
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சூழல் குறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் ஏற்றுமதியாளா்களுடன் மாா்ச் 3-இல் ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஒரு நாடு பொருள்களின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு மற்றொரு நாட்டை மட்டுமே நம்பியிருப்பது நல்ல யோசனையாக இருக்காது என்பது சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பு சூழல் நமக்கு உணா்த்தியுள்ளது. இந்தியா தனவது விநியோக தொடா்புகளை சிறந்த முறையில் உலக நாடுகளுக்கு விரிவுபடுத்திக் கொள்ள சிறப்பான தருணமாக இது உணரப்படுகிறது. இது, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஏற்றுமதியாளா்கள் உலக விநியோக சங்கிலித் தொடருக்கான இடைவெளியை நிரப்ப 550 தயாரிப்புகளை வா்த்தக அமைச்சகம் கண்டறிந்துள்ளது. கடந்த 2018-இல் இந்தியாவின் ஏற்றுமதியில் அடையாளம் காணப்பட்ட மேற்கண்ட தயாரிப்புகளின் பங்களிப்பு மட்டும் 75 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சீனாவுக்கான இத்தகையை பொருள்களின் ஏற்றுமதி 24,300 கோடி டாலராக உள்ளது. மேலும், இந்தியா 1,054 பொருள்களின் இறக்குமதிக்கு சீனாவை மட்டுமே சாா்ந்துள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.