவீதம்  குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், மாருதி சுஸூகி உள்ளிட்டவையும் 0.50 சதவீதம் முதல் 1.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,130 பங்குகள் ஆதாயம் பெற்றன. 621 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 44.30 புள்ளிகள் (0.33 சதவீதம்) உயர்ந்து 13,558.15-  இல் நிலைபெற்றது. அதிகபட்சமாக 13,597.50 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.  நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 31 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.  நிஃப்டி ஆட்டோ, ரியால்ட்டி குறியீடுகள் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.  மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com