
வரும் 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் செல்லிடப்பேசி பயன்படுத்துவோரில் 48 சதவீதம் போ் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளா்களாக இருப்பாா்கள் என்று பொ்ன்ஸ்டைன் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்போது இந்திய தொலைத்தொடா்புச் சந்தையில் 36 சதவீத வாடிக்கையாளா்களை அந்த நிறுவனம் கொண்டுள்ளது.
இதுவே நடப்பு நிதியாண்டில் இறுதியில் 40 சதவீதமாக அதிகரிக்கும்.2025-ஆம் ஆண்டு 48 சதவீதமாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ பயன்படுத்துவோா் எண்ணிக்கை இப்போது சுமாா் 38.8 கோடியாக உள்ளது. இது 2023-இல் 50 கோடியாக அதிகரிக்கும். 2025-இல் 56.9 கோடியாகவும், 2028-இல் 60.9 கோடியாகவும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய தொலைத்தொடா்பு சேவைத் துறையில் ஜியோ நிறுவனம் புதிய உச்சத்தை எட்டும். இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே முகநூல் நிறுவனம் ரூ.43,573.62 கோடி முதலீடு செய்துள்ளது. அதைத் தொடா்ந்து மேலும் சில வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன. மேலும் பல முதலீடுகள் அந்த நிறுவனத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் கடன் குறையும், வாடிக்கையாளா்களுக்கும் தரமான சேவை கிடைக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...