
மும்பை: இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து திரட்டும் கடன் அளவு கடந்த ஏப்ரல் மாதத்தில் 68.5 சதவீதம் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு ஏப்ரலில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து திரட்டிய கடன் 99.60 கோடி டாலராக இருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த கடன் அளவு 316 கோடி டாலர் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு 2020-இல் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தையிலிருந்து திரட்டிய கடன் 68.5 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
நடப்பாண்டு ஏப்ரலில் வெளிநாட்டு சந்தையிலிருந்து திரட்டப்பட்ட மொத்த கடனில் 69.60 கோடி டாலர் வெளிநாட்டு வர்த்தக கடனாக ஆட்டோமேட்டிக் வழிமுறையிலிருந்து திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளது.
எரிசக்தி துறையில் நிதி சேவைகள் வழங்கி வரும் ஆர்இசி அதிகபட்ச வெளிநாட்டு வர்த்தக கடனாக தனியாக 30 கோடி டாலரை திரட்டியுள்ளது.
அதேபோன்று ஆட்டோமேட்டிக் வழிமுறையில், சிகல் லாஜிஸ்டிக் 17.91 கோடி டாலர் கடனை வெளிநாட்டு கையகப்படுத்துதலுக்காக திரட்டிக் கொண்டுள்ளது.
கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்காக மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் 13.93 கோடி டாலரையும், அதானி இண்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல் 9.85 கோடி டாலரையும் திரட்டியுள்ளன.
இவை தவிர, புதிய திட்டங்களுக்காக வெரிட்டாஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் 4.9 கோடி டாலரையும், ஹெச்பிசிஎல்-மிட்டல் எனர்ஜி பெட்ரோலிய தயாரிப்புகளுக்காக 4 கோடி டாலரையும் திரட்டியுள்ளன.
புதிய திட்டங்கள் மற்றும் மூலதன தேவைகளுக்காக ஆட்டோமேட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் பவர் நிறுவனம் 3.27 கோடி டாலரையும், பொறியியில் சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக ஹுண்டாய் டிரான்சிஸ் இந்தியா 2.38 கோடி டாலரையும் வெளிநாட்டு கடனாக திரட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.