கரோனா அச்சுறுத்தல்: முடங்கியது கரூர் ஜவுளி வர்த்தகம்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்று கரூர் ஜவுளி வர்த்தகத்தையும் விட்டுவைக்கவில்லை.
கரோனா அச்சுறுத்தல்: முடங்கியது கரூர் ஜவுளி வர்த்தகம்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்று கரூர் ஜவுளி வர்த்தகத்தையும் விட்டுவைக்கவில்லை. கரோனா அச்சம் காரணமாக கரூர் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் கரூருக்கு என்றென்றும் தனியொரு இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலை, அலங்கார குஷன்கள், மேஜை விரிப்புகள், சமையல் அறைகளுக்கு பயன்படுத்தப்படும் ஏப்ரான்கள், கால் மிதியடிகள், கையுறைகள், கைக்குட்டைகள் உள்ளிட்டவை நேர்த்தியாகவும், தரமாகவும் தயாரிக்கப்படுவதால், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, குரோஷியா போன்ற நாடுகளில் கரூர் ஜவுளிப் பொருள்களுக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஜப்பான், ஸ்வீடன், கனடா ஆகிய நாடுகளுக்கும் கரூரில் இருந்து அதிகளவில் வீட்டு உபயோக ஜவுளிகள் ஏற்றுமதியாகின்றன.
 ஆண்டுக்கு ரூ.2,500 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை இந்திய நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இந்தத் தொழில் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவலால் உலக மக்கள் பீதியடைந்திருக்கும் நிலையில், இந்த பீதி கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களையும் தொற்றியுள்ளது. காரணம், கரூரில் இருந்து அதிக அளவில் வீட்டு உபயோக ஜவுளியை கொள்முதல் செய்யும் நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, கிரீஸ், கனடா, பின்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ஜவுளி உற்பத்தியில் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்த சீனா தனது நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்து உற்பத்தி ஆலைகளையும் மூடிவிட்டது. இதை பயன்படுத்தி இந்தியா பொருளாதாரத்தில் உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வாயிலும் மூடப்பட்டுவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
 கரோனா வைரஸ் பரவலால் இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி, இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. இதனால், கரூரில் தயாராகும் வீட்டு உபயோக ஜவுளியும் ஏற்றுமதி செய்வதற்கு முடியாமல், பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் கண்டு, இந்தத் தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
 இதுதொடர்பாக கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கத்தின் ஆர். ஸ்டீபன்பாபு கூறியது:
 ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கத்தைவிட, கரூர் ஜவுளி ஏற்றுமதி அதிகரித்து காணப்படும். காரணம், ஜனவரி மாதம் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் கரூரைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் பங்கேற்போம். அங்கு அரங்குகள் அமைத்து, உற்பத்திக்கான ஆர்டர்களை அதிகளவில் பெறுவோம். இதனிடையே, நிகழாண்டு ஜெர்மனியில் கண்காட்சி நடைபெற்றபோது, சீனாவில் மட்டும்தான் கரோனா வைரஸின் தாக்கம் இருந்தது. இதன் காரணமாக, அக்கண்காட்சியில் சீன நாட்டவர்கள் பங்கேற்றபோதும், அவர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை.
 சீனாவுக்கு அடுத்தபடியாக வியாபாரிகள் அதிகம் நம்பும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்குத்தான் அந்த கண்காட்சியில் அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்தன.
 ஒரு நபருக்கு ரூ. 400 கோடி வரை ஆர்டர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், வழக்கத்தைவிட மகிழ்ச்சியில் இருந்தோம். இதனால், ஆர்டர் கிடைத்த இருமாதங்களுக்குள் எங்களது ஆர்டருக்கு ஏற்ற துணிகளை உற்பத்தி செய்து, அதில் 75 சதவீதத்துக்கும் மேல் கப்பல்களில் அனுப்பிவிட்டோம். ஆனால், இப்போது கரோனா வைரஸால் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள், வெளிநாடுகளைச் சேர்ந்த கப்பல், விமானப் போக்குவரத்தை அடியோடு துண்டித்துவிட்டதால், சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள், அந்நாடுகளின் துறைமுகத்தில்தான் நிற்கின்றன. ஆனால், அவற்றை இறக்குவதற்கு அங்கு யாரும் இல்லை. மேலும், அங்குள்ள ஜவுளி கொள்முதல் நிறுவனங்கள், சில்லறையாக ஜவுளியை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 90 சதவீதம் மூடப்பட்டு விட்டன. மேலும், வரும் திங்கள்கிழமை முதல் வங்கிகளையும் மூட அந்நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஊரடங்கு உத்தரவு போன்ற சூழ்நிலை அங்கு நிலவுவதால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் அந்த நாடுகளின் எல்லைக்குள் சென்றும், நகருக்குள் செல்ல வழியின்றி தேக்கம் கண்டுள்ளன. இதனால், கரூரில் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தற்காலிகமாக கடந்த வாரம் முதல் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளனர். உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சாய, சலவைத் தொழிலாளர்கள், நூல் உற்பத்தியாளர்கள், தையல் தொழிலாளர்கள் என ஜவுளித் தொழிலோடு சார்ந்த மற்ற தொழில்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
 ஏற்கெனவே, ஜிஎஸ்டி, பண வீக்கம், அடிக்கடி நூல்விலை உயர்வு போன்றவற்றால் ஆட்டம் கண்டிருந்த இந்தத் தொழில் தற்போது கரோனாவைல் மேலும் ஆட்டம் கண்டுள்ளது. கரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் பலி வாங்கவில்லை; தொழில்களையும், அதை சார்ந்து இருப்போரையும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. கரோனாவை நிரந்தரமாக குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, நோய்த் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தி, இந்நோய் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கரூர் ஜவுளித் தொழிலையும் காப்பாற்ற முடியும் என்றார் அவர்.
 - அ. அருள்ராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com