சரியும் ஏற்றுமதி: சிக்கலில் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி சரிவைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி அளவை எட்டுவதில் கூட அந்தத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சரியும் ஏற்றுமதி: சிக்கலில் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி சரிவைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி அளவை எட்டுவதில் கூட அந்தத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து கடந்த 10 மாதங்களில் ரூ.21,040 கோடிக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த நிதியாண்டுக்குள் கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடியாக இருந்த ஏற்றுமதி அளவை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் நேரடியாக 5 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறியதும், பெரியதுமாக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் உள்ளன.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், திருப்பூரில் இருந்து ஏறக்குறைய சரிபாதி அளவு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல சர்வதேச அளவு பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு மட்டும் 3.5 சதவீதமாகும். 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பின்னலாடைத் தொழில் சற்று தொய்வை சந்தித்து வருகிறது. இதற்கு ஜி.எஸ்.டி. திரும்பப் பெறுவது, பருத்தி விலை சீராக இல்லாதது, தொழிலாளர்கள் பற்றாக்குறை, டிராபேக் குறைவு, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து சலுகைகளைத் திரும்பப் பெறுவதில் தாமதம் போன்ற பல்வேறு காரணிகளைத் தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். 
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 1,100 பேருக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. டிராபேக் மற்றும் சலுகைகளின் மூலம் வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை நிறுத்திவைத்துள்ளதால் பின்னலாடைத் தொழில் சிக்கலில் தவித்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 
எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவையே சந்தித்து வருகிறது.
ஏற்கெனவே திருப்பூரில் உள்நாட்டு உற்பத்தியும் சரிவை சந்தித்து வரும் நிலையில் தற்போது ஏற்றுமதியும் சரிவடையத் தொடங்கியுள்ளது தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 4 சதவீதம் சரிவு: மத்திய அரசின் டிஜிசிஐ அன்ட் எஸ் (directorate general of commercial intelligence and statistics) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமானது கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.20 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2019 ஜனவரியில் ரூ. 10,801.57 கோடியாக இருந்த ஏற்றுமதியானது, 2020 ஜனவரியில் ரூ. 10,347.66 கோடியாக சரிவடைந்துள்ளது. எம்இஐஎஸ் சலுகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் தொழில் துறையினர். 
10 மாதங்களில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி: கடந்த 2015-16இல் நாட்டின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதி ரூ.50,150 கோடியாக இருந்தபோது திருப்பூரின் பங்கு ரூ.23,050 கோடியாகவும், 2016-17இல் ரூ.55,150 கோடியாக இருந்தபோது திருப்பூரின் பங்கு ரூ.26 ஆயிரம் கோடியாகவும் இருந்தது. 
ஆனால் 2017-18இல் ரூ.51,526 கோடியாக இருந்தபோது திருப்பூரின் பங்கு ரூ.24 ஆயிரம் கோடியாக இருந்தது. 2018-19இல் ரூ.54,650 கோடியாக இருந்தபோது திருப்பூரின் பங்கு ரூ.26 ஆயிரம் கோடியாக இருந்தது. 
2019-20இல் ஜனவரி வரையில் 10 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி ரூ.45,745 கோடியாகவும், திருப்பூரின் பங்கு ரூ.21,040 கோடியாகவும் உள்ளது. 
எனவே, கடந்த ஆண்டு ஏற்றுமதியான இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஏற்றுமதியை அதிகரிக்க பி2பி இணையதள சேவை: இதனிடையே ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) சார்பில் ஏற்றுமதியை அதிகரிக்க வர்த்தகர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பிசினஸ் 2 பிசினஸ் (பி2பி) இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என்கிறார் ஏஇபிசி தலைவர் ஆ.சக்திவேல். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 
இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு வர்த்தகர்களின் ஆர்டர்களை பெற்றுத் தரும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஏஇபிசியில் உறுப்பினர்களாக உள்ள 8 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில் சுமார் 1,200 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் இதில் இணைந்துள்ளனர். இதன்மூலம் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடை தயாரிப்பாளர்கள் தனித்தனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையான ஏற்றுமதியாளர்களைத் தொடர்புகொணடு வர்த்தக விசாரணையை மேற்கொள்ளலாம். இந்த சேவையில் திருப்பூரில் இருந்து 450 ஏற்றுமதியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். 
ஏற்றுமதியாளர்களும் வர்த்தகர்கள் குறித்த தகவல்களையும் பி2பி இணையம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். பின்னலாடைகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், மற்ற நாடுகளின் போட்டியை சமாளிக்கவும் ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றார். 

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் (டீமா) எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:
இந்தியாவில் 65 சதவீத நூற்பாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. விவசாயம் நலிவடைந்த நிலையில் அரசுக்கு கை கொடுத்தது பின்னலாடைத் தொழில்தான். ஆனால் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, சலுகை, ஊக்கத் தொகைகள் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் தற்போது மிகவும் நலிவடைந்து வருகிறது. தேக்க நிலையில் உள்ள ஜவுளித் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.1,224 கோடி நிதியும் போதுமானதாக இல்லை.
எனவே இந்தத் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்ததுபோல, திருப்பூரை ஜவுளித் துறைக்கான மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.


-ஆர்.தர்மலிங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com